சொ.அமிர்தலிங்கம்
பெண்ணடிமையினால் உருவான தோற்றப்பாடே சீதன முறையாகும். இன்று பல வருடங்களாக இந்தச் சீதனக் கொடுமையானது இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் தலைவிரித்தாடுகின்றது. பெண்களும் ஒரு சொத்தாக வீட்டு அடிமைகளாக விற்கப்படும் முறையே இந்தச் சீதனமாகும். இது ஆண்களுக்கு விதிவிலக்கு. அவர்களை ஆளப்பிறந்தவர்களாகவும் பெண்களை அடிமைகளாகவும் விலை போகும் பொருளாக விற்கும் நிலையையும் இது குறித்து நிற்கின்றது. திருமண ஒழுங்கின் போது பெற்றோரினால் மணப்பெண்களுக்காக வரப்போகும் கணவன்மாருக்கு வழங்கப்படும் ஒரு சொத்தாக இது கருதப்படுகிறது.
இலங்கைத் தமிழரைப் பொறுத்தவரையில் பிரதானமாக யாழ் மக்களைப் பொறுத்தவரை சீதன முறை என்பது ஒரு வழமையாகி விட்டது. தேசவழமையில் ஒரு நிகழ்வாக இது கருதப்படுகிறது. திருமணத்தின் போது தாய்வழிச் சொத்துக்களைப் பிரித்தளிப்பதை தேசவழமை விளக்குகிறது. தேசவழமையில் சீதனம் பற்றிக் குறிப்பிடும் போது " ஒரு பெண் திருமணஞ் செய்யும் போது தாயின் சொத்திலிருந்து சீதனத்தை வரதட்சணையாகப் பெற்றுக் கொள்கின்றனர். இதன் அடிப்படையில் மனைவியின் சொத்து பெண் பிள்ளைகளைச் சென்றடையும். கணவனின் சொத்து ஆண்களைச் சென்றடையும். கணவன் கொண்டு வருவது முதுசமாகவும் மனைவி கொண்டு வருவது சீதனம் எனவும் பிரிவுகளாக பிரித்துப் பார்ப்பது தேச வழமை" இதன் அடிப்படையில் சீதனம் தான் அடிமைச் சொத்தாக பெண்ணுக்காக பெற்றோரால் வழங்கப்படுகிறது. எனவே, ஒரு பெண் விற்பனைப் பண்டமாக பேரம் பேசப்பட்டு விற்கப்படுகிறாள். ஆண் குடும்பத்தினர் அவளுக்காக பெருந்தொகையை கேட்க பெண் குடும்பத்தினர் அத்தொகையை வழங்குகின்றனர். தவறும் பட்சத்தில் இந்த எண்ணம் இடை நடுவில் கைவிடப்படுகிறது. இதன் காரணமாக பெண்ணைப் பெற்ற ஏழைப் பெற்றோர் அவதியுறுகின்றனர். எனவே, பெண்ணானவள் ஒடுக்கப்படுவதற்கு சிறந்த எடுத்துக்காட்டு இதுவாகும். சீதனக் கொடுமையினால் மண முடிக்கும் வயதை எட்டிய பெண்கள் பலர் சீதனம் கொடுக்க முடியாமல் வரன் தேடி அலைகின்றனர். இப்படியாக சரி வரச் சீதனம் கிடைக்காமல் அலையும் ஆண்களும் பலர் உள்ளனர்.
இன்று குடும்பத்தில் மூத்தவனாகப் பிறந்த குற்றத்திற்காக இளைய பெண் பிள்ளைகளின் சீதனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக உழைக்கும் ஆண்கள் அதிகம் பேர் உள்ளனர். மூத்த ஆண் பிள்ளை குடும்பத்திற்கு மூன்று பெண் சகோதரிகள் பிறந்தால் போதும் அந்த ஆணும் அவனது தந்தையும் சீதனத்திற்காக கஷ்டப்பட்டு தொழில் செய்து வாழ்க்கை நடத்த முற்படுவர். உடலைப் பிழிந்து உழைத்தாலும் அக் கேள்விக்கு ஏற்ப சீதனம் கொடுக்க முடியாமல் உளரீதியாக தாக்கத்துக்குட்படும் ஆண்கள் பலர் உள்ளனர். குடும்பச் சுமையுடன் இவர்கள் தங்கள் பெண்களை மண முடிப்பதற்காக சீதனம் கொடுப்பதனால் வறுமை நிலையில் மிக அவதியுறுகின்றனர். ஆண்களைப் பெற்ற குடும்பங்கள் இந்தத் தொகையைப் பெற்று ஆடம்பர வாழ்க்கை வாழமுற்படுகின்றனர். பெண்களைப் பெற்ற குடும்பங்கள் ஓட்டாண்டியாக கைவிடப்பட்ட நிலையில் வாறுமையில் வாழ வேண்டிய சூழ் நிலை ஏற்படுகின்றது.
