சர்வதேச விண்வெளி ஆய்வுமையத்துக்குத் தேவையான 20 தொன் நிறையுடைய ஐரோப்பாவின் முதல் ரொக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.
அரியானே - 5 என அழைக்கப்படும் இந்த ரொக்கெட் தென் அமெரிக்காவின் வடகிழக்கு கடலோரத்திலுள்ள பிரெஞ் குயானாவில் உள்ள கோரூ என்ற இடத்திலுள்ள ஏவுதளத்திலிருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு 1.03 மணியளவில் ஏவப்பட்டுள்ளது.
மேலும் ஒட்சிசன் வாயு நிரப்பப்பட்ட சிலின்டர்கள், எரிபொருள், உணவு மற்றும் விண்வெளி வீரர்களுக்கான உடைகள் போன்ற 9 தொன் நிறையுடைய பொருட்கள் இவ்விண்கலத்தில் அனுப்பப்பட்டுள்ளன.
அரியானே -5 என்ற ரொக்கெட் சுமந்து சென்ற ஜுலஸ் வெர்னே என்ற விண்கலம் புறப்பட்டு ஒருமணிநேரத்தில் ரொக்கெட்டிலிருந்து பிரிந்து பூமியின் சுற்றுவட்டப் பாதையை சென்றடைந்துள்ளது.
மேலும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரான்ஸின் பிரபல எழுத்தாளர் ஜுல்ஸ் வேர்னேயின் நினைவாகவே இவ்விண்கலத்துக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.
ஏப்ரல் மூன்றாம் திகதி வரை சுற்றுவட்டப் பாதையில் காத்திருக்கும் இவ்விண்கலம் அன்றைய தினமே சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துடன் இணையும்.
இவ்விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டமை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்திற்கு பாரிய சவாலாக அமைந்துள்ள விடயமாகும்.
எதிர்வரும் 2010 ஆம் ஆண்டில் நிறைவுற இருக்கும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தின் கட்டுமானப் பணிகளிற்குரிய பொருட்களை விநியோகிப்பதற்காகவே இவ்விண்கலம் ஏவப்பட்டுள்ளது.
இதேவேளை, இவ்விண் கலத்தில் மனிதர்கள் எவரும் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.