மலேசியாவில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஒரேயொரு இந்திய வம்சாவளி அமைச்சரான டத்தோ சாமிவேலு படுதோல்வியடைந்துள்ள நிலையிலும் மலேசிய இந்தியன் காங்கிரஸ் கட்சியின் தலைவராக தொடர்ந்தும் இருப்பதென உறுதியெடுத்துள்ளார்.
மலேசியாவில் வாழும் இந்திய வம்சாவளியினரை பிரதிநிதித்துவப்படுத்தும் மலேசிய இந்தியன் காங்கிரஸ் கட்சியானது ஆளும் பரிசான் கூட்டணியில் அங்கம் வகிக்கின்றது.
கடந்த மாதம் கலைக்கப்பட்ட மலேசிய அரசாங்கத்தில் ஒரேயொரு இந்திய அமைச்சராக பதவி வகித்த சாமிவேலு கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் படுதோல்வியடைந்துள்ளார்.
8 தடவைகள் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட இவர் இம்முறை தனது சொந்தத் தொகுதியையே இழந்துள்ளதுடன் மலேசிய இந்தியன் காங்கிரஸ் தனது கட்டுப்பாட்டிலிருந்த 9 பாராளுமன்ற ஆசனங்களில் மூன்றையும் 19 மாகாண சபைகளுக்கான ஆசனங்களில் ஏழையும் மட்டுமே கைப்பற்றியுள்ளது.
இது தொடர்பாக சாமிவேலு விடுத்துள்ள அறிக்கையில்;
புயல் எங்களைத் தடுத்தாலும் நாம் எமது பாதையில் முன்னேறுவோம். புதிய அலையொன்று எம்முடன் இணையும் நாள் வருமென்று நாம் நம்புகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மக்களின் தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறோமெனத் தெரிவித்துள்ள சாமிவேலு கட்சியை மீளக் கட்டியெழுப்பவுள்ளதாகவும் உறுதியளித்துள்ளார்.
இதேவேளை, மலேசிய இந்தியன் காங்கிரஸ் கட்சி அங்கம் வகிக்கும் ஆளும் பரிசான் தேசியக் கட்சியும் இத்தேர்தலில் பெரும் பின்னடைவைச் சந்தித்து சாதாரண பெரும்பான்மையுடனேயே அதிகாரத்திற்கு வந்துள்ளது.
மலேசியாவில் வசிக்கும் இந்தியர்கள் தாம் பாரபட்சமாக நடத்தப்படுவதாகக் கூறி பாரிய ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டபோது ஒரேயொரு இந்திய அமைச்சரான சாமிவேலு அவர்களுக்காக குரல்கொடுக்கவில்லை என எழுந்த குற்றச்சாட்டே இவரது கட்சியின் தோல்விக்கான காரணமெனத் தெரிவிக்கப்படுகிறது.