* வேதனையுடன் கேள்வி எழுப்புகிறார் கங்குலி
ஓராண்டில் சுமார் 1300 ஓட்டங்கள் குவித்தும் இந்திய ஒருநாள் போட்டி அணியிலிருந்து நீக்கிவிட்டார்கள். இதைவிட அணியில் இடம்பெற என்ன தேவையென்று எனக்குத்தெரியவில்லையென்று கங்குலி வேதனையுடன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கப்டன் சவுரவ் கங்குலி மீண்டும் ஒருநாள் போட்டி அணியில் இடம்பிடிக்க போராடி வருகிறார். 15 மாத இடைவெளிக்குப் பின் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மீண்டும் ஒருநாள் போட்டி அணிக்கு திரும்பிய கங்குலி அது முதல் அபாரமாக ஆடி வந்தார். ஆனால், அவுஸ்திரேலியாவில் நடந்த முக்கோண ஒருநாள் போட்டித் தொடரில் கங்குலிக்கு இடம் கிடைக்கவில்லை.
சிரேஷ்ட வீரரான கங்குலிக்கு களத்தடுப்பு செய்வதில் குறைபாடு இருப்பதால் கழற்றி விடப்பட்டதாக தகவல்கள் வெளியாயின. கடந்த ஆண்டு மட்டும் அவர் ஒருநாள் போட்டியில் 32 போட்டிகளில் 1240 ஓட்டங்கள் (சராசரி 44.28) குவித்தார்.
இந்நிலையில் தென் ஆபிரிக்காவுடனான டெஸ்ட் தொடருக்காக பெங்களூரில் நடந்த உடல் தகுதி சோதனையில் வெற்றி பெற்ற கங்குலி அதன் பின் கூறியதாவது;
ஒருநாள் போட்டியில் கடந்த ஆண்டில் மட்டும் கிட்டத்தட்ட 1300 ஓட்டங்கள் எடுத்தேன். இருப்பினும் அணியிலிருந்து நீக்கப்பட்டேன். அணியில் இடம்பிடிக்க இதைவிட வேறு என்ன செய்ய வேண்டும் என்பது உண்மையிலேயே எனக்குத் தெரியவில்லை. தவிர, அப்போது நான் நல்ல போர்மில் இருந்தேன். ஒருநாள் போட்டியில் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்தபோதிலும் நீக்கப்பட்டது வேதனை தருகிறது. இந்திய பிரிமியர் லீக் போட்டியில் ஜொலித்தால் அணியில் இடம்பெற முடியுமா என்பது தெரியவில்லை.
வருகிற 14 ஆம் திகதி தொடங்கும் தியோடர் கிண்ணத்திற்கான போட்டியில் விளையாட இருக்கிறேன். தென் ஆபிரிக்காவுடனான டெஸ்ட் தொடருக்கு பயிற்சி போட்டியாக இதை கருதுகிறேன். தென் ஆபிரிக்கத் தொடர் முக்கியத்துவம் வாய்ந்தது. சமீப காலமாக நாம் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடி வருகிறோம். தென் ஆபிரிக்காவுடனும் அதேபோல் செயல்பட்டால் நன்றாக இருக்கும்.
இந்திய பிரிமியர் லீக் 20 ஓவர் போட்டியில் முற்றிலும் புதுமையானது. இந்தப் போட்டியில் விளையாட ஆவலாக இருக்கிறேன். சர்வதேச வீரர்களுடன் இணைந்து விளையாட இளைஞர்களுக்கு இது ஒரு அற்புதமான வாய்ப்பு. இதன் மூலம் அவர்கள் நிறைய கற்றுக்கொள்ள முடியுமென்றார்.