பொலநறுவ மாவட்டத்தில் உள்ள தமிழ், முஸ்லிம் கிராமங்களில் தமிழ்மொழி பேசக் கூடிய கிராம சேவையாளர்களை நியமிக்குமாறு பொலநறுவ மாவட்ட பள்ளிவாசல் சம்மேளனமும் முஸ்லிம் வாலிப சம்மேளனமும் கோரிக்கை விடுத்துள்ளன.
தமிழ்மொழி பேசுகின்ற இக்கிராமங்களில் வாழும் மக்கள் மொழிப் பிரச்சினை காரணமாக தமது கருமங்களைச் செய்ய முடியாதிருப்பதாகவும் இதனால் பல சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மெதிரிகிரிய பிரதேச செயலாளர் பிரிவில் பள்ளித்திடல், அக்பர்புரம் ஆகிய கிராமங்களில் நூறு வீதம் முஸ்லிம்களே வாழுகின்றனர்.
இங்கு பம்புரானை கிராமத்துக்கு ஒரு கிராம சேவையாளர் பிரிவை ஏற்படுத்த வேண்டும்.
இதேபோல லங்காபுர பிரதேச செயலாளர் பிரிவில் ஜயபுர, நெலும்புர, றியாய்புரம் ஆகிய கிராமங்களில் நூறு வீதம் முஸ்லிம்களே வாழுகின்றனர்.
இந்தப் பிரதேச செயலர் பிரிவிலும் தம்பானை, ஒனேகம ஆகிய இரு கிராம சேவையாளர் பிரிவுகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
இதனைவிட தமன்கடுவ பிரதேச செயலர் பிரிவில் மாணிக்கம்பிட்டி, புதூர் ஆகிய கிராமசேவையாளர் பிரிவுகளிலும் நூறு வீதம் முஸ்லிம்களே வாழுகின்றனர்.
கதுருவெல தெற்கு பிரதேசத்தில் 1500 முஸ்லிம் குடும்பங்கள் வாழுகின்றன. இவற்றை மூன்று கிராம சேவையாளர் பிரிவுகளாக பிரிக்க வேண்டும்.
கல்லேல்ல கிராமசேவையாளர் பிரிவை இரண்டு கிராம சேவையாளர் பிரிவுகளாக பிரிக்க வேண்டும்.
வெலிகந்த பிரதேச செயலாளர் பிரிவில் குடாபொக்குன, கட்டுவன்வில, கிழக்கு கட்டுவன்வில, மேற்கு சேனபுர ஆகிய கிராமங்களிலும் முஸ்லிம்கள் நூறுவீதம் வாழுகின்றனர்.
அத்துகல கிராமத்துக்கு புதிய கிராமசேவையாளர் நியமிக்கப்பட வேண்டும்.
ஹிங்குராங்கொட பிரதேச செயலர் பிரிவில் ஹத்தமுன கிராமத்திலும் நூறு வீதம் முஸ்லிம்களே வாழுகின்றனர்.
இவற்றைவிட திம்புலாகல பிரதேச செயலாளர் பிரிவில் தமிழ் மக்கள் அதிகமாக வாழும் மன்னம்பிட்டி, கறுப்பளை, முத்துகல், கெவனபிட்டி ஆகிய கிராமங்களுக்கும் தமிழ்மொழி தெரிந்த கிராம சேவையாளர்கள் நியமிக்கப்படவேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.