லண்டனிலிருக்கும் ஷ்ரீலங்கா உயர்ஸ்தானிகர் திருமதி ஷேணுதா செனவிரத்ன சில மாதங்களின் முன்னர் அதி நவீன ஆடம்பர மோட்டார் வாகனமாகிய ஜகுவர் காரை விலைக்கு வாங்கினார். இதற்காக முப்பதாயிரம் பவுண் (ஷ்ரீலங்கா ரூபா பெறுமதியில் 8.5 மில்லியன்) செலவுசெய்து அவர் அந்த அதிநவீன ஆடம்பரக் காரைக் கொள்வனவு செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, அவருக்காக பிரிட்டிஷ் பவுண் 30,000 செலவிட்டு (அப்போதைய ஷ்ரீலங்கா ரூபா பெறுமதி 7.5 மில்லியன்) நவீன ஆடம்பர வாகனமாகிய ஈ240 மேர்சிடெஸ் பென்ஸ் கார் வாங்கப்பட்டு மூன்று வருடங்களுக்குள் மீண்டும் மேற்படி ஜகுவர் ஆடம்பர வாகனத்தை உயர்ஸ்தானிகர் ஷேணுதா விலைக்கு வாங்கியுள்ளார்.
இவ்வாறு லண்டனிலிருக்கும் உயர்ஸ்தானிகர்கள் தமக்காக வாகனங்களைக் கடந்த காலங்களில் கொள்வனவு செய்துள்ளது பற்றி தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்களுக்கேற்ப முன்னாள் உயர்ஸ்தானிகர் பைஸல் முஸ்தபா 8 வருடங்கள் பழைமையான வாகனத்தையே பயன் படுத்தி வந்தார் எனவும் ஷ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சினால் உயர்ஸ்தானிகருக்கென புதிய வாகனம் கொள்வனவு செய்வதற்கு பணம் ஒதுக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்த போதும் அவர் புதிய வாகனத்தை விலை கொடுத்து வாங்காமல் பழைய வாகனத்தையே பயன்படுத்தினார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயினும், தற்போது லண்டனிலிருக்கும் உயர்ஸ்தானிகர் ஆடம்பர மேசிடெஸ் பென்ஸ் காரை வாங்கி மூன்று வருடங்களுக்குள் ஆடம்பர ஜகுவர் வாகனத்தை வாங்கியுள்ளார் எனவும் இதுபற்றி பத்திரிகைகளில் கேள்வி கிளப்பிச் செய்திகள் வெளியாகியுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் இந்த விடயம்பற்றி ஐ.ரி.என். தொலைக்காட்சி சேவை நிகழ்ச்சியொன்றில் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்த தகவல்களில், லண்டனிலிருக்கும் ஷ்ரீலங்கா உயர்ஸ்தானிகர் ஷேணுகா மேற்படி ஆடம்பர ஜகுவர் வாகனத்தை கொள்வனவு செய்வதற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் லண்டன் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் விசா பிரிவின் மூலம் வருமானம் பெருந்தொகையில் கிடைப்பதாகவும் கூறியுள்ளார். ஆனால், இதுபற்றி லண்டன் அலுவலகத்தில் பணிபுரியும் வாகன சாரதிகள் திவயின பத்திரிகைக்கு தெரிவித்த தகவல்களில் இவ்வாறு வெளிவிவகார அமைச்சர் லண்டன் உயர்ஸ்தானிகர் அலுவலகம் பெருந்தொகையில் வருமானம் பெற்றுவருவதாகக் கூறியுள்ளபோதும் ஆயிரக்கணக்கான பிரிட்டிஷ் பவுண் தொகை அலுவலகத்திலுள்ளோருக்கு மேலதிக வேலைக் கொடுப்பனவாக வழங்கப்படுகிறதெனவும் கூறியுள்ளனர். மேலும், உயர்ஸ்தானிகர் ஜகுவர் ஆடம்பர வாகனத்தை வாங்குவதற்கும் அவருடைய உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் தினமும் நடத்தப்படும் விருந்துபசாரங்களை நடத்துவதற்கும் பெருந்தொகையில் பணத்தைச் செலவழிக்கும்போது அலுவலக வாகனச் சாரதிகளாகிய அவர்கள் சிலநாட்களில் உணவும் இல்லாமல் சேவை செய்ய வேண்டியிருப்பதாகவும் அதற்கான கொடுப்பனவுகளும் அவர்களுக்குத் தரப்படுவதில்லை எனவும் மேற்படி சாரதிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், உயர்ஸ்தானிகரின் வாசஸ்தலத்திற்காக மாதம் 10,000 பிரிட்டிஷ் பவுண் (ஷ்ரீலங்கா ரூபா பெறுமதியில் 2.3 மில்லியன்) வாடகைக்காகச் செலவிடப்படுவதாகவும் இது ஷ்ரீலங்காவில் வாழும் ஏழை மக்களின் பணமே எனவும் ஆயினும் தமக்கு மேலதிக வேலை நேரக் கொடுப்பனவுகள் கொடுக்கப் படாமல் நிலுவையாக இருப்பதாகவும் அதற்காக விண்ணப்பிக்கும்போது அதைக் கொடுக்கப் பணம் இல்லை என்று உயர்ஸ்தானிகர் அலுவலகத் தரப்பில் கூறப்படுவதாகவும் மேலும் மேற்படி வாகனச் சாரதிகள் தெரிவித்துள்ளனர். சாரதிகளுக்கு மாதம் 100 மணி நேரம் மேலதிகக் கொடுப்பனவு வெளிவிவகார அமைச்சினால் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இதைக் காரணம் காட்டி குறித்த 100 மணி நேரத்துக்கும் மேற்பட்ட மேலதிக வேலைக்கான கொடுப்பனவுகள் மறுக்கப்பட்டுள்ளதாகவும் எவ்வாறாயினும் தாம் செய்யும் மேலதிக நேரக் கடமையில் பெரும் பகுதியும் உயர்ஸ்தானிகரின் தனிப்பட்ட போக்குவரத்துகளுக்காகச் செய்யப்படும் சேவையே எனவும் மேலும் மேற்படி சாரதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இவ்வாறு உயர்ஸ்தானிகரின் வாசஸ்தலத்தில் தினமும் நடத்தப்படும் விருந்துபசாரங்களுக்காகவும் திரைப்படம், நாட்டியம் முதலிய கலை நிகழ்ச்சிகளுக்காகவும் தினமும் மேலதிக வேலை செய்ய வேண்டியிருப்பதாலும் அந்த நிகழ்ச்சிகளுக்காக வரும் உயர்ஸ்தானிகரின் நண்பர்கள், உறவினர்களுக்காகவும் அலுவலக வாகனங்கள் பயன்படுத்தப்படுவதால் தாம் மேலதிக சேவை செய்ய வேண்டியுள்ளதாகவும் சாரதிகள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர். இந்த வகையில் செய்யப்பட்ட மேலதிக வேலை நேரக் கொடுப்பனவுகளில் பிரிட்டிஷ் பவுண் 9,400 வரையில் உயர்ஸ்தானிகர் அலுவலகம் கொடுக்காமலேயே நிலுவையாக உள்ளதாக உயர்ஸ்தானிகரின் சாரதியாக கடமையாற்றும் கே.எம்.சந்திரரத்ன எனப் படும் சாரதி கூறியுள்ளார்.
திவயின : 09.03.2008