வன்னியில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கி.சிவநேசனின் பூதவுடல் நேற்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11 மணியளவில் மல்லாவி அனிஞ்சியன்குளம் பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் கதறியழ நல்லடக்கம் செய்யப்பட்டது.
சனிக்கிழமை காலை முதல் மாலை வரையும் வன்னியின் சகல பிரதேசங்களுக்கும் அன்னாரின் பூதவுடல் தாங்கிய ஊர்தி சென்றபோது சகல பகுதிகளிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி தங்கள் இறுதி அஞ்சலியை செலுத்தினார்கள். நேற்று முன்தினம் சனிக்கிழமை புதுக்குடியிருப்பு, கிளிநொச்சி உட்பட பல பகுதிகளில் அஞ்சலிக் கூட்டங்களும் நடைபெற்றன.
இதையடுத்து, கிளிநொச்சியில் இருந்து நேற்றுக் காலை 10 மணிக்கு மல்லாவிக்கு அன்னாரின் பூதவுடல் தாங்கிய அலங்கரிக்கப்பட்ட ஊர்தி மீண்டும் கொண்டுவரப்பட்டது.
நேற்றுக் காலை 10 மணியளவில் பூதவுடல் ஊர்தி மல்லாவி நகரை வந்தடைந்தது.
அங்கு சமூகப் பிரமுகர் மதன் தலைமையில் இறுதி அஞ்சலிக் கூட்டம் நடைபெற்றபோது ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.
மறைந்த சிவநேசன் எம்.பி.யின் உறவினர்கள், குடும்பத்தவர்கள் முதலில் மலரஞ்சலி செலுத்தினார்கள். அதன்பின் அஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது.
யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், பத்மினி சிதம்பரநாதன், சிவநாதன் கிஷோர், எஸ்.பத்மநாதன், ரி.கனகசபை, புதுக்குடியிருப்பு கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எஸ்.இளம்பரிதி, வடக்கு, கிழக்கு மனித உரிமைகள் செயலக பணிப்பாளர் அருட்தந்தை எம்.எக்ஸ்.கருணரட்ணம் அடிகளாரும் அஞ்சலி உரையாற்றினார்கள்.
அஞ்சலிக் கூட்டம் நிறைவடைந்ததும் நகரிலிருந்து சுமார் நூறு மீற்றர் தூரத்தில் அனிஞ்சியன்குளம் எனும் பகுதியில் விசேடமாக அமைக்கப்பட்ட இடத்திற்கு நல்லடக்கத்திற்காக பூதவுடல்ப் பேழை எடுத்துச்செல்லப்பட்டது.
அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் கதறியழ அன்னாரது பூதவுடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அன்னாரின் நினைவாக நினைவுத்தூபி ஒன்றை அமைப்பதற்காகவே இங்கு பூதவுடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
சகல பகுதிகளிலும் அஞ்சலி
சனிக்கிழமை புதுக்குடியிருப்பில் நடைபெற்ற அஞ்சலிக் கூட்டத்தில் கடற்புலிகளின் விசேட தளபதி கேணல் சூசை, யாழ். மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. ஐ.எம். இமாம் கலந்துகொண்டு உரையாற்றினார்கள்.
அன்றைய தினம் வன்னியில் விசேட இடம் ஒன்றில் வைத்து அன்னாரின் பூதவுடலுக்கு விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன், விடுதலைப்புலிகளின் புலனாய்வுப்பிரிவு பொறுப்பாளர் பொட்டம்மான், அரசியல்துறை பொறுப்பாளர் பா.நடேசன், மற்றும் விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர்கள் அஞ்சலி செலுத்தினர். இதில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பதினைந்து பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
சனிக்கிழமை இரவு கிளிநொச்சி பண்பாட்டு மையத்தில் நடைபெற்ற அஞ்சலிக்கூட்டத்தில் விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டு இறுதி வணக்கத்தை தெரிவித்தனர்.
இங்கு நடைபெற்ற கூட்டத்தில் அரசியல்துறைப்பொறுப்பாளர் பா.நடேசன் சிறப்புரையாற்றினர்.
வன்னிப்பிரதேசம் எங்கும் தோரணங்களும் கறுப்புக் கொடிகளும் கட்டப்பட்டிருந்தன.
அஞ்சலி பிரசுரங்களும் பதாதைகளும் காணப்பட்டன.
பூதவுடல் ஊர்தி செல்லும் இடங்களில் கடைகள், அலுவலகங்கள் மூடப்பட்டிருந்தன.