* `மனிதர்களால் ஈர்க்கப்பட்ட மாமனிதர்'
மா.பா.சி.
அண்மையில் அமரரான பிரபல தொழிலதிபர்- தேசபந்து வி.ரி.வி. தெய்வநாயகம் பிள்ளையின் அஞ்சலிக் கூட்டம் 09.03.2008 ஆம் திகதி கொழும்பு கொட்டாஞ்சேனை, ஐங்கரன் மண்டபத்தில் நடைபெற்றது.
சி.பாலசுப்ரமணியம் (கனடா) தலைமை தாங்கினார். அருட்கலைத் திலகம் வே. தம்பிராசா தேவாரம் பாடி நிகழ்வைத் தொடக்கி வைத்தார். ஷ்ரீ வரதராஜ விநாயகர் ஆலய அறநெறிப் பாடசாலை மாணவிகள் பஜனை பாடினர்.
தலைவர் தனது உரையில் தெரிவித்ததாவது;
"தெய்வநாயகம்பிள்ளை 6 வயதில் தந்தையையும் 10 வயதில் தாயையும் இழந்தவர். 12 வயதில் இலங்கைக்கு வந்தார். உடுப்புக்கும் சாப்பாட்டுக்குமாகக் கடையில் வேலை செய்தார். ஐயா பாவனையாளர்களோடு பழகும் விதத்தைக் கண்டு மகிழ்ந்த கடை உரிமையாளர் ஐயாவுக்கு மாதம் 20 ரூபா சம்பளம் கொடுத்தார். அன்றைய நிலையில் இது பெரிய பணம் மருதானை, தெமட்டக்கொடை போன்ற இடங்களில் வேலை செய்திருக்கிறார். தனது கடந்த காலத்தை எண்ணிப் பார்த்தே தன் சந்ததியை நல்ல நிலைக்குக் கொண்டு வர வேண்டுமென்ற ஊக்கத்தோடு உழைத்தார். அரச மரமொன்றின் கீழ் புத்தர் சிலையை வைப்பதற்கு உதவினார். எவ்விதமான துவேஷமும் காட்டாது அனைவரையும் அரவணைத்து வாழ்ந்தார்.
திறமையைக் கண்டு பாராட்டினார். உதவினார். கஷ்டமான நேரத்தில் மற்றவர்களைத் தூக்கிவிட்டார். அவரின் கருணை உள்ளமும் எளிமைத் தோற்றமும் தன்னடக்கமுந்தான் அவரை இன்றொரு பெரியராகக் கணிக்கவைத்தவை. இந்நாட்டில அனைத்து ஜனாபதிபதிகளோடும் நல்லுறவு கொண்டிருந்தார். இதனால், இந்நாட்டின் பெரிய விருதுகளான தேசபந்து, விஸ்வபிரசாதினி ஆகிய விருதுகள் அவருக்குக் கிடைத்தன" என்றார்.
Ag-\? E?-P? B? ??z-v-?-??-{v
" அரிது அரிது மானிடராகப் பிறப்பது. அதனிலும் அரிது வி.ரி.வி. போன்ற உதாரண புருஷர்களாகப் பிறப்பதாகும். அடிமட்டத்திலிருந்து ஆரம்பித்துத் தனது சலியா உழைப்பால் தனக்கென்றொரு சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர். அதில் தானும் வளமாக வாழ்ந்து குடும்பங்களையும் வாழவைத்தார். மனித நேயம் கொண்ட மாமனிதர் நன்றி மறவாதவர். சோதனைகளைச் சாதனைகளாக்கிய வியத்தகு பெரியார் ஐயாவுக்குத் திருமணம் நடந்த பின்னர் இலங்கைக்கு மனைவியோடு வந்து வாழ ஒரு வீடு தேவைப்பட்டது. இதை நண்பரொருவருக்கு அறிவித்தார். அவரும் தனது வீட்டருகே வசதியான வீடொன்றை ஏற்பாடு செய்தார். அங்கு வந்து அவர் தனது இல்லற வாழ்வைத் தொடங்கினார். கந்த சஷ்டி விழாவை முன்னேஸ்வர தேவஸ்தானத்தில் மிக எளிமையான முறையில் நடத்த ஏற்பாடுகள் செய்தார். சஷ்டி விழா நாயகனை வாழ்த்த தகுதியான ஒருவர் தேவை. ஐயாவோ நாடறிந்த வைந்தர். தனக்கு வீடு ஒழுங்கு செய்த வரையும் மனைவியையும் தன்னை வாழ்த்த அழைத்தார். அவர்கள் அப்பொழுது பொருளாதாரத்தில் மிகவும் அடிநிலையில் இருந்தனர். இருந்தும் தான் நொந்து போய் இருந்த போதும் தனக்குக் கை கொடுத்தவர்களை மறக்காது கௌரவித்தார். அந்தப் பண்புதான் அவரை மாமனிதனாக்கியது.
