குறைந்த விலையில் சமையல் எரிவாயுவை உற்பத்தி செய்து மக்களுக்கு விநியோகிப்பதற்கான ஏற்பாடுகளை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மேற்கொண்டு வருவதாக பெற்றோலிய வள அமைச்சர் ஏ.எச்.எம்.பௌஸி தெரிவித்தார்.
வீட்டுப் பாவனைக்கான எரிவாயு சிலிண்டர்களை விநியோகித்து வரும் இரண்டு தனியார் நிறுவனங்கள் தமது விருப்பத்துக்கும் தேவைக்கும் ஏற்றவாறு அவற்றின் விலையை அதிகரித்துள்ளன. இதன் காரணமாக பெரும் சிரமங்களை மக்கள் எதிர்கொண்டிருப்பதை கவனத்தில் கொண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து சமையல் எரிவாயுவை குறைந்த விலையில் விநியோகிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளோம். எனவும் அமைச்சர் கூறினார்.
குறைந்த விலையிலான இந்த எரிவாயு, இறக்குமதி செய்து விநியோகிக்கப்படாது சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள எல்.பி.ஜி. நிறுவனத்தால் இது உற்பத்தி செய்யப்படும்.
நடைமுறையிலுள்ள உள்ளூர் விலையை விட 10 வீதம் குறைவான விலையில், இந்த எரிவாயுவை மக்களுக்கு விநியோகிக்க முடியுமென நாம் எதிர்பார்க்கிறோம். இதற்கென ஏற்கனவே 50,000 எரிவாயு சிலிண்டர்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தனது நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்காக திறைசேரியையோ அன்றி வெளிநாட்டு நிதி உதவியையே எதிபார்த்திருக்காமல் மக்கள் விரும்புகின்ற திட்டங்களின் மூலம் எமக்கான வளங்களைப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளையே நாம் துணிச்சலுடன் முன்னெடுக்கவே விரும்புகின்றோம் எனவும் அமைச்சர் பௌசி தெரிவித்தார். இத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கான சாத்தியமான வழிமூலங்கள் தொடர்பாக ஏற்னவே அவற்றை இனங்கண்டுள்ளோம். அவை தொடர்பான விபரங்கள் விரைவில் வெளியிடப்படும்.
எதிர்வரும் தமிழ் சிங்கள புதுவருடத்துக்கு முன்னர் குறைந்த விலையில் மக்கள் எரிவாயு சிலிண்டர்களை பெற்றுக்கொள்ள முடியுமென்றும் அமைச்சர் பௌசி தெரிவித்தார்.