அவுஸ்திரேலிய தொடர் குறித்து எதுவும் பேசக்கூடாதென இந்திய வீரர் ஹர்பஜன் சிங்கிற்கு வாய்ப்பூட்டு போடப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங், அவுஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் நிறைய சர்ச்சைகளை சந்தித்தார். முக்கோணப் போட்டியில் வெற்றியுடன் திரும்புகையில், அவுஸ்திரேலிய வீரர்கள் ஹைடனை மிகப்பெரிய பொய்யர் என்றும், கில்கிறிஸ்ட் களத்தில் ஒன்றும் யோக்கியமானவர் கிடையாது என்றும் அங்குள்ள பத்திரிகைக்கு ஹர்பஜன் சொன்னதாக செய்திகள் வெளியாயின.
இதனை ஹர்பஜன்சிங் திட்டவட்டமாக மறுத்தார். இருப்பினும் ஹர்பஜன்சிங் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அவுஸ்திரேலிய கிரிக்கெட்சபை இந்திய கிரிக்கெட்சபைக்கு உடனடியாக கடிதம் எழுதியது. அதில் `நடந்ததெல்லாம் போதும். ஹர்பஜன்சிங் இனி மேலும் எதுவும் கிளறமாட்டார் என்று நீங்கள் (இந்திய சபை) உறுதியளித்தும் அவர் நினைத்தபடி எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார். இதற்கு எப்போது தான் முடிவு? இது பற்றி அவரிடம் உங்களால் பேச முடியுமா?' என்று கடிதத்தில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபைத் தலைமை நிர்வாகி சுதர்லாண்ட் காரசாரமாக குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் இந்தப் பிரச்சினை குறித்து இந்திய கிரிக்கெட் சபைச் செயலாளர் நிரஞ்சன் ஷாவிடம் கேட்டபோது, `அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையிடமிருந்து ஹர்பஜன்சிங் பற்றி ஈ-மெயிலில் கடிதம் வந்தது உண்மைதான். இதையடுத்து, இனி அவுஸ்திரேலிய தொடர் பற்றி பத்திரிகைகளிடம் எதுவும் பேசக்கூடாது என்று ஹர்பஜன்சிங்கிடம் கூறியிருக்கிறோம். அவரும் அதை ஏற்றுக்கொண்டிருக்கிறார்' என்றார்.