வவுனியா பண்டாரிக்குளத்தில் சனிக் கிழமை இரவு கொள்ளையர்கள் மேற்கொண்ட கைக்குண்டு வீச்சில் பொது மக்களில் இருவர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இங்குள்ள சில வீடுகளில் சனிக்கிழமை இரவு பணம், தங்க நகைகள், கையடக்கத் தொலைபேசிகள் என்பவற்றை கொள்ளையடித்த பின்னர் தப்பியோடும் போது கைக்குண்டை வீசியுள்ளனர்.
இதன் பின்னர் தோணிக்கல் பகுதியிலும் சில வீடுகளிலும் இரு கடைகளிலும் இவர்கள் கொள்ளையடித்துள்ளனர். கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த கையடக்க தொலைபேசி அட்டைகளையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். மோட்டார் சைக்கிள்களில் தலைக்கவசம் அணிந்து வந்த இவர்கள் தம்மை பொதுமக்கள் பிடித்துவிடலாம் என்ற அச்சத்திலேயே இவ்வாறு கைக்குண்டை வீசித் தாக்கிவிட்டுத் தப்பியுள்ளனர். இவர்களிடம் துப்பாக்கிகளும் காணப்பட்டதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த வாரம் வவுனியா சமயபுரம் பகுதியில் கொள்ளையர்களை விழிப்புக்குழுவினர் பொதுமக்களின் உதவியுடன் பிடிக்க முயன்றபோது கொள்ளையர்கள் அவர்களில் இருவரை வாளால் வெட்டியதுடன் வானை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டு தப்பியோடியுள்ளனர்.
வவுனியாவில் அண்மைக்காலமாக இரவு நேரக்கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.