நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 2 ஆவது இனிங்ஸில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் சைற்பொட்டம் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளிடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹமில்டனில் நடந்தது.
நியூசிலாந்து அணி முதல் இனிங்ஸில் 470 ஓட்டங்கள் குவித்தது. பின்னர் முதல் இனிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 3 ஆவது நாள் ஆட்ட நேரம் முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 286 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
நேற்று முன்தினம் 4 ஆவது நாள் ஓட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி மதிய உணவு இடைவேளைக்குப் பின் 348 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தது. கொலிங்வூட் 66 ஓட்டங்கள் எடுத்தார்.
பின்னர் 2 ஆவது இனிங்ஸில் ஆடிய நியூசிலாந்து அணிக்கு சைற்பொட்டம், பனேசர் ஆகியோர் கடும் நெருக்கடி கொடுத்தனர். 99 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்திருந்த நியூசிலாந்து 119 ஓட்டத்துக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது. அதாவது, 20 ஓட்டங்கள் எடுப்பதற்கு 6 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
சைப்பொட்டம் 30 ஆவது ஓவரின் கடைசிப் பந்தில் பிளமிங் விக்கெட்டை வீழ்த்தினார். 32 ஆவது ஓவரின் முதல் பந்தில் சின்கிளேயரையும், 2ஆவது பந்தில் ஜேக்கப் ஓரத்தையும் ஆட்டமிழக்கச் செய்தார். இதன் மூலம் அவர் தொடர்ந்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி `ஹாட்ரிக்' சாதனை படைத்தார். டெஸ்ட் போட்டியில் நிகழ்த்தப்பட்ட 37 ஆவது ஹாட்ரிக் சாதனை இதுவாகும்.
4 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 147 ஓட்டங்கள் எடுத்தது. இங்கிலாந்து அணி 269 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது.