Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, March 12, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Articles
யுத்தம் வேண்டாம் அரசியல் தீர்வு வேண்டும்
[12 - March - 2008] [Font Size - A - A - A]
* நாட்டு நலனில் அக்கறையுடையோர் உரத்து குரல் எழுப்பவேண்டிய தருணம் இது

வ.திருநாவுக்கரசு

மனிதஉரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா.அடங்கலாக சர்வதேச மட்டங்களிலிருந்து அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தப்படும் போதெல்லாம், அரச தரப்பினர் அவற்றை பெரும்பாலும் மறுதலிப்பதை அல்லது மூடி மறைப்பதைக் காணமுடிகிறது.

அது மட்டுமல்லாமல் குற்றம் சுமத்துபவர்கள் மீது பலத்த கண்டனங்கள் தெரிவிக்கப்படுவதையும் காணமுடிகிறது. அவர்கள் விடுதலைப் புலிகளுக்குச் சார்பானவர்கள் அல்லது புலிகளிடமிருந்து பணம் கறப்பவர்கள் எனவும் அரச மட்டங்களிலிருந்து கண்டனக்கணைகள் தொடுக்கப்படுவது வழக்கம்.

உதாரணமாக, ஐ.நா.அதிகாரிகள் சேர், ஜோன் ஹோம்ஸ் மற்றும் அலன் றொக் மீது காரசாரமான கண்டனங்கள் வெளிப்படுத்தப்பட்டன. ஐ.நா.அல்லது அதன் அதிகாரிகள் யாவரும் தேவதைகள் என்று நாம் கூற வரவில்லை.

அதேநேரத்தில், அவர்களைக் கடிந்து கொள்ளும்போது அது ஆதாரமற்றதென்றால் ஆத்திரத்தின் மேலீட்டினால் வெளிப்படுத்தப்படுபவையானால், அது நகைப்புக்குரியதாகிவிடும், முழுநாட்டுக்கும் அபகீர்த்தியானதாகி விடும்.

ஐ.நா.மனித உரிமைகள் சபையின் 7 ஆவது அமர்வுகள் தற்சமயம் ஜெனிவாவில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இடர் முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க தலைமையிலான தூதுக்குழு அவற்றில் பங்கு பற்றி வருகின்றது. அங்கே எந்த வட்டாரத்திலிருந்தாவது எழக்கூடிய குற்றச்சாட்டுகள் யாவும் தூக்கி வீசப்படவேண்டுமென அமைச்சர் சமரசிங்கவுக்கு தொலைபேசி மூலம் கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.

சர்வதேச மட்டங்களிலான குற்றச்சாட்டுகள் யாவும் சதி முயற்சிகளின் அடிப்படையிலானவை எனவும் அரசாங்கத்தின் மீது சேறு பூசுவதற்கான பிரயத்தனங்கள் எனவும் அரச தரப்பினால் அர்த்தம் கற்பிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறான அணுகுமுறை நாட்டுக்கு பயக்கப்போவது நன்மையா தீமையா என்பது பற்றி கிஞ்சித்தும் ஆராயப்படுவதாகத் தெரியவில்லை.

இலங்கை அரசாங்கத்தின் செவிகைக்கும் சில விடயங்கள் பிரித்தானிய மேல் (பிரபுக்கள்) சபையில் ஆபிரிக்கா, ஆசியா மற்றும் ஐ.நா.வுக்கான அமைச்சர் மல்லொக் பிறவுண் குறிப்பிட்டிருந்ததை சென்ற வாரக் கட்டுரையில் எடுத்துக்காட்டியிருந்தேன். மல்யொக் பிறவுண் சிலவேளைகளில் `சிவபூசைக்குள் கரடி' போல நடந்து கொள்பவராகவும் அதன் காரணமாக அவர் பரிகாசமாக புல்லொக் (Bullock) பிறவுண் என வர்ணிக்கப்படுபவர் எனவும் "சண்டேரைம்ஸ்" பத்தியாளர் நெவில் டி சில்வா தனது வாராந்த `லண்டனிலிருந்து கருத்துகள்' எனும் பத்தியில் நகைச்சுவையாகவும் நக்கலாகவும் குறிப்பிட்டுள்ளார் என்பதும் சற்று கவனத்தில் கொள்ளத் தக்கதாகும்.

