Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Tuesday, March 11, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Main News
50 சதவீத வாக்குப் பதிவு அசம்பாவிதங்கள் இல்லை
[11 - March - 2008] [Font Size - A - A - A]
மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 வருடங்களின் பின்னர் நேற்று இடம்பெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மொத்த வாக்காளரில் 50 சதவீதத்திற்கும் குறைவானோரே வாக்களித்திருப்பதாக சுயாதீனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மட்டக்களப்பு மாநகரசபை உட்பட 9 உள்ளூராட்சி மன்றங்களுக்கு 101 வேட்பாளர்களைத் தெரிவுசெய்வதற்கான வாக்களிப்பு நேற்றுக் காலை 7 மணிக்கு ஆரம்பமானபோது, மிகக் குறைந்தளவிலான வாக்காளர்களே தமது வாக்குகளைப் பதிவுசெய்ததாகவும் பின்னர் சிறிதளவு சுறுசுறுப்பாக வாக்குப் பதிவு இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் வட கிழக்கில் தமிழ் மக்களைப் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் பெரிய கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தேர்தலில் போட்டியிடாமலும் தேர்தல் நீதியான முறையில் இடம்பெறாதென முன்கூட்டியே சில கட்சிகளும் மனித உரிமை அமைப்புகளும் கடும் எதிர்ப்புத் தெரிவித்துவரும் நிலையில் அரசாங்கத்துக்கு தென்னிலங்கையிலும் வெளியுலகிலும் தனது செல்வாக்கை நிலைநாட்டுவதற்கு மிக முக்கியமான விடயமாக இருந்த இத் தேர்தலில் 50 சதவீதமான வாக்காளர்களே வாக்களித்துள்ளனர்.

`சராசரியாக 50 சதவீதமானோரே வாக்களித்திருப்பதாக தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்ட `பவ்ரல்' அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கிங்ஸ்லி ரொட்ரிகோவும் சி.எம்.ஈ.வி.யின் ஏற்பாட்டாளர் சுனந்த தேசப்பிரியவும் நேற்று மாலை தினக்குரலுக்குத் தெரிவித்தனர்.

களுவாஞ்சிக்குடிப் பகுதியில் 15 சதவீதமான வாக்குகளே அளிக்கப்பட்டதாக கிங்ஸ்லி ரொட்ரிகோ கூறினார். வாக்களிப்பு சுமுகமாக இடம்பெற்றது. கடந்த கால தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் வன்முறைகள் குறைவாகவே பதிவுசெய்யப்பட்டுள்ளது. வாழைச்சேனைப் பகுதியில் அமைச்சர் ஒருவரின் செயற்பாடுகள் குறித்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அது தொடர்பாக ஆராய்ந்து வருகிறோம். ஆனாலும், வாக்களிப்பினை ரத்துச் செய்யுமளவுக்கு நிலைமை பாரதூரமானதாக இல்லை. மக்கள் பெரிதாக ஆர்வம் காட்டவில்லையாயினும் முழுமையாக நிராகரிக்கவில்லை. 45%,50% வாக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. நாங்கள் நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருகிறோம் என்று கூறினார்.

சுனந்த தேசப்பிரிய

சி.எம்.ஈ.வி.யின் ஏற்பாட்டாளர் சுனந்த தேசப்பிரிய கருத்துத் தெரிவிக்கையில்; "51 சதவீதமானோர் வாக்களிப்பில் பங்கேற்றுள்ளதாக அறியவருகிறது. நாங்கள் வெறும் அவதானிகளே. மக்கள் முழுமையாக பங்குபற்றாவிடிலும் வாக்களிப்பில் கலந்துகொண்டுள்ளனர். வன்முறைகளும் குறைவாகவே பதிவுசெய்யப்பட்டுள்ளன" என்றார்.

இதேவேளை, அரச சார்பற்ற நிறுவனங்களின் தகவலின் பிரகாரம் மக்கள் நடமாட்டம் வீதிகளில் குறைவாக இருந்ததாகவும் எங்கும் படையினரின் நடமாட்டமே அதிகளவில் காணப்பட்டதாகவும் தெரியவருகிறது.

ஆரம்பத்தில் வாக்களிப்பு மந்தகதியில் இடம்பெற்றாலும் பின்னர் வாக்களிப்பு சுறுசுறுப்பாக இடம்பெற்றதாகவும் தமது வாக்குகளை வேறு எவரும் பாவித்துவிடக் கூடாதென்பதற்காகவே மக்கள் பலர் வாக்களிப்பு நிலையத்திற்கு பின்னர் அதிகளவில் சென்றதாகவும் அரசசார்பற்ற நிறுவனத் தகவல் தெரிவித்தது.

நேற்றைய தேர்தலில் 6 அரசியல் கட்சிகள், 22 சுயேச்சைக் குழுக்கள் 831 வேட்பாளர்களை களத்தில் இறக்கியிருந்தன. 2,70, 471 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.

280 வாக்களிப்பு நிலையங்களில் வாக்குப் பதிவு இடம்பெற்றது. தேர்தல் முடிவுகள் இச்செய்தி எழுதுகையில் வெளிவரவில்லை. நேற்று இரவு 8 மணிக்கு பின்னர் தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் வெளியிடப்படவிருந்தன. நள்ளிரவுக்கு முன் முடிவுகள் வெளிவருமென அறிவிக்கப்பட்டிருந்தது.

Email this page Your Opinion Print this page
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com