* ஹக்கீம் மகிழ்ச்சி
மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அங்குள்ள முஸ்லிம் வாக்காளர்களின் 82 சதவீதமான வாக்குகள் தமது கட்சிக்கு கிடைத்திருப்பதாக ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி நேற்று செவ்வாய்க்கிழமை மகிழ்ச்சி தெரிவித்தது.
இது தொடர்பாக கட்சி நேற்று விடுத்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் உள்ள 9 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் 4 உள்ளூராட்சி சபைகளுக்குப் போட்டியிட்ட ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நான்கு உள்ளூராட்சி சபைகளிலும் வெற்றிபெற்று முஸ்லிம் மக்களின் விகிதாசாரத்திற்கு ஏற்ப 7 உறுப்பினர்களை பெற்றுள்ளது. இது இப்பகுதியில் வாழும் முஸ்லிம் மக்கள் பெரும் ஆதரவை ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு வழங்கயிருப்பதை எடுத்துக் காட்டுகின்றது.
இத்தேர்தலில் வாக்களித்த முஸ்லிம் வாக்காளர்களின் 81.9 சதவீதமான வாக்குகள் ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கே கிடைத்துள்ளமை கட்சிக்கு கிடைத்துள்ள பெரும் வெற்றியாகும்.
நடந்து முடிந்த 9 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 70 ஆயிரத்து 477 ஆகும். இதில் மொத்த முஸ்லிம் வாக்காளர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 339 ஆகும். இது மொத்த வாக்காளர் தொகையில் 10.84 வீதமாகும். இந்நிலையில், மேற்படி மொத்த முஸ்லிம் வாக்காளர்களில் 56 சதவீதமான 16 ஆயிரத்து 240 முஸ்லிம் வாக்காளர்கள் இத்தேர்தலின் போது வாக்களித்துள்ளதாக உத்தியோகபூர்வ அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அளிக்கப்பட்ட மொத்த முஸ்லிம் வாக்குகளான 16,240 வாக்குகளில் 13 ஆயிரத்து 301 வாக்குகள் ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கே கிடைத்துள்ளது. இது 81.9 வீதமாகும்.
இந்த வெற்றியானது மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள முஸ்லிம்கள் ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கொள்கைகளையும் அதன் தேர்தல் வேட்பாளர்களையும் ஏற்றுக் கொண்டு செயற்பட்டிருப்பதை மிகத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. தேர்தல் நடவடிக்கைகளில் பொய்பிரசாரங்களுக்கும் வன்முறைகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் அஞ்சாமல் தேர்தலுக்கு முகம் கொடுத்து மீண்டும் ஒரு முறை முஸ்லிம்களின் நம்பிக்கைக்கும் ஆதரவுக்கும் பாத்திரமான ஷ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு பாரிய வெற்றியைத் தேடித் தந்த எமது வாக்காளர் பெருமக்கள் அனைவருக்கும் பல்வேறு வகையில் இவ்வெற்றியை அடையச் செய்யும் முகமாக இரவு பகலாக பாடுபட்டு எமது கட்சி அமைப்பாளர்கள், வேட்பாளர்கள், ஆதரவாளர்களுக்கும் ஷ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது ஆழ்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.