Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Tuesday, March 11, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Editorial
வீதி விபத்துக்கள்
[11 - March - 2008] [Font Size - A - A - A]
இலங்கையில் வீதி விபத்துகள் மற்றும் போக்குவரத்து ஒழுங்கு விதிகள் மீறல் சம்பவங்கள் கடுமையாக அதிகரித்திருக்கின்றன. வீதி விபத்துகள் இப்போது விபத்து என்ற அர்த்தத்துக்கு அப்பால் ஒரு நோய் போன்று பரவ ஆரம்பித்து விட்டதோ என்று எண்ண வேண்டியிருப்பதாக அண்மையில் மருத்துவ நிபுணர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார். வீதி விபத்துகள் அகால மரணங்களுக்கான பிரதான காரணிகளில் ஒன்றாக மாறிவிட்டதால் வீதிப் பாதுகாப்புக் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு உருப்படியான நடவடிக்கைகளை பொலிஸ் திணைக்களம் எடுக்க வேண்டியது அவசியமாகிறது. பாரதூரமானதும் மரணங்களை விளைவிக்கின்றதுமான வீதி விபத்துகளுக்கு பிராதான காரணம் கட்டுமீறிய வேகத்தில் வாகனங்களை ஓட்டுவதேயாகும். இத்தகைய விபத்துக்களைத் தடுப்பதற்கு சட்டத்தை அமுல் செய்யும் அதிகாரிகளுக்கு பொதுமக்களின் முழுமையான ஒத்துழைப்புத் தேவை. அதீத வேகத்தில் வாகனங்களைச் செலுத்தும் சாரதிகளுக்கு பொதுமக்கள் ஊக்கம் கொடுக்கக் கூடாது. அவ்வாறு வாகனங்களைச் செலுத்தும் சாரதிகளிடம் ஆட்சேபனையைத் தெரிவிப்பதற்கான உரிமை தங்களுக்கு இருப்பதை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும். தங்களது வாகனம் பாரதூரமான விபத்தொன்றில் சிக்கிக் கொண்டதும் சம்பவ இடத்திலிருந்து சாரதிகளும் நடத்துனர்களும் தலைமறைவாகுவது வழமையான காரியமாகிவிட்டது. இதனால், சட்டத்தை அமுல் செய்யும் அதிகாரிகள் தங்கள் கடமைகளைச் செய்வதில் பெரும் நெருக்கடியை எதிர் நோக்குகிறார்கள். அவ்வாறு தப்பியோடும் சாரதிகளை தங்களால் கண்டுபிடிக்க இயலாமல் இருப்பதாக வாகனச் சொந்தக் காரர்களும் அடிக்கடி பொலிஸாரிடம் கூறுவதைக் காணக் கூடியதாக இருக்கிறது. தவறிழைத்த பஸ் சாரதிகளுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்படுகின்ற போதிலும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அப்பிடியாணைகளை நிறைவேற்ற முடியாமல் இருப்பதாகப் பொலிஸார் கூறுகிறார்கள். இதற்குக் காரணம் பெரும்பாலான பஸ் சாரதிகள் வேறுபட்ட வாசகங்களுடன் தற்காலிக அனுமதிப்பத்திரங்களை வைத்திருப்பதால் அவர்களின் இருப்பிடங்களைப் பொலிஸாரால் கண்டுப்பிடிக்க முடியாமல் இருக்கிறது. வீதிவிபத்துகள் தொடர்பான நெருக்கடிகளைக் கையாளும் பொறுப்பை வெறுமனே வீதி ஒழுங்கு மற்றும் பாதுகாப்புடன் தொடர்புடைய விவகாரமாக பொலிஸாரிடம் மாத்திரம் விட்டு விட முடியாத அளவுக்கு அந்த நெருக்கடி பாரதூரமானதாகிவிட்டது. இதற்கு பொது மக்களின் ஒத்துழைப்பு மிகமிக அவசியமானதாகும். வீதிப்பாதுகாப்பு தொடர்பில் மக்கள் மத்தியிலான விழிப்புணர்ச்சியை அதிகரிப்பதற்கு விரைவான செயற்றிட்டங்களை முன்னெடுப்பதன் மூலமாகவே இது விடயத்தில் ஆக்கபூர்வமான முறையில் மக்கள் ஒத்துழைப்பைப் பெறமுடியும். பாதுகாப்பற்ற வீதிப் போக்குவரத்துகள் மக்கள் உடல் ஆரோக்கியத்தைப் பெரிதும் பாதிக்கும் பிரதான காரணிகளில் ஒன்றாக விளங்குவதாக உலக சுகாதார நிறுவனம் பல தடவைகள் அதன் அறிக்கைகளில் சுட்டிக் காட்டியிருக்கிறது. உலகில் வீதி விபத்துகளினால் வருடாந்தம் 12 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் பலியாகிறார்கள். தினமொன்றுக்கு 3 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் மரணமடைகிறார்கள். உலகம் பூராவும் வருடாந்தம் 5 கோடிக்கும் அதிகமான மக்கள் விபத்துக்களினால் காயமடைகிறார்கள். 15-44 வயதுக்கு இடைப்பட்ட வயதினரான ஆண்களைப் பொறுத்தவரை அகால மரணங்களுக்கான முக்கிய காரணிகளில் எயிட்ஸ் நோய்க்கு அடுத்தபடியாக வீதி விபத்துகளே விளங்குகின்றன. உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படாத பட்சத்தில் 2020 ஆம் ஆண்டளவில் வீதி விபத்துகளின் விளைவான மரணங்களும் பாதிப்புகளும் சுமார் 70 சதவீதத்தினால் அதிகரிக்கும் ஆபத்து இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் அறிக்கையொன்றில் குறிப்பிட்டிருந்தது. பாரதூரமான விபத்துகள் இடம்பெற்றதும் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் எதிர்காலத்தில் அத்தகைய விபத்துகள் ஏற்படாமல் இருப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியம் குறித்து உரக்கப் பேசுவார்கள். பின்னர் நாளடைவில் எல்லாமே அடங்கிப் போய் விடும். சம்பவத்துக்குப் பின்னர் சகலரும் புத்திசாலிகள் என்ற தோரணையிலான இத்தகைய அணுகு முறைகள் கைவிடப்பட்டு வீதிப் பாதுகாப்பு குறித்து சமுதாயத்தின் சகல மட்டங்களிலும் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் செயலில் இறங்க வேண்டும்.

Email this page Your Opinion Print this page
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com