இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச் சாளர் பிரவின்குமாருக்கு அமைச்சர் ஒருவர் தனது மகளை திருமணம் செய்து கொடுக்க முன்வந்த தகவல் வெளியாகியிருக்கிறது.
ஒரு வீரர் இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்து, தனது திறமையை நிரூபித்துவிட்டால் அதன் பிறகு அவர் கதாநாயகன் அந்தஸ்துக்கு உயர்ந்து விடுவார். 21 வயதான பிரவின்குமாரும் இந்த வகை தான். ஒரே வாரத்தில் ஹீரோவாகிவிட்டார். அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற முக்கோண கிரிக்கெட்போட்டியில் இந்தியா வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பெற்றது. வெற்றியில் பிரவின்குமாரின் பங்கும் முக்கியமானது.
இந்தத் தொடரில் 4 போட்டியில் ஆட வாய்ப்புப் பெற்ற இவர் 10 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதில் முக்கியமான 2 இறுதிப்போட்டியில் மட்டும் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். 2 ஆவது இறுதிப்போட்டியின் ஆட்ட நாயகனும் இவரே.
இதனால் அவரது சொந்த ஊரான மீரட்டில் (உத்தரபிரதேச மாநிலம்) உற்சாகம் களைகட்டியுள்ளது. உள்ளூர் அரசியல்வாதிகள், ரசிகர்கள் பிரவின்குமார் வீட்டுக்குச் சென்று வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இனி அங்குள்ள இளைஞர்களுக்கு அவர் ரோல் மொடலாக இருப்பார்.
குறுகிய காலத்தில் பிரவின் குமார் புகழ்பெற்று விட்டதால், அவருக்கு பெண் கொடுக்கக் கூட போட்டா போட்டி ஏற்படத் தொடங்கியிருக்கிறது. ஒரு அமைச்சர் தனது மகளை பிரவின்குமாருக்கு திருமணம் செய்து கொடுக்க முன்வந்திருக்கிறார்.
ஆனால், இதனை பிரவின்குமார் நிராகரித்துவிட்டார். இப்போதைக்கு திருமண எண்ணமில்லை. இன்னும் சில ஆண்டுகள் முழுக்கவனமும் கிரிக்கெட் தான் என்று அவர் கூறியிருக்கிறார். இந்தத் தகவலை பிரவின்குமாரின் சகோதரர் வினய்குமார் தெரிவித்தார்.
பிரவின்குமாரால், அவரது பயிற்சியாளர் விபின் வாவ்ஸ் மிகவும் பெருமையடைந்துள்ளார். பிரவின்குமாரின் திறமையை அவரது 12 ஆவது வயதில் கண்டறிந்தவர் விபின் வாட்ஸ்.அவர் கூறுகையில்,
`அவுஸ்திரேலிய தொடரில் பிரவின்குமாரின் பந்து வீச்சு சிறப்பாக இருந்தது. அடுத்த தொடரில் அவர் எல்லோராலும் கவனிக்கத்தக்க வீரராக இருப்பார்' எனறு குறிப்பிட்டார்.