ஐ.சி.எல்.20 ஓவர் கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கியது. இதன் பரிசு தொகையாக 12 கோடி ரூபா அறிவிக்கப்பட்டுள்ளது
கபில்தேவ் தலைமையில் செயல்பட்டு வரும் ஐ.சி.எல். சார்பில், ஏற்கனவே 20 ஓவர் மற்றும் 50 ஓவர் போட்டி நடத்தப்பட்டது. இந்த நிலையில் ஐ.சி.எல். சார்பில் 20 ஓவர் கிராண்ட் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படுகின்றது.
இந்தப் போட்டி நேற்று ஞாற்றுக்கிழமை தொடங்கியது. ஏப்ரல் 7-ந் திகதி வரை நடைபெறுகிறது. ஐதராபாத், சண்டிகர், டெல்லி ஆகிய இடங்களில் போட்டி நடிக்கிறது. தொடக்க ஆட்டத்தில் அகமதாபாத் ராக்கெட்ஸ்-சண்டிகர் லயன்ஸ் அணிகள்.மோதின இந்தப் போட்டியில் சென்னை சுப்பர்ஸ்டார்ஸ், மும்பை சாம்ஸ் உட்பட 8 அணிகள் கலந்து கொள்கின்றன. பாகிஸ்தானில் இருந்து லாகூர் பாட்ஷா என்ற அணி பங்கேற்கிறது. ஒவ்வொரு அணியிலும் வெளிநாட்டு பிரபல வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை லீக் போட்டியில் மோதும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும். மொத்தம் 34 போட்டிகள் நடைபெறும். இறுதிப் போட்டி 3 ஆட்டங்கள் கொண்டதாகும்.
இந்தப் போட்டிக்கான பரிசுத் தொகை நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. மொத்தம் 12.30 கோடி பரிசாக வழங்கப்படுகிறது. சாம்பியன் கிண்ணத்தை வெல்லும் அணிக்கு 2.5 கோடி ரூபாவும் 2-ஆவது இடம் பிடிக்கும் அணிக்கு 1.25 கோடி ரூபாவும் 3-ஆவது இடம் பிடிக்கும் அணிக்கு 50 லட்சம் ரூபாவும் பரிசாக வழங்கப்படும்.
ஒவ்வோரு லீக் போட்டியிலும் வெற்றி பெறும் அணிக்கு - 25 லட்ச ரூபாவும் ஆட்டநாயகன் விருது பெறும் வீரர்களுக்கு -2 லட்சம் ரூபாவும் தொடர் நாயகன் விருது பெறுபவருக்கு 40 லட்சம் ரூபாவும் பரிசாக வழங்கப்படுகிறது. இதனை ஐ.சி.எல் செயற்குழு உறுப்பினர் கிரேண்மோரே தெரிவித்துள்ளார்.