மட்டக்களப்பு மாநகர சபை உட்பட ஒன்பது உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் இன்று திங்கட்கிழமை நடைபெறுகின்றது. இத்தேர்தலை முன்னிட்டு மாவட்டத்தின் பாதுகாப்பு பெருமளவில் பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஒன்பது உள்ளூராட்சி மன்றங்களிலிருந்து 101 உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்கான இந்த தேர்தலில் 831 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் 291 வாக்களிப்பு நிலையங்களில் 2 இலட்சத்து 70 ஆயிரத்து 471 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.
அதேநேரம், மட்டக்களப்பு மாவட்டத்தின் பாதுகாப்பு முன்னொருபோதுமில்லாதவாறு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், பல வீதிகளும் பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்டுள்ளது.
இத்தேர்தல் நடவடிக்கைகளுக்காக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொலிஸார் மற்றும் 4 ஆயிரம் ஊழியர்கள் உட்பட படையினர், விசேட அதிரடிப்படையினரும் பெருமளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு நகரம் உட்பட அதனை அண்மித்த பகுதிகளில் பெருமளவு படையினர் கனரக வாகனங்களில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்ததையும் காணக்கூடியதாகவிருந்தது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 12 உள்ளூராட்சி சபைகள் இயங்கிவரும் நிலையில், 2006.03.30 ஆம் திகதி காத்தான்குடி நகர சபை, ஏறாவூர் நகர் பிரதேச சபை, கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைகளுக்கான தேர்தல்கள் நடைபெற்ற நிலையில், ஏனைய மட்டக்களப்பு மாநகர சபை உட்பட 9 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டிருந்தன.
கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவுடன் தேர்தல் பிரசாரங்கள் நிறுத்தப்பட்ட நிலையில், இன்று தேர்தல் இடம்பெறுகின்றது. இத்தேர்தலில் 6 அரசியல் கட்சிகளும் 22 சுயேட்சைக் குழுக்களிலிருந்தும் 831 பேர் போட்டியிடுகின்றனர்.
மட்டக்களப்பு மாநகர சபை, மண்முனைப்பற்று பிரதேச சபை, மண்முனை மேற்குப் பிரதேச சபை, மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபை, மண்முனை தென்மேற்குப் பிரதேச சபை, போரதீவுப்பற்றுப் பிரதேச சபை, கோறளைப்பற்று வடக்குப் பிரதேச சபை, ஏறாவூர்பற்றுப் பிரதேச சபை, கோறளைப்பற்றுப் பிரதேச சபை ஆகிய 9 உள்ளூராட்சி மன்றங்களுக்கே தேர்தல் இடம்பெறுகின்றது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, ஷ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய காங்கிரஸ், தேசிய அபிவிருத்தி முன்னணி மற்றும் ஈழவர் ஜனநாயக முன்னணி ஆகிய 6 கட்சிகளும் 22 சுயேட்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளும் இணைந்து மட்டக்களப்பு மாநகர சபைக்குப் போட்டியிடும் நிலையில், ஏனைய 8 பிரதேச சபைகளுக்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தனித்து போட்டியிடுகின்றனர்.
இதேவேளை, புளொட், ஈ.பி.டி.பி., ஈ.பி.ஆர்.எல்.எவ். பத்மநாபா ஆகிய மூன்று கட்சிகளும் இணைந்து 9 உள்ளூராட்சி மன்றங்களிலும் கூட்டாக சுயேட்சைக் குழுவில் போட்டியிடுகின்றனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மட்டக்களப்பு மாநகர சபை உட்பட 5 உள்ளூராட்சி மன்றங்களிலும் ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 4 உள்ளூராட்சி மன்றங்களிலும் ஈழவர் ஜனநாயக முன்னணி மண்முனைப்பற்று தவிர்ந்த ஏனைய 8 உள்ளூராட்சி மன்றங்களிலும் தேசிய காங்கிரஸ் ஒரு உள்ளூராட்சி மன்றத்திலும் தேசிய அபிவிருத்தி முன்னணி 4 உள்ளூராட்சி மன்றங்களிலும் போட்டியிடுகின்றன.