தற்போது நடைபெறும் ஐ.நா.மனித உரிமைகள் அமர்வுகளில் மல்லொக் பிறவுண் கூறியதாவது. "இலங்கையில் ஆட்கள் காணாமல் போதல்கள், சட்டத்திற்குப் புறம்பான கொலைகள் மற்றும் ஊடகத்துறையினருக்கெதிரான வன்செயல்கள் இடம் பெறுவதாக அறிக்கைகள் கூறுகின்றன.

2007 ஒக்டோபரில் லூயிஸ் ஆர்பர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட போது சட்டம் பீத்தலாயிருப்பதையும் எதையும் யாரும் தட்டிக்கேட்க முடியாத பயங்கரமான சூழ்நிலை நிலவுவதையும் கண்டு கடுமையாகக் கவலையடைந்திருந்தார். ஆனால், எதுவித மாற்றமும் இதுவரை ஏற்படவில்லை. இத்தகைய குற்றங்களைப் புரிந்தவர்கள் அதிர்ச்சியளிக்கத்தக்க விதத்தில் நிரபராதிகள் போல வலம் வருகின்றனர்.

மனித உரிமைகள் வதிவிட அலுவலகமொன்று இலங்கையில் அமைக்கப்பட வேண்டுமென ஆர்பர் பரிந்துரை செய்ததை பிரித்தானியா ஏற்றுக் கொள்வதாகவும் பிறவுண் தெரிவித்தார்.

சமரசிங்க தனது பதிலுரையில் கூறியதாவது; "அமைச்சர் பிறவுண் கடைப்பிடித்துள்ள மிகத் தவறான அணுகுமுறையினையிட்டு இலங்கை கவலையடைகின்றது. சில பிரமுகர்கள் தமது வரலாற்று சொத்துகளைத் கைநழுவிவிடுவதற்கு முடியாதிருக்கின்றனர் என்பதை அத்தகைய அணுகுமுறைகள் உருவாக்குகின்றன என்று சர்வதேச சமூகத்தின் பல அங்கத்தவர்கள் மத்தியிலான எண்ணம் வலுப் பெற்று வருகின்றது. அதனைநாம் நிச்சயமாக பகிர்ந்து கொள்கிறோம்.

சமரசிங்க தனதுரையில், அமைச்சர் பிறவுண் பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்போது மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். நீண்டகாலமாக, ஜனநாயகம் பேணிவரும் நாடென்ற வகையில், நாம் இது பற்றி நன்கு அறிந்தவர்களாயுள்ளோம். அந்நிய ஆட்சியாளர் ஏற்படுத்தத் தவறியுள்ள பல புதிய நிறுவனங்களை நாம் அமைத்துள்ளோம்.

பிறவுண் இலங்கையில் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதைக் கவனத்தில் கொள்ளத் தவறி விட்டார். இலங்கையில் நிலைமைகள் சீரழிந்துவருவதாக, சில தன்னிச்சையான குற்றச்சாட்டுகளை நான் மறுதலித்திருந்தேன். நாம் ஜனநாயகத்தையும் பன்முகத்தன்மையையும் பலப்படுத்தி வருகின்றோம். கடந்த காலங்களில் அதனை எய்துவது கடினமாயிருந்தது என்றெல்லாம் கூறிவைத்தார்.

அமைச்சர் சமரசிங்க சற்று இராஜதந்திரமான முறையில் பதிலுரையாற்ற முற்பட்டாராயினும் கடுமையான தொனியில் பேசுமாறு இலங்கைக்கான ஜெனிவா ஐ.நா.தூதுவர் தயான் ஜயதிலக்க அமைச்சருக்கு ஆலோசனை வழங்கியதாகவும் நகல் அறிக்கையொன்றினை அவரிடம் கையளித்ததாகவும் அறிக்கைகள் கூறுகின்றன.

ஐ.நா.வுக்கு அண்மையில் நியமிக்கப்பட்டவராகிய ஜயதிலக்க முன்னாள் ஜனாதிபதி பிரேமதாச காலத்தில் அவரின் ஆலோசகராயிருந்தது மட்டுமல்லாமல், அவரின் கொள்கைகளைப் பக்கம் பக்கமாக எழுதிப்பிரசாரப்படுத்தியவர்.

