உலக சந்தையில் எண்ணெய் விலை பரலொன்று 108 டொலராக அதிகரித்துள்ளது. அண்மைக் காலங்களில் அமெரிக்க டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்தமையே எண்ணெய் விலை அதிகரித்தமைக்கு காரணமென பொருளியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இலங்கையைப் பொறுத்தவரையில் உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பானது மக்களுக்கு பொருளாதார ரீதியில் பெரும் நெருக்கடியை கொடுப்பதாகவே காணப்படுகின்றது.
சமையல் எரிவாயுவின் விலை ஓரிரு மாதங்களில் 2 ஆயிரம் ரூபாவை எட்டி விடும் என்று பாவனையாளர்கள் சலித்துக் கொள்வதையும் அவதானிக்க முடிகிறது.
உலக சந்தையில் எண்ணெய் விலை அதிகரிக்கும் போது அந்த விலை அதிகரிப்புக்கு ஏற்ப அரசு மானிய உதவியை அளிக்காவிடின் அதன் சுமை பொதுமக்களையே சென்றடையுமென்பது ஒருபுறமிருக்க, அரசு வழங்கும் மானியமும் பொதுமக்களின் வரிப்பணத்திலிருந்துதான் பெறப்படுகின்றது என்பதும் மறுபக்க விடயமாகும்.
கூட்டிக் கழித்துப் பார்த்தால் எரிபொருள் விலை அதிகரிப்பினால் ஏற்படும் தாக்கத்தை மக்களே அனுபவிக்க வேண்டியிருக்கின்றது. வாழ்க்கைச் செலவு அதிகரிப்பை சமாளிக்க முடியாமல் பொருளாதார நிலையில் தாழ்ந்த மட்டத்தினரும் நடுத்தர வர்க்கத்தினரும் திண்டாடுகின்றனர். சாதாரண உப்பு கிலோ 35 ரூபாவாக தற்போது அதிகரித்துள்ளது. சகல பொருட்களின் விலைகளும் போட்டி போட்டுக் கொண்டு தினந் தோறும் அதிகரித்துச் செல்கின்றன. இந்த விலை அதிகரிப்புக்கு மட்டும் எந்தவிதமான தடைகளும் இல்லை.
பொருட்கள், சேவைகளுக்கான கட்டணங்கள் அதிகரித்துவரும் நிலையில் இப்போது உலக சந்தையில் எண்ணெய் விலை அதிகரிப்பால் மேலும் மக்கள் மீது சுமை ஏற்றப்படும் வாய்ப்புகள் அதிகரித்து காணப்படுகின்றன.
அத்துடன், பொருட்களின் விலை அதிகரிப்புக்கு உலக சந்தையை காரணம் காட்டி அரசாங்கத்திலுள்ள அமைச்சர்கள் நியாயப்படுத்துவதற்கான அனுகூலங்களும் ஏற்பட்டுள்ளன. இதேவேளை, உத்தேச மின்கட்டண அதிகரிப்பும் இலங்கை மக்களைப் பொறுத்தவரை தற்போது மனதுக்கு அதிக அழுத்தத்தை கொடுக்கும் விடயமாகியுள்ளது. ஆனால், 90 அலகுகளுக்குக் குறைவாக மாதமொன்றுக்கு பாவிக்கும் பாவனையாளர்களுக்கு மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டாமென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் இலங்கை மின்சார சபைக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளமை சிறிது ஆறுதலளிக்கும் விடயமாகும்.
அன்றாடம் மேற்கொள்ளப்பட வேண்டிய அத்தியாவசிய செலவினங்களில் எதற்கு முன்னுரிமை கொடுப்பது என்று தெரியாமல் மக்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர்.
ஆடம்பரப் பொருட்களுக்கான விலைகளை அதிகரித்தால் பெரும் பான்மையான மக்களுக்கு பாதிப்பு அதிகம் இல்லை. ஆனால், அத்தியாவசியத் தேவையான உணவுப் பொருட்கள், எரிபொருட்களுக்கான விலையேற்றங்கள் மக்களை முழுமையாக பாதிக்கின்றமை குறித்து அலட்டிக்கொள்ளாத தன்மையே அதிகளவில் காணப்படுகின்றது.
இலங்கையைப் பொறுத்தவரை மீண்டும் உக்கிரமாக ஆரம்பிக்கப்பட்டிருக்கும் யுத்தத்துக்கும் மக்கள் அதிகளவு விலை செலுத்துகின்றனர். இதனை காரணம் காட்டியே மக்கள் மீது தொடர்ந்தும் பளுவேற்றப்படுகின்றது.
ஆளும்தரப்பு யுத்தத்தையும் உலக சந்தையில் எரிபொருள் உட்பட பொருட்களின் விலைஏற்றத்தையும் காரணம் காட்டி நியாயம் கற்பிக்க முற்படுகையில் ஜே.வி.பி. போன்ற கட்சிகள் அரசின் மோசடியும் நிர்வாகத்திறமையீனமுமே வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு காரணமென சாடி வருகின்றன.
பொருட்களின் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்தி மக்களுக்கு சிறிதளவாவது ஆறுதலை கொடுக்க வேண்டிய நடவடிக்கைகளை அதாவது பொருளாதார ரீதியிலான முகாமைத்துவத்தை திறமையாக முன்னெடுக்கவேண்டியது அரசாங்கத்தின் கடமையும் பொறுப்புமாகும்.
வெறுமனே அறிக்கைகளை விடுவதால் மாத்திரம் மக்களின் வயிறு நிரம்பிவிடப்போவதில்லை. இப்போது உலக சந்தையில் எண்ணெய் விலை அதிகரிப்பானது மற்றொரு கட்டண அதிகரிப்புக்கு வழிவகுத்துவிடுமோ என்ற ஏக்கமே பெரும்பாலானோரின் மனங்களை வாட்டுகின்றது.
ஆகவே, காரணங்களை கண்டுபிடித்துக்கொண்டு இருக்காமல் பொருட்களின் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்தவேண்டிய நடவடிக்கைகளை உடனடியாக அரசாங்கம் மேற்கொள்ள வேண்டுமென்பதே யாவரினதும் எதிர்ப்பார்பாகும்.