* தேர்தல் ஆணையாளருக்கு மு.கா. முறைப்பாடு
மட்டக்களப்பிலிருந்து எம்.ஏ.எம். நிலாம்
மட்டக்களப்பு கோரளைப்பற்று பிரதேச சபை ஏறாவூர்ப்பற்று பிரதேச சபைகளுக்கு நேற்று நடைபெற்ற வாக்களிப்பில் இடம்பெற்ற பல்வேறு முறைகேட்டு சம்பவங்கள் தொடர்பாக வாழைச்சேனை, ஏறாவூர் பொலிஸ் நிலையங்களில் செய்யப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லையென ஷ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ரி.ஹஸன் அலி தெரிவித்தார்.
இது தொடர்பில் மட்டக்களப்பு பிரதி பொலிஸ்மா அதிபர் நாணயக்கார மற்றும் தேர்தல் ஆணையாளர் ஆகியோருக்கு எழுத்து மூலம் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
கோரளைப்பற்று பிரதேச சபைக்கான வாக்களிப்பின் போது பல இடையூறுகள் இடம்பெற்றதாகவும் மொத்தமாக 8 முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்ட போதிலும் அவை தொடர்பில் பொலிஸார் எந்தவிதமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை எனவும் ஹஸன் அலி தெரிவித்தார்.
வாக்குச்சாவடிகளுக்கு கட்சியின் செயலாளர் என்ற அடிப்படையில் தனக்கு போக உரிமை இருந்த போதிலும் அரசாங்க அதிபர் பிரதித் தேர்தல் ஆணையாளர் ஆகியோர் வாக்களிப்பு நிலையங்களுக்கு போகவிடாமல் தடுத்ததோடு அமைச்சரவை அந்தஸ்தே இல்லாத அமைச்சர் அமீர் அலிக்கு மட்டும் அவரது ஆதரவாளர்கள் சகிதம் அப்பகுதிக்குச் செல்ல அனுமதித்துள்ளனர்.
நேற்று மாலை மூன்று மணிக்குப் பின்னர் வாக்களிப்பு நிலையத்துக்கு எவரும் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அந்த நேரத்தில் வாக்கு மோசடிகள் இடம்பெற்றிருக்கலாமென சந்தேகம் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன், நேற்று அதிகாலை மூன்று மணிக்கு முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்கள் கபூரின் இல்லத்துக்குச் சென்ற அமைச்சரின் ஆதரவாளர்கள் கபூரின் வீட்டின் மீது கிரனைட் குண்டு வீசித் தாக்கியதோடு அவரது பாதுகாப்பு அதிகாரியான பொலிஸ் கான்ஸ்டபிள் ஜயரத்னவும் காயமடைந்துள்ளார்.
நேற்று முற்பகல் நௌஷாத் என்ற வேட்பாளரின் வீட்டுக்குச் சென்ற அமைச்சர் அமீர் அலி நௌஷாதின் பாதுகாப்பு அதிகாரியான ரபீக்கைத் தாக்கியுள்ளார். இதனை முறைப்பாடு செய்ய பொலிஸ் நிலையத்துக்குச் சென்ற ரபீக்கை பொலிஸ் உயரதிகாரி கடுமையாக எச்சரித்து சீருடையை கழற்றுவதாக எச்சரித்துள்ளார்.
இவை குறித்து உடனடியாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாணயக்காரவிடம் முறையிடப்பட்டுள்ளது.
நேற்றைய தேர்தலின் போது கோரளைப் பற்றிலும் ஏறாவூர் பற்றிலுமே ஆளும் தரப்பினரால் அடாவடித்தனங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டதாகவும் பாதிக்கப்பட்டவர்களின் முறைப்பாடுகள் ஏற்கப்படவில்லை எனவும் மு.கா.செயலாளர் ஹஸன் அலி தேர்தல் ஆணையாளருக்கும் பொலிஸ் மா அதிபருக்கும் முறைப்பாடு செய்துள்ளார்.