இறந்த பின்னர் எதையெதையேவெல்லாம் புழுகலாமென எம்மத்தியில் கதைப்பதுண்டு. இப்பொழுது நான் சொன்ன பழைய சம்பவமும் அப்படியானதெனச் சிலர் நினைக்கக் கூடும். ஆனால், அதில் உண்மையுண்டு ஐயாவுக்குப் புதுவீடு எடுத்துக் கொடுத்தவர் எனது தந்தையார் தான்! தமிழுக்குத் தொண்டு செய்பவர்கள் இறப்பதில்லையென்பர். தெய்வநாயகம்பிள்ளை தமிழுக்கும் சமயத்துக்கும் இலக்கியத்துக்கும் பெருந்தொண்டு செய்தவர். அவருக்கு இறப்பில்லை. நாங்களனைவரும் அவரின் மனைவியாருக்கு கடமைப்பட்டுள்ளோம். அவரை மக்களால் இனங்காண வைத்தவர் அந்த அம்மையார் தான்".
எழுத்தாளர் பத்மா சோமகாந்தன்;
" வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும் தெய்வத்துள் வைக்கப் படும்"என்றார் திருவள்ளுவர். வி.ரி.வி.ஐயாவுக்காகத்தான் திருக்குறள் படைக்கப்பட்டதா என எண்ணத் தோன்றுகின்றது. அவரை மையமாக வைத்தே இயற்றப்பட்டதா? என்ற உணர்வையும் தருகின்றது. அநேக குறல்கள் வி.ரி.வி.க்கும் பொருத்தமாகவே இருக்கின்றன. பொருட் செல்வம் மனிதரை விட்டு நீங்கக் கூடியது. எனவே அதை நம்பாமல் நிலையான அறத்தைச் செய்ய வேண்டும். ஐயா சோதனைகளைச் சாதனையாக்கி காட்டியவர். அவர் ஒரு சிறந்த புத்தகமாகவே வாழ்ந்தார். அவரது இறப்புச் சகல உள்ளங்களிலும் தைத்து விட்டதை அவரது இறுதி ஊர்வலம் காட்டியது. அவர் நடமாடும் பல்கலைக்கழகம். 5 ஆம் வகுப்பு வரையே படித்தவர். மற்றவர்களது உள்ளங்களை உணர்ந்து கொள்ளும் உளநூல் வல்லுநராக வாழ்ந்தார். ஆண்டவன் படைப்புகள் அனைத்தும் ஒன்றே என வாழ்ந்தவர்.
இரவு 9 மணிவரை உழைத்தார். சிறந்த முருக பக்தர். வி.ரி.வி. அறக் கட்டளை மூலமாக ஏழை மாணவர்களுக்கு உதவினார். புனித ஜுட் என்ற கிறிஸ்தவ தேவாலயத்தை வழிபாடு செய்ய கிறிஸ்தவர்களுக்கு உதவினார். இஸ்லாமியரின் பள்ளிவாசல் அமைக்க இலவசமாக காணி கொடுத்தார். மானிட உயர்வுக்காக ஐயா இவைகளைச் செய்தார். மலையகத்திலுள்ள ஒரு பின் தங்கிய கிராமத்தில் பாடசாலை அமைத்துக் கொடுத்தார். இந்தப் படிக்காத மேதை பிற நாட்டில் பிறந்திருந்தால் பெரிய மகாத்மாவாகத் திகழ்ந்திருப்பார். ஒருவரைக் காணும் போது "முருகா" எனக் கை குவிப்பார். இந்த `முருகா' என்ற மூவெழுத்துக்கள் எளிமை,உழைப்பு, அன்பு என்பவற்றையே குறிப்பன.
ஏ.ஈ.அருணாசலம் சாதாரண மனிதர் மாமனிதரானார். மகாகவி பாரதி சொன்னார்.
இன்னறுங்கனிச் சோலைகள் செய்தல்
இனிய நீர்த்தன் சுனைகள் இயத்தல்
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
பின்னருள தருமங்கள் யாவும்
பெயர் விளங்கியொளிர நிறுத்தல்
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக் கெழுத்தறிவித்தல்.
புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கெழுத்தறிவிதல் என்கிறார் பாரதி. மாமா கல்விக்கெனச் செய்த தொண்டு கல்லில் எழுத்துப் போல அவரது பெயரை நிலைக்க வைக்கும். அவர் செழிப்பான குடும்பத்தில் பிறந்திருந்தால் அவருக்கு இத்தகைய சிறப்புகள் கிடைத்திருக்காது. அவரது உள்ளம்போல் அவருக்கு பெரு வாழ்வு கிடைத்தது.
"கம்பவாரிதி இ.ஜெயராஜ்;
ஐயாவுக்கு அஞ்சலி தெரிவிக்க எனக்குக் கிடைத்த இரண்டாவது வாய்ப்பு இது. இங்கு பேசப்பட்ட பேச்சுகளில் சோகமே மிகுந்திருந்தது.அவரை சோகத்தோடு நினைவு கூராது சந்தோசத்தோடு நினைக்க வேண்டும். உலக வாழ்வொன்பது பெரும் கனவு. மரணம் இயற்கையானது. ஐயா பூரணமான வாழ்வை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். அவர் எதைச் சாதித்தார். அதன் முக்கியத்துவம் என்ன? தனித்துவம் என்ன?
