வடக்கே நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்ற கடும் மோதல்களில் எட்டுப் படையினர் கொல்லப்பட்டதுடன் 21 படையினர் படுகாயமடைந்துள்ளதாக படையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம், இந்த மோதல்களில் 20க்கும் மேற்பட்ட விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டும் பெருமளவானோர் காயமடைந்துள்ளதாகவும் படையினர் தெரிவித்துள்ளனர்.
மன்னார் இலந்தைவன் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் நடைபெற்ற மோதலில் மூன்று படையினர் கொல்லப்பட்டும் 12 படையினர் படுகாயமடைந்துமுள்ளனர்.
இங்கு இடம்பெற்ற அதிரடித் தாக்குதலில் புலிகளின் எட்டு பதுங்கு குழிகளைத் தாங்கள் கைப்பற்றியுள்ளதாகவும் படையினர் தெரிவித்தனர்.
மன்னார் பரப்பான்கண்டலில் முற்பகல் 11 மணியளவில் நடைபெற்ற மோதலில் இரு படையினர் படுகாயமடைந்துள்ளனர்.
அடம்பன் பகுதியில் நண்பகல் 12 மணியளவில் கடும் மோதல் நடைபெற்றது. இதில் மூன்று படையினர் படுகாயமடைந்தனர்.
மடுவுக்கு கிழக்கே முற்பகல் 11.15 மணியளவில் நடைபெற்ற கடும் மோதலில் மூன்று படையினர் கொல்லப்பட்டும் நான்கு படையினர் படுகாயமடைந்துமுள்ளனர்.
இதேநேரம், வவுனியா முள்ளிக்குளம் பகுதியிலும் யாழ். குடாநாட்டில் நாகர்கோவில் பகுதியிலும் நடைபெற்ற மோதல்களில் தலா ஒருவர் கொல்லப்பட்டதாகவும் படையினர் தெரிவித்தனர்.
இந்த மோதல்களில் புலிகள் தரப்பில் 20க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டும் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் படையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, ஞாயிற்றுக்கிழமை மன்னாரில் அதிகாலை முதல் நான்கு முனைகளில் படையினர் ஒரே நேரத்தில் மேற்கொண்ட பாரிய முன்நகர்வு முயற்சிகளை தாங்கள் முறியடித்து படையினருக்குப் பலத்த உயிர்ச் சேதங்களை ஏற்படுத்தியுள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
சேத்துக்குளம் ஊடாக பாப்பாமோட்டைப் பகுதிக்கும் பரப்பான்கண்டல் பகுதியிலிருந்து காத்தான்குளம் நோக்கியும் பெரிய பண்டிவிரிச்சான் பகுதி நோக்கியும் மடுப்பகுதியிலிருந்து கீரிசுட்டான் பகுதி நோக்கியும் முன்னேற படையினர் மேற்கொண்ட முயற்சிகளே முறியடிக்கப்பட்டதாகப் புலிகள் தெரிவித்தனர்.