பாங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினாவுக்கு வெளிநாட்டில் சிகிச்சை பெற அனுமதி வழங்கவேண்டுமென மருத்துவர்கள் அந்நாட்டரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர்.
ஊழல் குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு தாற்காலிக சிறையில் காவலில் வைக்கப்பட்டுள்ளார் ஷேக் ஹசினா.
கடந்த 2004 ஆம் ஆண்டு அவருடைய அவாமி லீக் கட்சியின் பேரணியின்போது குண்டுவெடிப்புச் சம்பவம் நிகழ்ந்தது. இதில் 24 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
ஷேக் ஹசினாவின் காதுகள் பாதிக்கப்பட்டன. பலத்த காயமடைந்ததால் இடதுகாது கேட்கும் திறனை ஹசினா இழந்தார். தற்போது வலது காதும் கேட்கும் திறனை இழந்துவருகிறது.
மற்றவர்கள் பேசும் போது அவர்களின் உதடு அசைவை வைத்துத்தான் ஓரளவுக்கு அதைப் புரிந்துகொள்கிறார். முழுமையான கேட்கும் திறனை இழந்துவிட்டார்.
எனவே ஹசினாவுக்கு உடனடியாக வெளிநாட்டில் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். இதற்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று அவருக்கு சிகிச்சை அளித்துவரும் பிரபல காது, மூக்கு, தொண்டை நிபுணர் கோபால் தத்தா தெரிவித்தார்.
நீதிமன்றத்துக்கு விசாரணைக்கு அழைத்துவரப்பட்ட ஹசினாவுக்கு சட்டத்தரணிகள் என்ன கூறுகிறார்கள் எனக் கேட்க இயலவில்லை.
எனவே அவருக்கு தேவையான சிகிச்சை அளிப்பது குறித்து யோசனை தெரிவிக்க மருத்துவர்கள் குழுவை அமைக்க வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.
இதற்கிடையில் மருத்துவர்கள் குழுவை அமைக்க தேவை ஏற்பட்டால் அது குறித்து அரசு பரிசீலிக்கும் என்று அரசின் உள்துறை ஆலோசகர் மாட்டின் தெரிவித்தார்.
மேலும் ஹசினாவை வெளிநாட்டுக்கு சிகிச்சை அளிக்க அனுப்பவேண்டும் என மருத்துவர்கள் குழு பரிந்துரை செய்தால் அதை அரசு ஏற்கும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.