* அமைச்சர் பந்துல கூறுகிறார்
தனியார் துறையினர் அதிகளவில் இலாபத்தைப் பெறும் நோக்கில் தன்னிச்சையாக அத்தியாவசியப் பொருட்களின் விலையை அதிகரிப்பதனாலேயே அரசாங்கம் அவற்றுக்கான விலையைக் குறைத்துள்ளது. எதிர்வரும் சில வாரங்களில் இத்தகைய அத்தியாவசியப் பொருட்களின் விலைகளில் வீழ்ச்சியைக் காண முடியுமென கூட்டுறவு சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் சேவைகள் அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.
அரச மொத்த விற்பனை நிறுவனமான "லக்-சதோஷ" மற்றும் நாடு முழுவதிலுமுள்ள "கோப் - சிற்றி சுப்பர் சொப்" விற்பனை நிலையங்களில் அத்தியாவசியப் பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்படுவதால் தனியார் துறையினரின் ஏகபோக வியாபாரம் வீழ்ச்சியடையுமெனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
100 "லக்-சதோஷ" சுப்பர் மாக்கற்றுகளும் 300 கோப்-சிற்றி விற்பனை நிலையங்களும் எதிர்வரும் புது வருடத்திற்கு முன்னதாக நாடு முழுவதும் திறந்து வைக்கப்படவுள்ளன.
குறைந்த வருமானத்தைப் பெறுபவர்கள் மற்றும் மத்திய தர வர்க்கத்தினருக்கு இந்த அத்தியாவசியப் பொருட்களின் விலைக் குறைப்பானது மிகப்பெரிய ஆறுதலைக் கொடுக்குமென்பதாலேயே அரசின் பொருளாதாரக் கொள்கைக் குழு இவ்விலைக் குறைப்பு செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது.
அரசி,பால்மா,உருளைக்கிழங்கு, வெங்காயம், பருப்பு, கடலை, உப்பு, மா, சீனி, கருவாடு போன்ற பல அத்தியாவசியப் பொருட்களை தனியார் கடைகளின் விலையை விட குறைந்த விலையில் இவ்விற்பனை நிலையங்களில் கொள்வனவு செய்ய முடியும்.
தனியார் துறையினரின் வரையறையற்ற இலாப நோக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்குடன் அதற்குச் சமமான விலைக்குறைப்பை "லக்-சதோஷ" மற்றும் கோப் - சிற்றி விற்பனை நிலையங்கள் மேற்கொள்கின்றன.
உதாரணமாக 400 கிராம் அவுஸ்திரேலிய பால்மா பைக்கற் ஒன்று லக்-சதோஷவில் 255 ரூபாவுக்கு விற்கப்படும். இது ஏனைய வகை பால்மாவை விட 15 ரூபா விலை குறைவானதாகும்.
இதுபோலவே ஏனைய பொருட்களின் விலைகளும் தனியார் கடைகளைவிட இங்கு குறைவாகவே காணப்படும். "லக்-சதோஷ" கோப் -சிற்றி வாடிக்கையாளர்கள் இதனால் பெரிதும் நன்மை அடைவர்.
கடந்த அரசாங்கங்களின் பொருளாதாரக் கொள்ளைகள் காரணமாகவே பொருட்களின் விலைகளில் பாரிய அதிகரிப்புக் காணப்படுகிறது.
உதாரணமாக சமையல் எரிவாயு, மா போன்றவற்றின் விலை அதிகரிப்புக்கு இதுவே காரணமாகும். எனினும், சமையல் எரிவாயு, மா போன்றவற்றின் விலைகள் தொடர்ந்தும் அதிகரிப்புக்கு தற்போதைய அரசாங்கம் அனுமதிக்காது எனவும் அமைச்சர் பந்துல குணவர்த்தன மேலும் தெரிவித்தார்.