* ஜனாதிபதி முஷாரப்
பாகிஸ்தான் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள கட்சிகள் அரசியல் செய்வதை விட்டுவிட்டு திறமையான ஆட்சியை வழங்க வேண்டுமென பாகிஸ்தான் ஜனாதிபதி முஷாரப் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாகாணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றுகையிலேயே முஷாரப் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
நாடு எதிர்கொள்ள வேண்டிய முக்கிய பிரச்சினைகள் பல உள்ளன. தேர்தலில் வெற்றிபெற்றுள்ள கட்சிகள் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு சிறப்பான முறையில் ஆட்சி செய்தால் தான் நாடு வளம்பெறும்.
அனைத்து எதிர்க்கட்சிகளும் முக்கியமாக ஆட்சிக்கு வரப்போகும் கட்சிகள் குறுகிய அரசியல், மற்றும் அரசியல் தந்திரங்களில் ஈடுபடமாட்டார்கள் என்று நான் நம்புகிறேன்.
சிறப்பான ஆட்சி முறையின் மூலம் தான் நாடும், மக்களும் வளம்பெற முடியும். ஆட்சி அமைக்கும் கட்சிகள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். நாட்டில் அமைதி நிலவுவதுதான் மிகவும் முக்கியம்.
பாகிஸ்தானில் அமைதியாகவும், நேர்மையாகவும் தேர்தல் நடத்தப்படும் என்று நான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளேன் எனத் தெரிவித்தார்.
பாகிஸ்தானில் கடந்த மாதம் நடைபெற்ற தேர்தலில் பெனாசிர் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி அதிக இடங்களில் வெற்றிபெற்றது. நவாஷ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சியுடன் இணைந்து அக்கட்சி ஆட்சி அமைக்கவுள்ளது. அதிபரின் அதிகாரத்தை குறைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அந்த இரு கட்சிகளும் தெரிவித்துள்ளன.