* இலங்கையின் போர் முன்னகர்வுகளின் போது நேரடியான இந்தியாவின் உதவி இந்தியாவில் இருக்கும் தமிழர்களை ஆத்திரமூட்டக்கூடும். மறுபுறத்தில் இலங்கை அரசாங்கம் மீது மேற்கொள்ளப்படும் அழுத்தங்கள் சீனாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான நேசக்கரத்தை மேலும் வலுப்படுத்தும் என்ற ஒரு இக்கட்டான சூழ்நிலையை இந்தியா எதிர்கொண்டுள்ளது
மேற்குலகத்தின் மனித உரிமைகள் தொடர்பிலான கரிசனைகளுக்கு இலங்கை முக்கியத்துவம் கொடுக்கவில்லை. எனவே, இதனால் பாரதூரமான விளைவுகள் ஏற்படும் என்று "நியூயோர்க் ரைம்ஸ்" நாளேடு எச்சரித்துள்ளது.
நியூயோர்க் ரைம்ஸ் நாளேட்டில் வெளியாகியுள்ள கட்டுரை விபரம் வருமாறு;
கடந்த 25 ஆண்டுகளாக இந்து சமுத்திரத்தின் குட்டித்தீவில் நிலவிவரும் அழுக்கான போரினால் உலக நாடுகள் பல தமது கரங்களால் இந்தத் தீவை பற்றிப் பிடித்துக்கொள்ள முயற்சித்துள்ளன. உலகெங்கிலும் வசித்துவரும் புலம்பெயர் தமிழர்கள் - பிரிவினைவாத பயங்கரவாதிகளுக்கு மிக முக்கிய நிதியுதவிகளை வழங்கி வருகின்றனர். இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வழங்கப்பட வேண்டிய நிதியுதவியே இவ்வாறு வழங்கப்படுகிறது.
அரசாங்கம் போரினை முன்னெடுப்பதற்கு வெளிநாட்டுச் சக்திகளின் உதவிக்கரங்களை எதிர்பார்த்துள்ளது. சீனாவினால் இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கப்படும் உதவிகள் காரணமாக இந்தியாவை புறக்கணிக்கக்கூடிய ஒரு நிலையும், மனித உரிமைகள் தொடர்பான அனைத்துலகத்தின் கருத்துகளை அலட்சியம் செய்யக்கூடிய ஒரு போக்கும் தற்போது காணப்படுகிறது.
5 ஆண்டு காலமாக நீடித்த போர் நிறுத்த உடன்படிக்கை இரத்துச் செய்யப்பட்டு, விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் முன்னகர்வுகளில் சில வெற்றிகளை இலங்கை அரசாங்கம் பெற்றுக்கொண்டுள்ளது. இந்தப் போர் முன்னகர்வுகளின் மூலம் மனித உரிமைகள் மீறப்படுவதாக இலங்கைக்கு எதிராக பரவலாகக் குற்றஞ்சுமத்தப்படுகிறது. இதனால், அமெரிக்கா உள்ளிட்ட சில முக்கிய நாடுகளிடமிருந்து போர் ஆதரவு மறுக்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் இலங்கையில் கடத்தல்களோ அல்லது ஊடக அடக்குமுறையோ இடம்பெறவில்லை என்று தெரிவிப்பதில் அதிக அக்கறை காட்டி வருகின்றனர். சிறுசிறு சம்பவங்களைத் தவிர பாரியளவிலான சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை என்று வெளிக்காட்டிக்கொள்ள முற்படுகின்றனர்.
இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகள் முக்கியமாக அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், கனடா போன்றவற்றிடம் கோரப்படும் உதவிகளை மட்டுப்படுத்த தீர்மானித்துள்ளதாகவும், இதற்குப் பதிலாக கிழக்கு நாடுகளின் உதவிகளைக் கோர உள்ளதாகவும் இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கோகண தெரிவித்துள்ளார்.
புதிய உதவி வழங்குவோர் அண்டை நாட்டவர்கள், அவர்கள் வித்தியாசமான அணுகுமுறைகளைக் கொண்டவர்கள்.
"ஆசிரியர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று மற்றவருக்கு கற்பித்துக் கொடுக்க மாட்டார்கள்" "தொடர்புகளைப் பேணுவதில் சில முறைகள் உள்ளன. சில வேளைகளில் ஒரு சிறிய கலந்துரையாடல்" அதனைவிடுத்து "இதை இப்படிச் செய்ய வேண்டும்" என்று புதிய உதவி வழங்குவோர் சுட்டிக்காட்ட மாட்டார்கள்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
விடுதலைப்புலிகள் ஒரு பயங்கரவாத அமைப்பு என்ற வகையைச் சார்ந்தோர் என்பதை அவர்களே உறுதிப்படுத்திக் கொண்டுள்ளனர். அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் கனடா போன்ற நாடுகளில் விடுதலைப்புலிகள் ஒரு பயங்கரவாத இயக்கமாவே நோக்கப்படுகிறது. இந்த நிலைமை அவர்களது நிதி திரட்டல் நடவடிக்கைகளுக்கு மிகவும் பாதகமான சூழ்நிலையைத் தோற்றுவிக்கும்.
