Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Tuesday, March 11, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Foreign News
மலேசியாவில் அப்துல்லா அஹ்மட் பதாவி மீண்டும் பிரதமராக பதவிப்பிரமாணம்
[11 - March - 2008] [Font Size - A - A - A]
மலேசியாவில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆளும் கூட்டணிக் கட்சி பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ள இரு தினங்களில் அந்நாட்டு பிரதமர் அப்துல்லா அஹ்மட் பதாவி புதிய பதவிக் காலத்திற்கான சத்தியப் பிரமாணத்தை மேற்கொண்டுள்ளார்.

கடந்த அரை நூற்றாண்டுக்குப் பின்னர் ஆளும் பரிசான் கூட்டணிக் கட்சி தேர்தலில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளதுடன், மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை இழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலைத் தொடர்ந்து பிரதமர் பதாவியை இராஜிநாமா செய்யுமாறு பல தரப்புக்களிடமிருந்தும் அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ள நிலையிலேயே இவர் சத்தியப் பிரமாணத்தை மேற்கொண்டுள்ளார்.

மலேசிய மன்னரின் முன்னிலையில் புதிய ஐந்தாண்டு பதவிக் காலத்திற்கான சத்தியப் பிரமாணத்தை மேற்கொண்ட பதாவி எனது கடைமைகளை நேர்மையாகவும் திறமையாகவும் முன்னெடுப்பேன் என உறுதியளிக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மலேசியாவின் முன்னாள் பிரதமர் மஹாதிர் மொஹமட் அப்துல்லா, பதாவி பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்;

ஆளும் கூட்டணிக்கு ஏற்பட்ட தோல்விக்கு முழுப் பொறுப்பையும் அப்துல்லா பதாவிதான் ஏற்க வேண்டும். அவரை பிரதமராகவும் எனது அரசியல்வாரிசாகவும் அறிவித்ததற்காக நான் வருந்துகிறேன். தனது மருமகனுக்கு பல்வேறு வகைகளில் ஆதாயம் தேடும் வேலையை அப்துல்லா பதாவி செய்து வருகிறார். இதுபோன்ற பல்வேறு காரணங்களால் மக்களின் கடும் அதிருப்திக்கு அப்துல்லா பதாவி ஆளாகியுள்ளார்.

எனவே பிரதமர் பதவியிலிருந்து அவர் விலகுவதே நல்லது. பிரதமர் பதவியை துணைப் பிரதமர் நஜீப் ஏற்கலாம் என அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், ஆளும் கூட்டணிக்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவுக்காக தார்மிக அடிப்படையில் பதவிவிலகப் போவதில்லை என்று பிரதமர் அப்துல்லா பதாவி தெரிவித்தார்.

மலேசிய நாடாளுமன்றத்துக்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் கடந்த சனிக்கிழமை தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 222 தொகுதிகளில் 139 இடங்களை ஆளும் பரிசான் தேசிய கூட்டணியும் 82 இடங்களை எதிர்க்கட்சிக் கூட்டணியும் கைப்பற்றின. ஓரிடத்தில் மறுவாக்குப் பதிவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெறுவது நிச்சயம் என எதிர்பார்த்திருந்த ஆளும் கூட்டணிக்கு இந்தத் தேர்தல் முடிவுகள் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளன. சாதாரண பெரும்பான்மை பலமே ஆளும் கூட்டணிக்கு கிடைத்துள்ளது. கடந்த தேர்தலில் 19 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்ற எதிர்க்கட்சிகூட்டணி இந்தத் தேர்தலில் 82 இடங்களைப் கைப்பற்றியுள்ளது.

ஆளும் பரிசான் தேசிய கூட்டணியில் அங்கம் வகித்துவந்த மலேசியன் இந்தியன் காங்கிரஸ் தலைவரும் அமைச்சராக இருந்தவருமான சாமிவேலு அதிர்ச்சி அளிக்கும் வகையில் தோல்வி அடைந்தார். சுங்கெய் சிபுட் தொகுதியில் போட்டியிட்ட இவரை, டி.ஜெயக்குமார் என்பவர் 1821 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

இந்து உரிமைகள் இயக்கத் தலைவர்களில் ஒருவரும் சிறைவாசம் அனுபவித்து வருபவருமான எம்.மனோகரன் இத்தேர்தலில் வெற்றிபெற்றார்.

ஆளும் கட்சி கூட்டணிக்கு தலைமை வகித்துவரும் பிரதமர் அப்துல்லா பதாவியும் துணைப் பிரதமர் நஜீபும் வெற்றி பெற்றுள்ளனர். 14 கட்சிகள் அங்கம் வகித்துவரும் ஆளும் கூட்டணியை சேர்ந்த பல முக்கிய பிரமுகர்கள் இத்தேர்தலில் படுதோல்வி அடைந்தனர்.

சாமிவேலு தலைமையிலான மலேசியன் இந்தியன் காங்கிரஸ் 9 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் மூன்று இடங்களில் மட்டுமே அக்கட்சி வெற்றிபெற்றது. இதேபோன்று மாநிலங்களுக்கான 19 தொகுதிகளில் போட்டியிட்டு 7 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது.

இந்து உரிமைகள் இயக்கத்தினர் நடத்திய போராட்டத்துக்கு சாமிவேலு ஆதரவு அளிக்காததே இத்தோல்விக்கு முக்கிய காரணமாகும். இந்த அதிருப்தியால்தான் ஆளும் கூட்டணிக்கு மூன்றில் இருபங்கு பெரும்பான்மை பலம் கிடைக்காமல் போய்விட்டது. பினாங்கு, செலங்கோர், கெதா,பெராக் ஆகிய நான்கு மாநிலங்களை ஆளும் கூட்டணிக் கட்சி இத்தேர்தலில் இழந்துவிட்டது. முதல்முறையாக இந்த மாநிலங்களில் எதிர்க்கட்சி கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இதேபோன்று கெலாண்தான் மாநிலத்தையும் எதிர்க்கட்சி கூட்டணி கைப்பற்றியுள்ளது.

Email this page Your Opinion Print this page
சீக்கிய மாணவனின் தலைமுடியை வெட்டிய பாகிஸ்தான் மாணவனுக்கு நான்காண்டுகள் சிறை
மலேசியாவில் அப்துல்லா அஹ்மட் பதாவி மீண்டும் பிரதமராக பதவிப்பிரமாணம்
மத்திய கிழக்கிற்கான அமைதி உடன்படிக்கையை தனது பதவிக்காலத்துள் ஏற்படுத்துவதென புஷ் உறுதி
ரஷ்ய ஜனாதிபதியாக மிட்விடேவ் மே 7 இல் அதிகாரபூர்வமாக பதவியேற்பு
ஐரோப்பாவின் அரியானே -5 ரொக்கெட் வெற்றிகரமாக விண்ணிற்கு ஏவப்பட்டது
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com