* சிவாஜிலிங்கம் எம்.பி.வலியுறுத்தல்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களையும் தமிழ் மக்களையும் தொடர்ச்சியாக படுகொலை செய்துவரும் இலங்கை அரசாங்கத்தின் மீது இந்தியா பொருளாதாரத்தடை விதிக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் தங்கியுள்ள சிவாஜிலிங்கம் எம்.பி.தமது சக பாராளுமன்ற உறுப்பினர் கி.சிவநேசன் கிளைமோர் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக ஊடகங்களுக்கு பேட்டியளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது;
இலங்கையில் இதுவரை 3 தமிழ் எம்.பி.க்களும், 3 முன்னாள் எம்.பி.க்களும் கொல்லப்பட்டுள்ளனர். சிவநேசன் எம்.பி.கொல்லப்பட்டதற்கு இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷவும், இலங்கை அரசும் முழுப்பொறுப்பேற்க வேண்டும். மற்ற எம்.பி.க்களின் உயிர்களுக்கும் உத்தரவாதம் இல்லை. நாங்களும் எப்போது வேண்டுமானாலும் கொல்லப்படலாம். இதே நிலை நீடித்தால் கொசோவோ போல விரைவில் தமிழ் ஈழ சுதந்திரப் பிரகடனத்தை அறிவிக்கும் நிலை ஏற்படும். சுதந்திரம் தமிழீழத்தை அமைக்கும் வரை எங்களுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லை. தமிழீழத்திற்காக தேவைப்பட்டால் நாங்கள் எங்கள் எம்.பி.பதவியையும் தூக்கி எறியத் தயாராக இருக்கிறோம்.
இலங்கை அரசு இந்தியா - இலங்கை ஒப்பந்தத்தை துஷ்பிரயோகம் செய்கிறது. இதற்கு இந்தியா மௌனமாக இருக்கக்கூடாது. பாகிஸ்தானைப் போல இந்தியா கண்மூடித்தனமாக இலங்கைக்கு ஆயுத உதவிகள் செய்யவில்லை. தமிழ் மக்களின் சுய நிர்ணய போராட்டத்தை இந்தியா ஏற்றுக் கொள்ள வேண்டும். இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்.
தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து ஐ.நா.சபையில் இந்தியா புகார் செய்து நடவடிக்கை எடுக்கக் கோர வேண்டும்.