அவுஸ்திரேலிய வீரர்கள் பாகிஸ்தான் வரப் பயப்படத் தேவையில்லை. அவர்களுக்கு உயர்மட்ட பாதுகாப்பு வழங்கப்படுமென பாகிஸ்தான் ஜனாதிபதி பர்வேஷ் முஷாரப் உறுதியளித்துள்ளார்.
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி 29 ஆம் திகதி முதல் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரில் விளையாட வேண்டும். ஆனால், தற்போதைய நிலையில் அங்கு செல்வது பாதுகாப்புக்கு உகந்ததல்ல என்று அவுஸ்திரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் அவுஸ்திரேலிய அணியை அறிவுறுத்தியுள்ளனர். இதனால் இந்தத் தொடரை அவுஸ்திரேலியா ரத்து செய்வதற்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் அதிகாரபூர்வமாக எந்த அறிவிப்பையும் அவுஸ்திரேலியா இன்னும் வெளியிடவில்லை.
பாகிஸ்தானில் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வரும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை தனது இறுதி முடிவை அறிவிக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் பாகிஸ்தான் ஜனாதிபதி முஷாரப், பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவர் நசிம் அஷ்ரப்பை சந்தித்து பேசினார். அப்போது, இந்தத் தொடருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக முஷாரப் உறுதியளித்தார். பின்னர் முஷாரப் நிருபர்களிடம் கூறுகையில்,
"அவுஸ்திரேலிய அணி பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை ரத்துச் செய்யாதென்று நம்புகிறேன். அவுஸ்திரேலிய அணி வீரர்கள் , பாகிஸ்தானில் தங்கியிருக்கும் காலகட்டங்களில் அவர்களுக்கு எந்தளவு உயர் மட்ட பாதுகாப்பு அளிக்க முடியுமோ அத்தகைய சிறந்த பாகாப்பு அளிக்கப்படும்" என்றார்.
இதற்கிடையே, பொதுவான இடத்தில் இந்தத் தொடரை நடத்தும் யோசனையை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தலைமை நிர்வாக அலுவலர் நக்மி நிராகரித்திருக்கிறார். அதனால் போட்டியில் பங்கேற்கும் இரண்டு நாட்டுக்கும் எந்த ஆதாயமும் கிடைக்காது. ரசிகர்கள் கூட்டமும் வராது என்று அவர் கூறினார்.
`மற்ற கிரிக்கெட் அணிகள், பாகிஸ்தானுக்கு மகிழ்ச்சியுடன் வந்து விளையாடி விட்டு செல்கின்றன.ஆனால், அவுஸ்திரேலியா மட்டும் தான் பல ஆண்டுகளாக (10 ஆண்டு) இங்கு வந்து விளையாடவில்லை' என்றும் அவர் குறிப்பிட்டார்.