முருகனுக்கு ஆறுமுகங்கள். குடும்ப வாழ்க்கையில் எமக்கும் பல முகங்களுண்டு. அலுவலக முகம். மனைவிக்குக் காட்டும் முகம். பிள்ளைகள் - பேரப்பிள்ளைகளுக்குக் காட்டும் முகம் இப்படி எத்தனையோ முகங்கள். ஒரு நல்ல தந்தை மறைந்து விட்டார். அவர் நல்ல உழைப்பாளி. நல்ல பாட்டனார். மாமன், சம்மந்தி உழைப்பால் முன்னேறலாம் என்ற நம்பிக்கையைத் தந்தவர். ஒப்பற்ற முருக பக்தர்.தெய்வநாயகம்பிள்ளை ஐயாவக்கு 6 முகங்களல்ல நூறு முகங்கள்! அவரிலிருந்து துளிர்த்த குருத்துகளிடம் நல்ல தன்மைகளைக்காண முடிகின்றதென்றால் அது ஐயாவின் வேரிலிருந்தே எழுந்தவை. அவரிடம் அறம் சொல்ல வைத்த முகம், தொழிலாளி முகம் இருந்தன. கடைசிக் காலம் வரை தனது தொழில் நிறுவனத்தைத் தனது மேற்பார்வையிலேயே வைத்திருந்தார். குறிப்பிட்ட நேரத்தில் அலுவலக மேசையில் உட்கார்ந்திருப்பார். கணக்குக்குப் பொறுப்பாக இளைஞரொருவர் ஐயாவுடன் வேலை பார்த்தார். ஒரு கணக்கில் ரூபா 10 வித்தியாசப்பட்டு விட்டது. குறைந்துவிட்டது. சின்னக்காசு. பத்து ரூபா என்ற நினைப்பில் அந்த இளைஞர் தனது பையில் இருந்த 10 ரூபாவைச் சேர்த்து கணக்கைச் சமன்படுத்திவிட்டார். அடுத்த நாள் காலை ஐயா வந்து கணக்குப் பேரேடுகளைச் சரி பார்த்தார். சம்பந்தப்பட்ட இளைஞரைக் கூப்பிட்டார். ரூபா 10 வித்தியாசப்பட்டிருக்குமே எனக் கேட்டார். என்ன செய்தீர்? எனக் கேட்டார். பதற்றத்தோடு இளைஞர் நடந்ததைச் சொன்னார். அப்பொழுது ஐயா சொன்னார், குறைந்த காசை உன் பொக்கட்டுக்குள் இருந்த காசைப் போட்டுக் கணக்கை சரிப் படுத்திவிடாதே. காசு கூடியிருந்தால் கூடியதை எடுத்து உனது பொக்கட்டுக்குள்ளும் போட்டு விடாதே. அவரது இந்த ஆலோசனையைக் கேட்ட அந்த இளைஞர் இன்று வாழ்வில் உயர்ந்துவிட்டார்.
சகல மனிதர்களாலும் ஈர்க்கப்பட்டார். தொழிலாளிகள் ஒருநாள் சாப்பிடாது வேலை செய்வதைக் கண்டுவிட்டார். உடனே தொழிலை நிறுத்திச் சாப்பிடும்படி கூறினார். அவரது முகங்கள் அனைத்துமே வாழ்வில் வெற்றி கண்டன. தோற்ற முகமென்று ஒன்று இருக்கவில்லை. சாப்பிடுவதில் ஒழுங்கிருந்தது. குறிப்பிட்டவைகளைத் தான் சாப்பிட்டார். அமிர்தத்தைத்தான் கொடுத்தாலும் சாப்பிட்டுப் பழகாததைச் சாப்பிடமாட்டார்.
சங்க இலக்கியத்தில் ஒரு சம்பவம். அரசன் இறந்துவிட்டான். அவனைப் புதைப்பதா? எரிப்பதா? என்ற தடுமாற்றத்தில் அமைச்சர்கள் தடுமாறினர். மறைந்த அரசனின் நல்ல நண்பரான புலவரொருவர் வந்தார். அவரிடம் பிரச்சினையைச் சொன்னார்கள். அதற்குப் புலவர் சொன்னார் மன்னன் பூரணமான வாழ்வை அனுபவித்தவன். அவன் உடலைச் சுட்டாலென்ன புதைத்தாலென்ன? எனக் கூறிவிட்டு நகர்ந்தார். அத்தகைய வாழ்வைக் கண்டவர் தான் தெய்வநாயகம்பிள்ளை ஐயா. அவருக்காக ஒருவரும் வருந்த வேண்டாம்.
பாலா சபாரத்தினம், ஏ.சுப்பிரமணியம், நல்லசிவம் ஆகியோரும் அஞ்சலி தெரிவித்துப் பேசினர்.
மாவை சோமசுந்தரம் அஞ்சலிக் கவிதை பாடினார். ஈஸ்வரன் தெய்வநாயகம்பிள்ளை ஏற்புரை நிகழ்த்தினார். இறுதியாக ஆசிரியை ஆர்.அக்ஷ்டலெட்சுமி தேவாரம் பாடினார்.