இதேவேளை, சீனா, இலங்கைக்கான உதவிகளை பல மடங்கு அதிகரித்துள்ளது. சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை சீன அரசாங்கம் இலங்கைக்கு கடந்த ஆண்டு வழங்கியுள்ளது. இலங்கையின் பிரதான உதவி வழங்கும் நாடான ஜப்பானை விஞ்சுமளவிற்கு சீனா நேசக்கரம் நீட்டியுள்ளது.
பெருந்தெருக்களை அமைத்தல், இரண்டு மின் உற்பத்தி நிலையங்களை அபிவிருத்தி செய்தல் மற்றும் மகிந்தவின் சொந்த ஊரான அம்பாந்தோட்டையில் துறைமுகம் ஒன்றை நிர்மாணம் செய்தல் போன்ற பணிகளுக்கு சீன அரசாங்கம் உதவிகளை வழங்கியுள்ளது. சீனாவிடமிருந்தும், சீன ஒத்துழைப்பு நாடான பாகிஸ்தானிடமிருந்தும் இலங்கை ஆயுதக் கொள்வனவையும் மேற்கொள்கிறது. தெற்காசியப் பிராந்தியத்தில் இணக்கப்பாடொன்றை ஏற்படுத்துவதன் மூலம் நன்மையடைவதே சீனாவின் முக்கிய தந்திரோபாயமாகக் கருதப்படுகிறது. இந்தியா மீதே சீனா அதிக கரிசனை காட்டுகின்றது.
இலங்கையின் போர் முன்னகர்வுகளின் போது நேரடியான இந்தியாவின் உதவி இந்தியாவில் இருக்கும் தமிழர்களை ஆத்திரமூட்டக்கூடும். மறுபுறத்தில் இலங்கை அரசாங்கம் மீது மேற்கொள்ளப்படும் அழுத்தங்கள் சீனாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான நேசக்கரத்தை மேலும் வலுப்படுத்தும் என்ற ஒரு இக்கட்டான சூழ்நிலையை இந்தியா எதிர்கொண்டுள்ளது.
இலங்கைப் பிரச்சினை தொடர்பான இந்தியாவின் பங்களிப்பு தொடர்பில் மிகக்குறைந்த வாய்ப்புகளே உள்ளன என்று இலங்கைக்கான இந்திய அமைதி காக்கும் படையின் முன்னாள் தளபதி ஜெனரல் அசோக் குமார் மேத்தா தெரிவித்துள்ளார். இந்திய அரசாங்கத்தின் இலங்கைக்கான உதவிகளும் குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். சுமார் 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை இந்திய அரசாங்கம் உதவி வழங்கியுள்ளது.
இலங்கையில் நிலக்கரி மின் நிலையமொன்றை அமைக்கும் பணிகளை இந்தியா ஆரம்பித்துள்ளது. இந்திய தகவல் தொழில்நுட்பத்துறை முதலீட்டாளர்களை இலங்கையில் முதலீடு செய்யுமாறு கோரப்பட்டுள்ளது. தொலைத்தொடர்பு துறையிலும் முதலீடு செய்யுமாறு இந்திய முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டனைப் போன்றே புதுடில்லியும் இலங்கைக்கான நேரடியான இராணுவ உதவிக் கதவுகளை மூடியுள்ளது. எனினும், தமது புத்திசாதுரியமான இராஜதந்திர முன்னகர்வுகளின் மூலம் மறைமுகமான இராணுவ உதவிகளை வழங்க முடியும். குறிப்பாக, கடற்பரப்பில் மேற்கொள்ளப்படும் ஆயுதக் கடத்தல்களை தடுப்பதன் மூலம் இதனை மேற்கொள்ளலாம்.
20 ஆண்டுகளுக்கு முன்னர் பிராந்தியத்தின் அதிகாரப் பலம் இந்தியாவை மையமாக வைத்தே காணப்பட்டது. எனினும், தற்போது இந்தியாவின் பின்வழியாக சீனாவும் தனது காத்திரமான பங்களிப்பின் மூலம் தன்னை நிலைப்படுத்திக் கொள்ளத் தொடங்கியுள்ளது.
இந்திய துணைக் கண்டத்திற்கு அண்டைய நாடுகளின் துறைமுக வழிகள் தொடர்பாக ஒரு பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ள சீனா அதிக முனைப்பு காட்டுவதாக சிங்கப்பூரின் நேங்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் அனைத்துலக உறவுகளுக்கான பேராசிரியர் சீ. ராஜாமோகன் சுட்டிக்காட்டுகிறார்.
இந்து சமுத்திரத்தின் முக்கிய பாத்திரமாக தன்னை நிலைப்படுத்திக் கொள்வதில் சீனா அதிக சிரத்தை காட்டி வருவதாக அவர் மேலும் குறிப்பிடுகிறார். இதன் மூலம் இலங்கை போன்ற நாடுகளுக்கு அதிகமான வாய்ப்புகள் கிட்டியுள்ளன.
