இலங்கையை விட்டு வெளியேற புகழ்பெற்ற மருத்துவ வல்லுநர்கள் முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சுகாதார அமைச்சின் செயற்பாடுகளை சகிக்க முடியாமல் நாட்டை விட்டு வெளியேறுவதென்று புகழ்பெற்ற 6 மருத்துவர்கள் முடிவு செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
உலகப் புகழ்பெற்றவராகக் கூறப்படும் நரம்பியல் வல்லுநரான சுனில் பெரேரா மற்றும் ஐந்து புகழ்பெற்ற மருத்துவ வல்லுநர்களே இவ்வாறு முடிவு செய்துள்ளனர்.
சுகாதார அமைச்சரான நிமால் சிறிபால டி சில்வாவின் செயற்பாடுகளுக்கு இந்த வல்லுநர்கள் ஆதரவாக இருக்கவில்லை என்று தெரிகிறது.
பெரும்பாலான மருத்துவர்கள் நேரம் பார்க்காமல் பணிபுரிந்தும் அதற்குப் பலனாக அமைச்சரிடமிருந்து சித்திரவதைகளையே அனுபவிக்க நேரிடுகிறது என்று ஒரு மருத்துவர் தெரிவித்தார்.
"பிற நாடுகளில் மருத்துவர்களைப் போற்றுகிறார்கள் எனில், இலங்கையிலோ நிலைமை தலைகீழாக இருக்கிறது. மிகக் குறைவான ஊதியமே வழங்கப்படுகிறது. எமது பணி சேவை என்பதால் அது தொடர்பில் முறைப்பாடு செய்யவில்லை.
ஐரோப்பிய நாடுகளில், நாம் தற்போது ஊதியத்தை விட இரு மடங்கு பெற முடியும்" என்றும் அந்த மருத்துவர் சுட்டிக்காட்டினார்.
அமைச்சருக்கென சில எல்லைகள் உண்டு. ஆனால், மருத்துவத்துறையின் ஒவ்வொரு செயற்பாட்டிலும் அவர் தலையிடுகிறார் என்றும் அந்த மருத்துவர் குற்றம்சாட்டினார்.
இதனிடையே மருத்துவ வல்லுநர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதைத் தடை செய்யும் வகையில் இலங்கையில் உள்ள வெளிநாட்டுத் தூதரகங்கள் மருத்துவ வல்லுநர்களுக்கு விசாக்களை வழங்கக் கூடாதென்று அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா அழுத்தம் கொடுத்து வருவதாகவும் தெரிகிறது.