* ஜனாதிபதி தெரிவிப்பு
ஐக்கிய தேசியக் கட்சி தனது ஆட்சிக் காலத்தில் பயங்கரவாதிகளுக்கு நிலப் பிரதேசமொன்றை எழுதிக் கொடுத்ததன் காரணமாகவே இன்று பாரிய போராட்டமொன்றுக்கு முகம்கொடுக்க வேண்டி ஏற்பட்டிருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார்.
அலரிமாளிகையில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசும்போதே ஜனாதிபதி ராஜபக்ஷ இவ்வாறு கூறியிருக்கிறார்.
அவர் இங்கு மேலும் பேசுகையில்;
நாம் அனுபவிக்கும் அனைத்து சிறப்புரிமைகளையும் கிழக்கு அதேபோன்று வடக்கு மக்களுக்கும் வழங்குவது எமது அரசின் பொறுப்பாகும். தேர்தல் கொள்கைப் பிரகடனத்தை ஆவணமாக மட்டும் வரையறுக்காத ஒரே அரசாங்கம் எமது அரசாங்கமே. இன்று கிழக்கில் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் ஜனநாயக வேலைத்திட்டத்தை வடக்கிலும் அமுல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சகலரதும் ஒத்துழைப்புக்களுடன் முன்னெடுத்துச் செல்கிறோம்.
ஐ.தே.க.அரசாங்கம் பயங்கரவாதிகளுக்கு பூமிப் பிரதேசமொன்றை எழுதிக்கொடுத்ததன் காரணமாகவே இன்று பாரிய போராட்டத்திற்கு முகம்கொடுக்க வேண்டி ஏற்பட்டிருக்கிறது. இதன் உள்நோக்கத்தை நாம் நன்றாகப் புரிந்து வைத்திருக்கின்றோம்.
கிழக்கு மாகாணத்தை பயங்கரவாதிகளிடமிருந்து விடுவித்துக்கொள்ள எம்மால் முடிந்தது. அதேபோல் வடக்கையும் விடுத்துக்கொள்ள நாம் செயற்பட்டு வருகிறோம். பயங்கரவாதத்தை தற்போது 2 மாவட்டங்களுக்குள் மட்டும் கட்டுப்படுத்த எமக்கு முடிந்துள்ளது.
பயங்கரவாதிகளுக்கு இந்த நாட்டில் இடம் வைக்க மாட்டோமென நாம் உறுதியாகக் கூறிக்கொள்கிறோம். கிழக்கு மாகாணத்தை பயங்கரவாதிகளிடமிருந்து மீட்டு கிழக்கின் உதயம் வேலைத்திட்டத்தின் கீழ் பாரிய அபிவிருத்தி நடவடிக்கைளை மேற்கொண்டு அப்பிரதேசங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்ய எம்மால் முடிந்துள்ளது.
அத்துடன், கிழக்கு மாகாணத்தின் உள்ளூராட்சி தேர்தலின் பின்னர் மாகாணசபை தேர்தலும் அப்பகுதியில் நடத்தப்படும். 20 வருடங்களுக்குப் பின்னர் கிழக்கு மக்களுக்கு சுதந்திரமாக வாக்களிக்கும் உரிமையை வழங்க முடிந்திருக்கிறது.
சர்வகட்சி ஆலோசனைக் குழுவின் யோசனைகளை நடைமுறைப்படுத்தி கிழக்கில் மட்டுமல்லாது வடக்கிலும் அதை அமுல்படுத்தி நாட்டின் அபிவிருத்தியை முன்னெடுத்துச் செல்ல நடவடிக்கை எடுப்பதுடன், நாட்டை காட்டிக்கொடுக்காமல் நாட்டின் வளங்களைப் பாதுகாத்து வேண்டியவருக்கு நாட்டில் முதலீடுகளை செய்யக்கூடிய வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுத்து எதிர்காலத்திற்கென சுபிட்சமான நாட்டை கட்டியெழுப்புவதே எமது நோக்கம் என்று கூறியுள்ளார்.