மனித உரிமைகள் சபையில் அமைச்சர் சமரசிங்க உரையாற்றி 24 மணித்தியாலங்கள் கழியமுன் முன்னாள் நீதியரசர் ஜயந்த உடலாகம மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பான விசாரணைக் குழுவினைக் கண்காணிப்பதற்கு நியமிக்கப்பட்டிருந்த சர்வதேச சுயாதீன பிரமுகர்கள் குழு இராஜிநாமாச் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

முன்னாள் இந்திய பிரதம நீதியரசர் என்.பகவதி தலைமையிலான அக்குழு ( IIGEP) எவ்வளவு தான் தாம் சுட்டிக்காட்டியும் உடலாகம விசாரணைக்குழுவின் செயற்பாடுகள் எந்தவகையிலும் திருப்திகரமாயில்லை என்ற விரக்தி காரணமாகவே தாம் விலகிக் கொள்வதற்கு முடிவெடுத்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

நாட்டில் கொலைகள் சங்கிலித் தொடராகவும் இரத்த ஆறு பெருக்கெடுத்த வண்ணம் இருப்பது தொடர்பாகவும் பாதிக்கப்படுபவர்களைத் தவிர, அதிகளவானோர் அக்கறை செலுத்துவதாகத் தெரியவில்லை. இது நிச்சயமாக மிகுந்த சாபக்கேடானதும் வேதனைக்குரியதும் ஆகும்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் அப்பாவி மக்கள், மாணவர்கள் மற்றும் களமுனைகளில் மடிபவர்களென உயிர்கள் அழிக்கப்பட்ட வண்ணமேயுள்ளன. அரச படைகளை மட்டும் எடுத்துக் கொண்டால் கடந்த மாதம் 104 பேர் மடிந்ததாகவும் 822 பேர் காயமடைந்ததாகவும் அவசரகால நிலை நீடிப்பு பிரேரணை மீது நடைபெற்ற விவாதத்தின்போது சபை முதல்வர் அமைச்சர் நிமால் சிறிபால டீ சில்வா கூறிவைத்தார்.

அதேநேரத்தில், 80 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் 201 பேர் காயமடைந்ததாகவும் கூறப்பட்டது. விடுதலைப் புலிகள் பலரும் கொல்லப்படுகின்றனர். 25 வருடகாலமாக நடந்து வரும் யுத்தத்தினை அடுத்து 2 அல்லது 2 1/2 வருடங்களில் முடிவு கட்டிவிடலாமெனத் தப்புக்கணக்குப் போடுவது தவிர்க்கப்பட வேண்டும். ஒருபுறத்தில் நேரடியாக உயிர்கள் அழிக்கப்படுகின்றன. மறுபுறத்தில் யுத்தம் காரணமாக பணவீக்கமும் வாழ்க்கைச் செலவு உயர்வுகளும் பயங்கரமான நிலையை எட்டியுள்ளபடியால் குறிப்பாக ஏராளமான வறிய மக்கள் போஷாக்கின்மையால் நலிந்து நடைபிணங்களாகும் நிலைமை துரத்தி வருகிறது.

இவ்வருடத்தில் ரூ.47.7 பில்லியன் புதிய பணத்தாள்கள் வெளியிடப்படவுள்ளதென அறியப்படுகிறது. இது பணவீக்கத்தினை மேலும் அதிகரிக்கவே செய்யும். ஒட்டுமொத்தமாக மேலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வறுமைக்கோட்டின் கீழ் தள்ளப்படுவது மட்டுமல்லாமல், ஏனைய பல மக்களும் தலையில் கைவைக்கும் நிலைதான் எஞ்சிவருகிறது.

எனவே, `நாட்டைக் கொலைக்காடாக்கும் யுத்தம் வேண்டாம், இனப்பிரச்சினைக்கு நியாயமான அரசியல் தீர்வு விரைந்து வரவேண்டும். அனைத்து மக்களும் பயப்பிராந்தியின்றி சாந்தி, சமாதானமாக வாழ வழி வேண்டும்' என்பதே நாட்டு நலனில் அக்கறையுள்ள மக்களிடமிருந்து உரத்து ஒலிக்க வேண்டிய குரலாகும்.

