பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை அவுஸ்திரேலியா இரத்துச் செய்துள்ளது.
அவுஸ்திரேலிய அணி இம்மாத இறுதியில் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரில் பங்கேற்பதாக இருந்தது. சமீபத்தில் முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் பெனாசிர் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து அவுஸ்திரேலியா இத்தொடரில் பங்கேற்க தயக்கம் காட்டியது.
பாகிஸ்தான் பொதுத் தேர்தலுக்கு பின்னர்தான் உறுதியாக எதுவும் கூற முடியுமென தெரிவித்தது. தற்போது தொடரை இரத்துச் செய்துள்ளது. இதை அவுஸ்திரேலிய சபை இவ்வாரம் அதிகாரபூர்வமாக அறிவிக்குமென தெரிகிறது. இது குறித்து அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை அதிகாரி ஒருவர் அளித்த பேட்டியில்;
அவுஸ்திரேலிய சபை மற்றும் வீரர்கள் சங்கம் பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளத் தயாராக இல்லை. பாகிஸ்தானுக்கான அவுஸ்திரேலியாவின் தூதர் ஜோரிகா மெக்கார்த்தியின் அறிக்கையின் படி, அங்கு அவுஸ்திரேலிய வீரர்களுக்கு போதிய பாதுகாப்பு கிடைக்காதென தெரிகிறது.
எங்களின் தனியார் பாதுகாப்பு நிறுவன அதிகாரிகளின் அறிக்கையும் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்துக்கு எதிராகவே உள்ளது. இதனால் தொடர் இரத்துச் செய்யப்படும். இது அடுத்த வாரம் அறிவிக்கப்படும்.
பாகிஸ்தான் கிரிக்கெட் சபை (பி.சி.பி.) தொடரை வேறிடத்துக்கு மாற்றும்படி கேட்டு கொள்ளப்பட்டது. ஆனால், பி.சி.பி. பிடிவாதமாக மறுத்துவிட்டது.
பி.சி.பி. நெருக்கடி: அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை அடுத்த வாரம் முடிவை அறிவிக்கும் போது, பி.சி.பி.க்கு சுமார் 32 கோடி ரூபா நஷ்டமேற்படும். தற்போது உள்ளூர் போட்டிகளுக்கு அதிகம் செலவிட்டு வரும் பி.சி.பி., இதனால் நிதி நெருக்கடிக்குள்ளாகும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதை தடுக்க பி.சி.பி. தலைவர் நசிம் அஷ்ராப் ஜனாதிபதி பர்வேஷ் முஷாராப்பை சந்தித்துள்ளார்.