தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசனை சந்தித்துப் பேசியுள்ளனர்.
வன்னியில் இடம்பெற்ற கிளைமோர்த் தாக்குதலில் கொல்லப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி., கி.சிவநேசனின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொள்வதற்காக கூட்டமைப்பைச் சேர்ந்த 15 எம்.பிக்கள் வன்னிக்குச் சென்றிருந்தனர்.
சிவநேசன் எம்.பி.யின் இறுதிக் கிரியைகள் முடிவடைந்ததும் நேற்று பிற்பகல் நடேசனுக்கும் கூட்டமைப்பு எம்.பி.க்களுக்குமிடையிலான சந்திப்பு நடைபெற்றதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்தன.
இந்தச் சந்திப்பில் புலிகளின் முக்கியஸ்தர்கள் சிலரும் கலந்து கொண்டனர்.
இந்தச் சந்திப்பில் போர் நிறுத்த உடன்பாட்டை அரசு முடிவுக்குக் கொண்டு வந்த பின் எழுந்துள்ள நிலைமை, வடக்கில் இடம்பெறும் கடும் யுத்தம், கிழக்கில் இடம்பெறும் தேர்தல்கள், தமிழ் மக்களுக்கெதிரான மனித உரிமை மீறல்கள், படுகொலைகள், ஆட்கடத்தல்கள் உட்பட பல்வேறு விடயங்கள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 13 எம்.பி.க்கள் இன்று கொழும்பு திரும்புவாரென எதிர்பார்க்கப்படுகிறது.