நேற்று முன்தினம் திங்கட்கிழமை நடைபெற்ற மட்டக்களப்பு மாநகரசபை அடங்கலான உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் நியமனப் பத்திரங்கள் தாக்கல் செய்த அன்றே தெரிந்தகாரியமென பரவலான அபிப்பிராயம் காணப்பட்டது. கிழக்கில் ஜனநாயகத்தை ஸ்திரப்படுத்த உதவிய மக்களுக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நன்றி தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத அரசியல் மூலம் 2 தசாப்தகால கிழக்கு மக்களுக்கு மறுக்கப்பட்டிருந்த ஜனநாயக உரிமைகள் மீண்டும் கிட்டவேண்டுமென அரசாங்கம் முன்னெடுத்து வந்த கொள்கையை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு மக்கள் ஆதரவளித்தமைக்கு நன்றிக்கடன் செலுத்துவதற்கே ஜனாதிபதி அந்த அறிக்கையினை விடுத்துள்ளார்.

மே மாதத்தில் கிழக்கு மாகாணசபைக்கு நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள தேர்தலும் இவ்வாறாக மக்களுக்கு ஜனநாயக உரிமைகள் வழங்குவதற்காகவே அமையப்போகின்றது போல் தெரிகிறது. தேர்தல் நடாத்தி மக்கள் வாக்களிக்க வழிசமைப்பது மட்டும்தான் ஜனநாயக உரிமை என்று சொன்னால், இந்த நாட்டில் நடத்தப்பட்ட எத்தனையோ பாராளுமன்ற உள்ளூராட்சி மன்ற மற்றும் மாகாணசபைகளுக்கான தேர்தல்களைக் கணக்கில் எடுத்தால் இன்று ஜனநாயகம் கரைபுரண்டோடிக் கொண்டிருக்கும்.

நாட்டில் யுத்த சூழல் ஆரம்பமாகிய காலம் தொடக்கம் கூட 4 பாராளுமன்றத் தேர்தல்களும் 4 ஜனாதிபதித் தேர்தல்களும் நடந்தேறியுள்ளன. ஆனால், இன்றுவரை இரத்த ஆறுகளே ஓடிக்கொண்டிருக்கின்றன.

யுத்தம் காரணமாக உயிர், உடைமைகள் நாளாந்தம் அழிக்கப்பட்ட வண்ணமேயுள்ளன. 25 வருடங்களாக இடம் பெற்று வரும் அவலங்களும் அனர்த்தங்களும் தொடரக் கூடாது. இது வெல்ல முடியாத யுத்தம். (NO- WIN WAR) என நீண்ட காலமாக கருதப்பட்டு வந்தது. பிரபல ஆய்வாளர்கள் மட்டுமல்ல முன்னாள் படைத்தளபதிகள் கூட அவ்வாறு அபிப்பிராயம் வெளியிட்டனர்.

மாறாக யுத்தம் வெல்லக் கூடியது, வென்று விடலாம். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை என்றெல்லாம் கூறப்பட்டு வருவதைக் காண்கிறோம். ஆனால் அது அவ்வளவு இலகுவான காரியமாயிருக்கும் என்பதற்கில்லை என்பது ஆய்வாளர்களின் கருத்தாயுள்ளது.

விடுதலைப் புலிகள் தோற்றம் பெற்றதற்கும் யுத்தம் வெடித்ததற்குமான வரலாற்றுக்காரணிகள் ஒரு கணமேனும் ஆட்சியாளரால் மீட்டுப் பார்க்கப்படுவதில்லை. அதாவது தமிழ்த் தேசிய இனப் பிரச்சினைக்கு சாத்வீக வழியாக அரசியல் தீர்வுகாண்பதற்கு சிங்கள பெரும்பான்மை ஆதிக்கம் தடைக்கல்லாயிருந்ததாலேயே தமிழர் தரப்பில் ஆயுதப் போராட்டம் ஏற்பட்டதென்பது எந்தவொரு அரிவரி அரசியல் மாணவனுக்கும் தெரிய வேண்டிய விடயமாகும். தமிழருக்கு நீதி செய்வதே பயங்கரவாதத்திற்கெதிரான சிறந்த ஆயுதம் என்று ஜனாதிபதி ராஜபக்ஷ தனது முதலாவது சுதந்திர தினஉரையில் கூறி வைத்ததும் நினைவூட்டப்பட வேண்டியதாகும்.

Email this page Your Opinion Print this page
ஹாய் நலமா.....?
வி.ரி.வி. தெய்வநாயகம்பிள்ளை ஒரு சிறந்த புத்தகம்
யுத்தம் வேண்டாம் அரசியல் தீர்வு வேண்டும்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com