மஸ்கெலியா பொது சுகாதார வைத்திய அத்தியட்சர் பிரிவுக்கான பணிமனை கட்டிடமொன்று மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலைக்கு உட்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.
சகல வசதிகளும் கொண்ட இந்தப் பணிமனை சுமார் 40 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டிடத்தின் திறப்பு விழா விரைவில் இடம்பெறவுள்ளது.
இதேவேளை மஸ்கெலியா பொது சுகாதார வைத்திய அத்தியட்சர் பிரிவின் தற்போதைய பணிமனை டிக்கோயா கிளங்கன் மாவட்ட வைத்தியசாலைக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது.
இந்தப் பணிமனைக் கட்டிடத்தினை மஸ்கெலியா பொது சுகாதார வைத்திய அத்தியட்சர் பிரிவுக்கான விஞ்ஞான ஆய்வு கூட நிலையமாக மாற்றப்படவுள்ளது.
இந்த நிலையத்தில் சேவையாற்றும் வகையில் விஞ்ஞான ஆய்வு கூட தொழில்நுட்பவியலாளர்கள் இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் பொகவந்தலாவைப் பிரதேச தோட்ட, கிராம, நகர மக்களுக்கு பொது சுகாதார வைத்திய சேவைகளை வழங்குவதற்காக பொகவந்தலாவை பொது சுகாதார வைத்திய அத்தியட்சர் பிரிவு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்தப் பிரிவுக்கான பணிமனை தற்காலிகமாக பொகவந்தலாவை மாவட்ட வைத்தியசாலையில் இடம்பெறவுள்ளதாக சுகாதார தரப்பினர் தெரிவிக்கின்றனர்.