பாகிஸ்தானில் மூன்றுமாத காலத்திற்கு இடைக்கால பிரதமரை நியமிப்பது எனவும் அதன் பின்னர் தானே பிரதமராக பதவியேற்பது எனவும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணைத் தலைவர் ஆஸிப் அலி சர்தாரி தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானில் கூட்டணி ஆட்சி அமைப்பது குறித்து முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சியுடன் ஏற்கனவே சர்தாரி உடன்பாடு செய்துகொண்டுள்ளார். அதற்கான வழிவகைகளை கடந்த ஞாயிற்றுக்கிழமை இருவரும் சந்தித்து முடிவு செய்தனர்.
இந்நிலையில், சிந்து மாகாணத்தைச் சேர்ந்த பாகிஸ்தான் மக்கள் கட்சி எம்.பி.க்களை ஹைதராபாத் நகரில் ஞாயிற்றுக்கிழமை சர்தாரி சந்தித்துப் பேசினார். சிந்து மாகாணத்தைச் சேர்ந்தவர் பிரதமராக வேண்டும் என அந்த எம்.பி.க்கள் விருப்பம் தெரிவித்தனர். எனவே, அவர்களுடைய விருப்பத்தை நிறைவேற்ற விரும்புவதாக சர்தாரி சூசகமாகத் தெரிவித்தார். பாகிஸ்தான் மக்கள் கட்சியைச் சேர்ந்த மஹ்தும் அமின் பாஹிமை பிரதமராக்க முதலில் சர்தாரி திட்டமிட்டிருந்தார். அதற்கான அறிவிப்பையும் தேர்தலுக்கு முன்பே அவர் வெளியிட்டிருந்தார்.
ஆனால், தற்போது தனது எண்ணத்தை மாற்றிக்கொண்டு மூன்று மாதத்துக்கு இடைக்கால பிரதமரை நியமிக்க சர்தாரி முடிவு செய்துள்ளார். இடைக்கால பிரதமர் பஞ்சாப் பகுதியை சேர்ந்தவராக இருக்க வேண்டும் எனவும் அவர் கருதியுள்ளார். பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்த பாகிஸ்தான் மக்கள் கட்சியின் மூத்த தலைவர்கள் யுஸாப் ராஸா ஜிலானி, ஷா முஹமது குரேஷி, சௌத்ரி அஹமது முக்தார் ஆகியோரின் பெயர்கள் இடைக்கால பிரதமர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன. மூன்று மாதத்துக்குள் தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராவதற்கான முயற்சிகளை சர்தாரி மேற்கொள்வார். அதன் பின்னர் பிரதமர் பதவியை தானே ஏற்று ஆட்சியை வழி நடத்துவார் என்று பாகிஸ்தான் மக்கள் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்க மஹ்தும் அமின் பாஹிம் மறுத்துவிட்டார்.