ஐக்கிய தேசியகட்சி அரசாங்கத்தை அமைக்கும் போது மலையக மக்களுக்கென தனிபெரும் அமைச்சொன்றை உருவாக்கும் என்று அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளதாக மத்திய மாகாண சபையின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பிரதி செயலாளருமான எம்.ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் மஸ்கெலியா தேசிய தோட்ட தொழிலாளர் சங்க பணிமனையில், தோட்டகமிட்டி தலைவர்கள் ஏற்பாடு செய்திருந்த, வரவேற்பு வைபவத்தில் கலந்து கொண்டு பேசியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மாவட்டத்தலைவர் எஸ், கணேசநாதன் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் அவர் தொடர்ந்து உரையாற்றியபோது எமது தொழிலாளர்கள் எமது தொழிற்சங்கத்தின் 50 ஆண்டு பேராளர் மாநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் இருந்து முக்கியமான பதவிகளுக்கு மூன்றுபேர் தெரிவுசெய்யப்பட்டிருந்தமை பெருமைக்குரிய விடயமாகும். இது நுவரெலியா மாவட்டத்துக்கு கிடைத்த பெரும்வெற்றியாகும்.
இதன்மூலம் எமது மக்களுக்கான சேவையை தொடர்வேன் அவ்வாறு செய்ய முடியாதுவிடின் எனது பதவியிலிருந்து விலகிக்கொள்வேன்.
ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய குழு உறுப்பினராகவும், மத்திய மாகாண சபை உறுப்பினராகவும், இருந்து எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரசிங்கவின் நன்மதிப்பை பெறுவதற்கு மக்களின் செல்வாக்கே காரணமாக இருக்கின்றது.
அதேபோல் அக்கட்சியில் இணைந்து செயல்படும் தொழிற்சங்கத்தில் முக்கிய பதவியொன்றை வகிக்கும் வாய்ப்பொன்றும் கிடைத்துள்ளது. இதன் மூலம் மலையக மக்களுக்கு சிறந்த சேவை செய்ய உள்ளேன் என்று கூறினார்.