* வைகோ தெரிவிப்பு
இலங்கை அரசின் தமிழ் மக்கள் மீதான இனப் படுகொலையின் தொடர்ச்சியின் அராஜகம் தான் தமிழ் மக்களுக்காக பாராளுமன்றம் வரை சென்று குரல் எழுப்பிய பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசனின் படுகொலையாகும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கிவரும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களைப் படம் போட்டுக் காட்டியிருக்கிறது.
இந்த நிலையில், அனைத்துலக சமூகம் நவீன கிட்லராக மாறி தமிழர்களைக் கொன்று குவித்துக் கொண்டிருக்கும் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தைக் கண்டிக்க முன்வர வேண்டும்.
இதனைக் கருத்திற்கொண்டு இலங்கை அர சாங்கத்திற்கு ஆயுதங்களை வழங்கும் அனைத்துலக சமூகம் ஆயுதங்களைக் கொடுக்கக்கூடாது. இனவாத அரசாங்கத்தின் நடவடிக்கைகளை எதிர்த்து எல்லா வகையிலும் ஈழத் தமிழர்கள் போராட வேண்டிய முக்கிய கட்டம் வந்துவிட்டது.
இலங்கை அரசாங்கத்தின் இரைக்குப் பலியாகிய சிவநேசனின் குடும்பத்தினருக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபத்தையும் கண்ணீர் அஞ்சலியையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.