1994 ஆம் ஆண்டு முதலாவது உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இடம்பெற்ற நிலையில், 2002 ஆம் ஆண்டு வேட்பு மனு கோரப்பட்டு நிறுத்தப்பட்டதுடன், 2006 ஆம் ஆண்டும் வேட்பு மனு கோரப்பட்டு மூன்று உள்ளூராட்சி மன்றங்களுக்கே தேர்தல் நடைபெற்றது. ஏனையவற்றுக்கு நிறுத்தப்பட்டது. அவற்றுக்கே இன்று தேர்தல் இடம்பெறுகின்றது.
291 வாக்களிப்பு நிலையங்களில் 2,70,471 பேர் வாக்களிக்கவுள்ளனர். இவற்றில் 6 வாக்களிப்பு நிலையங்கள் இடம்பெயர்ந்து மீள்குடியேற்றப்படாமல் உள்ளவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாநகர சபையில் 54,948 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ள நிலையில், 175 பேர் போட்டியிடுகின்றனர். இவர்களிலிருந்து 19 பேர் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.
மண்முனைப்பற்றில் இருந்து 18,759 பேர் வாக்களிக்கவுள்ள நிலையில், 96 பேர் போட்டியிடுகின்றனர். 9 பேர் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.
மண்முனை மேற்கில் 15,771 பேர் வாக்களிக்கவுள்ள நிலையில், 48 பேர் போட்டியிடுகின்றனர். இவர்களில் 9 பேர் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.
மண்முனை தென்மேற்கில் 14,880 பேர் வாக்களிக்கவுள்ள நிலையில், 36 பேர் போட்டியிடுகின்றனர். இவர்களில் 9 பேர் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.
போரதீவுப்பற்றிலிருந்து 28,116 பேர் வாக்களிக்கவுள்ள நிலையில், 24 பேர் போட்டியிடுகின்றனர். இவர்களில் 9 பேர் தெரிவுசெய்யப்படவுள்ளனர். மண்முனை தென் எருவில்பற்றிலிருந்து 38,386 பேர் வாக்களிக்கவுள்ள நிலையில், 52 பேர் போட்டியிடுகின்றனர். இவர்களில் 16 பேர் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.
ஏறாவூர்பற்றிலிருந்து 45,336 பேர் வாக்களிக்கவுள்ள நிலையில், 190 பேர் போட்டியிடுகின்றனர். இவர்களில் 14 பேர் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.
கோறளைப்பற்றிலிருந்து 41,856 பேர் வாக்களிக்கவுள்ள நிலையில், 135 பேர் போட்டியிடுகின்றனர். இவர்களில் 11 பேர் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.
கோறளைப்பற்று வடக்கிலிருந்து 12,419 பேர் வாக்களிக்கவுள்ள நிலையில், 75 பேர் போட்டியிடுகின்றனர். இவர்களில் 11 பேர் தெரிவுசெய்யப்படவுள்ளனர். மொத்தம் 101 மக்கள் பிரதிநிதிகளைத் தெரிவுசெய்வதற்கான தேர்தலாக இது உள்ளது.
நேற்றுக் காலை முதல் சகல வாக்களிப்பு நிலையங்களுக்கும் மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மைதானத்திலிருந்து வாக்குப் பெட்டிகளும் வாக்குச் சீட்டுகளையும் அதிகாரிகள் கொண்டு சென்றனர்.
மட்டக்களப்பில் தற்போது கடும் மழை பெய்து வரும் நிலையிலும் அதிகாரிகள் பலத்த சிரமத்தின் மத்தியிலும் தங்களுக்கு பணிக்கப்பட்ட வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்றனர்.
மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில் வாக்கு எண்ணும் பணிகள் இடம்பெறவுள்ளன.
இந்துக் கல்லூரியை சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், சில வீதிகள் பொதுமக்கள் போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளதுடன், மாற்று வீதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் படையினரும் உள்நாட்டு, வெளிநாட்டு கண்காணிப்பாளர்களும் உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகவியலாளர்களும் பெருமளவில் காணப்பட்டனர்.
தேர்தல் திணைக்கள தலைமைக் காரியாலயத்திலிருந்து பிரதித் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தலைமையில் 5 உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுடன் நூற்றுக்கணக்கான உத்தியோகஸ்தர்கள் மட்டக்களப்பிற்கு தேர்தல் கடமைக்காக வந்துள்ளனர்.
தேர்தலை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. விசேட சோதனைச் சாவடிகள், வீதித் தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், வீதிகளில் பெருமளவு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.