இன்று சீதனமாகாது கௌரவமான முறையில் அன்பளிப்பு (எஐஊகூ) என அழைக்கப்படுகின்றது. பெற்றோரால் பெண் பிள்ளைக்காக விரும்பி வழங்கப்படும் அன்பளிப்பு என இது கருதப்படுகிறது. இந்தச் சீதனத்தை நன்கொடையாக (ஈ??அகூஐ??) யாகவும் கொடுக்கின்றனர். பேரம் பேசி பெறப்படும். இந்தச் சீதனத்தை அன்பளிப்பு நன்கொடை என்ற ரீதியில் எவ்வகையில் கருதலாம்? அன்பளிப்போ, நன்கொடையோ பேரம் பேசிப் பெறப்படுவதல்ல. இவை விரும்பிக் கொடுப்பனவாக இருக்க வேணடும். அன்பளிப்புக்கும் நன்கொடைக்கும் ஆணை பெற்ற குடும்பம் கொடுக்கும் பல நிர்ப்பந்தம், பலவந்தம் எந்தவகையிலும் பொருத்தமானதல்ல. அவர்கள் கேட்காமல் விரும்பிக் கொடுத்து அதை ஆணைப்பெற்ற குடும்பம் ஏற்றுக் கொண்டால் அது உண்மையான அன்பளிப்பு நன்கொடையாகும். அத்துடன், இந்த அன்பளிப்பை ஏன் பெண்ணைப் பெற்ற குடும்பம் தனித்துச் செய்ய வேண்டும். இரு பக்கத்தாரும் ஒன்றாக அன்பளிப்பை எதிர்காலத்தில் திருமணம் செய்யப் போகும் ஆண், பெண்களுக்குக் கையளிக்கலாமே. அது அவர்களது வாழ்வை மலரச் செய்யும். இதிலும் ஆணாதிக்கம் பெண்ணடிமை என்பன தலைகாட்டுவதை நாம் அவதானிக்கலாம்.
இன்னொரு விதத்தில் பார்க்கப் போனால், தனிக் குடும்பமாக விடப்படும் இளம் தம்பதியினர் வாழ்க்கை நடத்த இதை ஒரு முதலீடாகக் கருதலாம் இருந்தும் பல குடும்பங்களில் பெற்றோர் இதை அபகரித்துக் கொள்வதைக் காண முடிகிறது. பெற்றோரின் கடன் தொல்லைகளைத் தீர்க்க இதை ஒரு கருவியாகப் பாவிக்கின்றனர். எனவே, பெற்றோரே சீதனத்தை விழுங்க முனைகின்றனர். இது தவறான ஒரு நடவடிக்கையாகும். புதுத் தம்பதியர்களுக்குச் சென்றால் அது அவர்களுக்கு நிதி வள உதவியாக இருக்கும். பெற்றோருக்குச் செல்வது கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும். பெற்றோரும் தமது வாழ்க்கை அந்தஸ்த்தை உயர்த்த இந்தச் சீதனத்தைப் பயன்படுத்தக் கூடாது. அவர்கள் தமது எதிர்காலப் பிள்ளைகளின் வாழ்விற்கு உதவ முன் வர வேண்டும். அவர்கள் பெயரில் வங்கியில் போடலாம் அல்லது அவர்களிடமே சீதனத்தைக் கையளிக்கலாம்.
மேலும், நன்கொடை என்னும் பதமும் இன்று சரியான முறையில் பயன்படுத்தப்படவில்லை. ஆண் உள்ள குடும்பம் ஏனைய சகோதரிகளை விலைப்படுத்துவதற்காக அவர்களுக்கும் நன்கொடை கேட்கின்றது. எனவே, ஆண் தனக்கு சீதனம் பெறுவது மாத்திரமன்றி தனது சகோதரிகளையும் கரை சேர்க்க நன்கொடை கேட்கின்றான். இது உண்மையில் ஒவ்வாத ஒரு செயன்முறையாகும். அந்த ஆணானவன் பிறரது தயவின்றி தானே தன் சகோதரிகளைக் கவனிக்க வேண்டும். இதற்காக பெண் வீட்டாரைப் பலவந்தப்படுத்தி இந்த நன்கொடையை பெறக் கூடாது. நன்கொடை தாமாகவே நினைத்து வழங்கக் கூடியதாக இருக்க வேண்டும். மேலும், பொருளாதார வளமுடையோர் மாத்திரம் இதைச் செய்யக் கூடியதாக இருக்க வேண்டும். இதை கேட்டு வாதிட்டு வாங்கும் பொருளாகப் பயன்படுத்த முனையக்கூடாது.