"தற்போது பல சிறிய நாடுகள் இந்தியாவின் தந்திரோபாயங்களில் பாதிப்புகளை ஏற்படுத்த சீனாவை ஒரு பகடைக்காயாக பயன்படுத்துகின்றன. இதன் மூலம் மனித உரிமைகள் தொடர்பான விடயங்கள் மூடி மறைக்கப்படுகின்றன" என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்திற்கான தெற்காசிய ஆய்வாளர் மீனாட்சி கங்குலி தெரிவித்துள்ளார்.
1990 களில் பர்மாவில் ஜனநாயகம் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்பதில் இந்தியா அதிக கவனம் எடுத்துக்கொண்டது. சீனாவின் இராணுவ நிர்வாகம் குறித்து உன்னிப்பாக அவதானித்து வந்தது. தற்போது இலங்கை தொடர்பான சீனாவின் நிலைப்பாடு குறித்து மிக கரிசனை காட்டி வருகின்றது. இந்து சமுத்திர பிராந்தியத்தில் அதிகாரம் தொடர்பான கரிசனையாகவே இதனை ஆய்வாளர் மீனாட்சி கங்குலி விதந்துரைக்கின்றார்.
இந்த வரிசையில் அண்மைய போட்டியாளராக ஈரானைக் குறிப்பிடலாம். கடந்த வருட இறுதிப்பகுதியில் இலங்கைக்கு 1.6 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உதவிகளை ஈரான் வழங்கியுள்ளது. அடிப்படையாக ஈரானிய எண்ணெய் வளத்தைப் பெற்றுக்கொள்வதற்காகவே இந்த கடனுதவியை ஈரான் வழங்கியுள்ளது. எனினும், அமெரிக்காவின் உதவிகள் கிடைக்காமை குறித்து இலங்கை மிகுந்த வருத்தத்துடனேயே காணப்படுகின்றது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தை இலங்கையில் நிறுவுவதற்கு அமெரிக்கா அழுத்தங் கொடுத்ததன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையில் மனக்கசப்பு நிலவுகிறது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகத்தின் ஆணையாளர் லூய்ஸ் ஆர்பரின் அண்மைய இலங்கைப் பயணத்தின் போது நாட்டில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால், இலங்கை அரசாங்கம் ஆத்திரமடைந்தது. ஜெனீவாவிற்கான இலங்கைப் பிரதிநிதியூடாக வெளியிடப்பட்ட கண்டன அறிக்கைகள் இலங்கை ஊடகங்களில் வெளியாகின.
அரசாங்கத்திற்கு சார்பான "தி ஐலன்ட்" நாளேட்டின் ஆசிரியர் தலையங்கமொன்றில் மிகக்கடுமையாக இந்த விவகாரம் விமர்சிக்கப்பட்டிருந்தது. மனித உரிமைகள் கண்காணிப்பகம் கடந்த வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் இலங்கையில் நிகழும் காணாமற் போதல்களுக்கு அரசாங்கமே பொறுப்பு சொல்ல வேண்டும் எனத் தெரிவித்திருந்தது. அதே நாளில் அனைத்துலக சுயாதீன ஆணைக்குழுவினரும் தமது பணிகளை இடைநிறுத்திக் கொள்வதாக அறிவித்திருந்தனர். போதியளவு ஒத்துழைப்பு வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை அந்த அமைப்பு முன்வைத்திருந்தது. எனினும், சட்டமா அதிபர் திணைக்களம் வேறும் நபர்களைக் கொண்டு இந்த ஆணைக்குழுவை மீண்டும் நிறுவுவதற்கு திட்டமிட்டிருப்பதாக தெரிவித்திருந்தது.
மேற்குலகத்தின் மனித உரிமைகள் தொடர்பான கரிசனைகள் குறித்து அவ்வளவு முக்கியத்துவம் தற்போது காட்டுவதில்லை. எனினும், இந்த நிலைமை பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். அரசாங்கத்தின் இந்த துணிகரமான செயல் நாட்டின் பொருளாதாரத்தை மிக மோசமாக பாதிக்கும், ஏற்கனவே பணவீக்கம் மிக உயர்ந்த நிலையில் காணப்படுகிறது.
இலங்கை அரசாங்கம் சில வலுவான அனைத்துலக சக்திகளின் நன்மதிப்பை இழந்து வருகின்றது. குறிப்பாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக முன்னுரிமை இந்த ஆண்டுடன் முடிவுக்குக் கொண்டுவரப்படவுள்ளது.
எனினும், சீனா எவ்வளவு காத்திரமான பங்களிப்பை வழங்கிய போதிலும் இன்னமும் இலங்கையின் பிரதான வர்த்தக மையங்களாக ஐரோப்பிய நாடுகளே திகழ்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மை என்று சொமினி சென்குப்தா தெரிவித்துள்ளார்.