* அரசியல்துறை பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவிப்பு
அரசின் படுகொலை நடவடிக்கைகளை எதிர்கொண்டு, தலைவரின் தலைமையில் அணிதிரண்டு தனியரசை நிறுவுவதே தமிழர்களுக்குள்ள ஒரே வழியென விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்தார்.
சனிக்கிழமை மாமனிதர் சிவநேசனின் வீர வணக்க நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
"மாமனிதர் சிவநேசனின் இழப்பு எமது விடுதலைப் போராட்டத்திற்கும் தமிழீழ தேசத்திற்கும் ஏற்பட்ட பேரிழப்பு. இவ்வாறான இழப்புக்களின் மத்தியில் எமது விடுதலைப் போராட்டம் முழுவீச்சுடன் நகர்ந்து வந்துள்ளது.
சிவநேசனை எனக்கு 20 வருடங்களுக்கு மேலாகத் தெரியும். இவர் இளம் வயதிலிருந்து புரட்சிகர எண்ணங்களுடனும் எமது விடுதலைக்கு அர்ப்பணிப்புடனும் செயற்பட்டு வந்தார்.
கூட்டுறவு வாழ்வின் ஊடாக தேசத்திற்கு பெரும்பங்காற்றினார். பாராளுமன்றத்தினுள் எமது தேச விடுதலைக்காகக் குரல் எழுப்பியவர். போராளிகளுடனும் மக்களுடனும் இணைந்து வாழ்ந்து வந்தவர்.
புலம்பெயர் நாடுகளுக்குச் சென்று விடுதலைப் பணியாற்றியவர். எமது தலைவரின் எண்ணங்களை புரிந்துகொண்டு இரவு பகலாக உழைத்தவர். எமது விடுதலையை மிக விரைவில் பெற்றுவிடுவோம் என்ற நிலையில் ஒரு விடுதலை வீரனாக வாழ்ந்தவர்.
அரசு இவரை திட்டமிட்டுப் படுகொலை செய்துள்ளது. இவ்வாறான படுகொலைகளினால் எமது தேசம் கலங்கிய போதும், அரசின் படுகொலைகளை, நடவடிக்கைகளை எதிர்கொண்டு, எமது தலைவரின் தலைமையில் அணிதிரண்டு, தனியரசை நிறுவுவதே தமிழர்களுக்கு உள்ள ஒரே வழியாகும்".