ஒரேயொரு தொடரில் வெற்றி பெற்றதை வைத்து உலக சாம்பியன் அவுஸ்திரேலியாவுக்கு நிகரான அணியென இந்தியாவை சொல்ல முடியாதென்று முன்னாள் அவுஸ்திரேலிய பயிற்சியாளர் ஜோன் புக்னன் கூறியுள்ளார்.
சமீபத்தில் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற முக்கோண ஒரு நாள் தொடரில் வெற்றிபெற்று இந்தியா கிண்ணத்தை கைப்பற்றியது. உலக சாம்பியன் அவுஸ்திரேலியாவை இந்தியா வீழ்த்தியது கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் முன்னாள் அவுஸ்திரேலிய பயிற்சியாளர் ஜோன் புக்கனன், அவுஸ்திரேலிய அணிக்கு நிகராக இந்தியாவை கூற முடியாது என்று தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது; ஒரேயொரு தொடர் வெற்றி எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தி விடாது. அதற்குள் இந்தியா அவுஸ்திரேலியாவுக்கு நிகராக உருவாகிவிட்டதென்றும் கூற முடியாது. கடந்த 8 ஆண்டுகளாக அவுஸ்திரேலிய அணி சாதனை படைத்திருக்கிறது.
ஒரேயொரு தொடரில் இந்தியா வெற்றி பெற்றதை வைத்து அவுஸ்திரேலியாவுக்கு நிகராக இந்தியாவை கருத முடியாது. இனி வரும் தொடர்களில் இந்தியா சிறப்பாக விளையாட வேண்டும். இந்திய தேர்வுக் குழுவினர் இளைஞர்களை தேர்வு செய்திருப்பது பாராட்டுக்குரியது. ஆனால், டெஸ்ட் போட்டிகளில் இந்த வீரர்கள் எப்படி ஆடுகின்றனர் என்பதை பார்க்க வேண்டுமென்று கூறியுள்ளார்.
ஐ.பி.எல் போட்டிகளில் பங்கேற்கும் கொல்கத்தா அணிக்கு புக்கனன் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அணியின் கப்டன் சவுரவ் கங்குலி மற்றும் உரிமையாளர் ஷாருக்கானோடு ஆலோசனை நடத்தவுள்ளார்.