மேலும், உழைக்கும் பெண்கள் கூட சீதனக் கட்டுப்பாட்டுக்குள் உட்படுகின்றார்கள். அவர்கள் செய்யும் வேலைக்கேற்ப பல மடங்கு சீதனம் கோரப்படுகின்றது. ஏன் இந்த தண்டனை? சிங்கள குடும்பங்களில் பார்த்தால் ஆண், பெண் இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்கின்றனர். திருமணமாகின்றனர். அங்கு அன்பளிப்பாக விருப்பத்துடன் தான் நடைபெறுகின்றன. எமது தமிழ்ச் சமுதாயத்தில் மாத்திரம் காதலித்த பின்பும் சீதனத்திற்காக பலவந்தப்படுத்துகின்றனர். காதலித்தால் அதற்கேற்ப விட்டுக் கொடுப்பு வேண்டும். எனவே, காதலித்த பின் பலவந்தப்படுத்தும் செயல் ஒரு துரோகச் செயலாகும். எனவே, பண மோகம், பேராசை தான் இந்த சீதனக் கொடுமைக்குக் காரணமாக அமைகிறது. நாம் சாஸ்திரப்படி பொருத்தம் பார்க்கின்றோம். இந்தப் பொருத்தம் சரிவர இருப்பின் ஏன் இந்த சீதனக் கொடுமை? இது உண்மையில் ஒரு அரண்டலல்லவா?
எனவே, இந்தச் சீதனக் கொடுமை பெண்ணை அடிமைப்படுத்துகிறது. ஆனால், ஒன்றை நாம் உணர மறுத்து விட்டோம். சீதனம் பெறுவதனால் எமது தன்மானத்தை இழந்து நாம் அடிமையாகின்றோம் என்பதை மறந்து விட்டோம். பெண் மணம்முடித்த பின் பணப்பேராசை பிடித்தவன் என நினைப்பாள் என்பதை நாம் மறந்து விட்டோம். உண்மையில் சீதனம் பெற்றால் கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்க வேண்டும். இது ஆணுக்கு ஒரு கடனாக இருக்க வேண்டுமே ஒழிய இதைச் சீதனமாக சுரண்ட இடமளிக்கக் கூடாது.
இப்படியான சீதனமுறை ஒழிக்கப்பட வேண்டும். இதற்கு சமூகமானது ஒருங்கிணைந்து முன் வர வேண்டும். பொருளாதார வளமுடையோர் விரும்பிக் கொடுப்பதை கொடுக்கலாம். ஆனால், ஏழை எளியவர்கள் பலவந்தப்படுத்தப்படுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். எனவே, எமது மனமாற்றம் மிக அவசியமாகும். இதற்கு அனைவரும் ஒன்று திரண்டு இந்த சீதனப் பேயைத்துரத்த வேண்டும். வாழப் போகின்றவர்கள் அவர்கள். அவர்களை ஏன் பெற்றோர் பலவந்தப்படுத்தி நிர்ப்பந்திக்க வேண்டும்? எனவே, சீதனம் வாங்கக் கூடாது எனச் சட்டம் இறுக்கமாக உருவாக்கப்பட வேண்டும். சரிவர இச் சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும் என்று பணக்கொடைத் தடைச்சட்டமும் அர்த்தமற்றதாகி விட்டது. மக்கள் மனமாரத் தவறின் சட்டம் தான் பாதுகாப்புக் கொடுக்க வேண்டும். பெண்களே விழித்தெழுங்கள்! உங்கள் நாயகர்களை சீதனம் இன்றிப் பெறப்பாடு பாடுங்கள்! காதலியுங்கள் ஆனால், சீதனப் பலவந்தத்தை தவிர்த்து விடுங்கள். எனவே, சீதன ஒழிப்பு சம்பந்தமாக சீர்திருத்த அமைப்புகள் எம்மிடையே ஏற்பட வேண்டும். நாம் எமது உணர்வு பூர்வமான எண்ணங்களை வெளிக்கொணர்ந்து சீதனத்தை ஒழிக்க வேண்டும். மாறும் இவ்வுலகில் சீதனத்தை ஒழிக்க நாம் ஒன்று திரள்வோமாக! ஆண்களே சிந்தியுங்கள் எமது எதிர்கால நலனை நோக்காகக் கொண்டு சீதனக் கொடுமையைக் கை விடுங்கள் பெண்களைக் கதறிக் கொண்டு கல்யாணம் முடிக்கச் செய்யாதீர்கள். அவர்களைச் சந்தோஷமாக மண முடித்து வையுங்கள். சீதனம் வேண்டாம் என்ற தாரக மந்திரத்தை இனி நாம் செபிப்போமாக! ஒன்று திரண்டு நாம் அனைவரும் எமக்குள் மனமாற்றத்தை ஏற்படுத்தி சீதனத்தை தவிர்ப்போமாக! ஒழிக சீதனக் கொடுமை வாழ்க மணமக்கள்