* சுதந்திர ஊடக இயக்கம் விசனம்
இம்மாத முற்பகுதியில் அதிகளவான செய்தியாளர்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்டிருப்பதுடன், அவர்களில் சிலர் பல மணிநேரங்கள் தடுத்துவைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டமை தொடர்பில் சுதந்திர ஊடக இயக்கம் கடும் விசனம் தெரிவித்துள்ளது.
செய்திகளையும் விவரணக் கட்டுரைகளையும் வெளியிடும் .outreachsl.com என்னும் இணையத்தளத்தில் பணியாற்றும் அதிகளவான செய்தியாளர்கள் கைது செய்யப்பட்டமை தொடர்பாக சுதந்திர ஊடக இயக்கத்தினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
எந்தவித வலுவான காரணங்களுமின்றி ஈ.கே.வலிரி அச்சக உரிமையாளரும் எழுத்தாளருமான என்.ஜசிஹரனும் அவரது மனைவி வளர்மதியும் பயங்கரவாத விசாரணைத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவரது மடிக் கணினியும் (லப்டொப்) அச்சக உபகரணங்களும் அவர்களால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. ஜசிஹரன் www.outreachsl.com இணையத்தளத்தின் எழுத்தாளரென்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த ஏழாம் திகதி இவ் இணையத்தளத்தின் ஆசிரியரும் சுயாதீன செய்தியாளருமான ஜே.எஸ்.திசைநாயகம் பயங்கரவாத விசாரணை திணைக்களத்தினால் (ரி.ஐ.டி.) கைது செய்யப்பட்டார். காலையில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இவர் மாலையில் கைது செய்யப்படும் வரை குடும்பத்தினருக்கு எவ்வித தகவல்களும் அறிவிக்கப்படவில்லை. இவரிடம் விசாரணை செய்யப்பட்ட விபரங்களை தெரிவிப்பதற்கு ரி.ஐ.டி. மறுத்துவிட்டதாக ஆங்கில பத்திரிகையான டெய்லி மிரரின் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன், அவசரகால விதிகளின் கீழ் 8 ஆம் திகதியிலிருந்து 30 நாட்களுக்கு தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.
மேலும், இவ் இணையத்தளத்தின் மற்றொரு செய்தியாளரான கே.விஜயசிங்கவும் ஒளித்தொகுப்பாளரான உதயனும் ஏழாம், எட்டாம் திகதிகளில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கடந்த ஏழாம் திகதி பிற் பகலில் சுதந்திர ஊடக இயக்கப் பேச்சாளரும் சரிநிகர் என்னும் தமிழ் சஞ்சிகையின் ஆசிரியருமான எஸ்.சிவகுமார் என அழைக்கப்படும் பாலசுப்பிரமணியம் வசந்தனை தேடிவந்த ரி.ஐ.டி. உத்தியோகத்தர்கள் அவர் அங்கு இல்லாமையால் அவரது உறவினர் ஒருவரை அழைத்துச் சென்றுள்ளனர். இதன் பின்னர் 8 ஆம் திகதி காலை 9 மணியளவில் சிவகுமார் சுதந்திர ஊடக இயக்கத்துடன் ரி.ஐ.டி. அலுவலகத்திற்கு சமூகமளித்தார்.
எட்டாம் திகதி எஸ்.சிவகுமாரும் இவ் இணையத் தளத்தின் புகைப்படப்பிடிப்பாளரும் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால், இவர்களிடம் நீதிக்குப் புறம்பான வழிகளில் விசாரணைகள் மேற்கொள்ளப்படமாட்டாதென ரி.ஐ.டி. அதிகாரிகள் சுதந்திர ஊடக இயக்கத்திற்கு உறுதியளித்திருந்தனர். இதன்படி 12 மணி நேர விசாரணைகளின் பின்னர் சிவகுமார் விடுவிக்கப்பட்டார்.
மக்களின் நலன்களுக்காக விசாரணைகளை மேற்கொள்ளும் உரிமை சட்ட அமுலாக்கல் அமைப்புகளுக்கு இருக்கிறதென்பதை நாம் ஏற்றுக்கொள்கிறோம். அதேவேளை, இக்கைதுகள் தொடர்பில் சில விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டுமெனவும் நாம் விரும்புகிறோம். கைது செய்யப்பட்டவர்களின் வாக்கமூலத்தை பதிவு செய்யும்போது அவர்களின் வழக்கறிஞர்களும் உடன் இருக்கும் உரிமையையும் கைது செய்யப்பட்டவர்கள் எங்கு தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்படுகிறார்கள் என்பதை குடும்பத்தினருக்கு அறிவிக்கும் கடமையையும் சம்பந்தப்பட்டவர்கள் பின்பற்ற வேண்டுமென நாம் கருதுகிறோம்.
ஆனால், இவ்விதிகள் அடிக்கடி மீறப்படுவதை நாம் கவனத்தில் கொண்டுள்ளோம். அதனால் இவ்வாறான நடவடிக்கைகளை தவிர்த்து நீதிமன்ற சட்டங்களுக்கு மதிப்பளித்து செயற்பட வேண்டுமென வலியுறுத்துகிறோமென குறிப்பிடப்பட்டுள்ளது.