* ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக நிமால் கூறுகிறார்
சர்வதேச பிரதிநிதிகள் மாநாட்டில் எந்த நேரத்திலும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் பங்கு பற்ற முடியுமென நேற்று செவ்வாய்க்கிழமை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாதலால் எந்த நேரத்திலும் சர்வகட்சி மாநாட்டில் கலந்து கொள்ள முடியுமென அரசு தெரிவித்துள்ள அதேசமயம், மட்டக்களப்பு உள்ளூராட்சி சபைத் தேர்தலின் மூலம் ஜனநாயகத்தில் மக்களுக்குள்ள நம்பிக்கை உறுதி செய்யப்பட்டிருப்பதாக சபை முதல்வரும் அமைச்சருமான நிமால் சிறிபால டி. சில்வா தெரிவித்தார்.
சுகாதார அமைச்சு கேட்போர் கூடத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் நிமால் மேலும் கூறுகையில்;
"மட்டு. உள்ளூராட்சி தேர்தல், நீதியும் நியாயமுமாக நடைபெற்று முடிந்துள்ளது. வன்முறையற்ற சூழ்நிலையில் மிகவும் அமைதியாக நடைபெற்றுள்ளது. இது அம்மாவட்ட மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் கிடைத்த வெற்றியாகும்.
வன்முறைகள் நடைபெறுமென சிலர் கூறிய போதும், மிகவும் அமைதியாக தேர்தல் நடைபெற்றுள்ளது. பலாத்காரம் பிரயோகிக்கப்படாமலேயே மக்கள் தேர்தலில் பங்கேற்றுள்ளனர்.
தேர்தல் மூலமும் தேர்தல் முடிவுகள் மூலமும் பயங்கரவாதம் தோல்வி கண்டு ஜனநாயகம் வெற்றிவாகை சூடியுள்ளது. இதன்மூலம் தமிழ் மக்களுக்குள்ள ஜனநாயகத்தின் மீதான ஆர்வம் பகிரங்கமாகியுள்ளது.
கிழக்கு மாகாணத்தை இத்தேர்தல் முடிவுகள் மூலம் மேலும் அபிவிருத்தி செய்வதற்கான அரசாங்கத்திற்கு வாய்ப்பு அரசாங்கத்திற்கு கிட்டியுள்ளது" என்றார்.