*அலி சர்தாரிஆசிப்
எதிர் காலத்தில் இராணுவத்துக்கும் மாகாண அரசுகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுமென பாகிஸ்தான் மக்கள் கட்சி இணைத் தலைவர் ஆசிப் அலி சார்தாரி தெரிவித்துள்ளார்.
இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
"தேசிய பாதுகாப்புச் சபை மற்றும் மாகாண அரசுகளும் அரசு அமைப்புகள் தான். எனவே, அவற்றுடன் முரண்பாட்டை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு இல்லை. மாறாக நாட்டில் அவற்றின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும் என்றுதான் விரும்புகிறோம்.
அதற்காக எதிர்காலத்தில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தயாராகவுள்ளோம்.
நவாஸ் ஷரீப் கட்சியுடனான கூட்டணி குறித்து சர்தாரியிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர். நவாஸ் ஷரீப் எப்போதும் எங்கள் பக்கம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.
பல்வேறு விடயங்களில் எங்கள் கட்சிக்கும் அவரது கட்சிக்கும் இடையே ஒருமித்த உடன்பாடு ஏற்பட்டுள்ளது. புதிய அரசு அமைந்தவுடன் கூட்டணி தர்மத்தை மதித்து நடக்கும் விதத்தில் ஷரீப்பின் கட்சிக்கு அனைத்து விதத்திலும் தகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படும்.
அரசியலில் எதிர்ப்பும் விமர்சனமும் தனி நபர் மீதான வெறுப்பை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கக் கூடாது. மக்களோடு தொடர்புடைய பிரச்சினை சம்பந்தப்பட்டதாக இருக்க வேண்டும். இது போன்ற நாகரிக அரசியல் கலாசாரத்தையே நான் பெரிதும் விரும்புகிறேன்" எனத் தெரிவித்தார்.