பிரக்ஞையின்றி மடமைத்தனமான முறையில் 1990 களில் அரசியல்வாதிகள் மேற்கொண்ட தீர்மானங்களினால் இலங்கையில் சட்டத்துறையின் தரம் சீர்குலைந்துவிட்டது என்று பிரதம நீதியரசர் சரத் என். சில்வா நேற்று முன்தினம் தெரிவித்திருக்கிறார்.
சட்டக்கல்லூரி மண்டபத்தில் சட்டத்துறை மாணவர்கள் ஒன்றியத்தின் அங்குரார்ப்பண வைபவத்தின் போதே நாட்டின் நீதித்துறையின் அதிஉயர் பதவியை வகிக்கும் பிரதம நீதியரசரிடமிருந்து இந்தக் கருத்து வெளிப்பட்டுள்ளது.
சட்டக்கல்வியில் ஆங்கில மொழி மூலமான போதனைகளை மீள அறிமுகப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு தனது தீவிரமான ஆதரவை வெளிப்படுத்தியிருக்கும் பிரதம நீதியரசர், தற்போதைய பதவியில் தான் பெற்றிருக்கும் 10 வருடகால அனுபவமும் அரச சேவையில் தான் ஈட்டியிருக்கும் 40 வருடகால அனுபவமும் இலங்கையின் பழைய கல்வி நிறுவனமான சட்டக் கல்லூரியில் ஆங்கில மொழிமூலமான போதனைகளை மேற்கொள்வதற்கான தீர்மானத்தை மேற்கொள்ள வழிவகுத்தது என்று சுட்டிக்காட்டத் தவறவில்லை.
அதேசமயம், சட்டத்துறையில் சமீபகாலத்தில் பிரகாசித்த மறைந்த லக்ஷ்மன் கதிர்காமர், லலித் அத்துலத் முதலி போன்றோர் தமது தொழில்துறையில் உயர்ந்த அந்தஸ்துக்கு வருவதற்கு அவர்கள் ஆங்கிலத்தில் பெற்றிருந்த போதிய அறிவே காரணமெனவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ஆங்கிலம் மற்றும் இலத்தீன் மொழிகளில் தான் பெற்றுள்ள பாண்டித்தியமே இந்த உயர் பதவியை எட்டுவதற்கு பிரதான காரணமென்பதையும் அவர் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.
அதேசமயம், இந்த நாட்டில் இனப்பிரச்சினையை விசுவரூபம் எடுக்க வைத்த அடிப்படைக் காரணியான 1956 இல் மறைந்த பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்காவின் அரசாங்கத்தால் பிரகடனப்படுத்தப்பட்ட தனிச் சிங்களச் சட்டத்தால் ஏற்பட்டிருக்கும் பெறுபேறுகள் குறித்தும் அவர் வெளிப்படையாக விமர்சிக்கத் தயங்கவில்லை.
24 மணிநேரத்தில் தனிச் சிங்களச் சட்டத்தை அறிமுகம் செய்தது போன்று ஆங்கிலத்தையும் மீண்டும் பழைய இடத்திற்கு அரசாங்கம் கொண்டு வர வேண்டும் என்று அறிவுரை வழங்கியிருக்கும் பிரதம நீதியரசர், தனிச் சிங்களச் சட்டத்தால் தமிழர்கள் மற்றும் சிறுபான்மையினத்தவர்கள் மத்தியில் வெறுப்பு, பகைமையுணர்வு பரவியதையும் சுட்டிக்காட்டியதுடன், அந்த நிலைமையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளதை அவதானிக்க முடிந்தது.
அத்துடன், மடமைத்தனமாக செயற்படாமல் மாணவர்கள் ஆங்கில மொழியை கற்றுக்கொள்ளுமாறும் அறிவுக்கான களஞ்சியமாக அந்தமொழி திகழ்வதாகவும் மாணவர்களுக்கு பிரதம நீதியரசர் அறிவுரை கூறியிருப்பதையும் காணமுடிந்தது.
நாட்டின் பெரும்பான்மையினத்தவர்களின் மொழி, மதம், கலாசாரத்துக்கே முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்றும் மற்றைய சிறுபான்மை இனங்களின் மொழி, சமயம், பாரம்பரியங்கள் யாவும் இரண்டாம் பட்சமே என்ற ரீதியிலேயே தென்னிலங்கை அரசியல்வாதிகளின் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதும் இனநெருக்கடி தொடர்வதற்கு முக்கிய காரணமாகும்.
இலங்கை - இந்திய உடன்படிக்கையைத் தொடர்ந்து 80 களின் பிற்பகுதியில் சிங்களத்தைப் போன்று தமிழுக்கும் உத்தியோகபூர்வமொழி அந்தஸ்து சட்டரீதியாக வழங்கப்பட்டபோதும் அது முறையாக அமுல்படுத்தப்படுவதில்லையென்பது இரகசியமல்ல. இது தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக அவ்வப்போது அறிக்கைகள் வெளியிடப்படுகின்றனவே தவிர ஆக்கபூர்வமான பெறுபேறுகள் ஏற்பட்டதாக இதுவரை தென்படவில்லை.
தாய்மொழிமூலம் மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பது அவசியமானதென்றாலும் கூட உயர்கல்வியை ஆங்கிலமொழிமூலம் கற்கும் போதே மாணவர்கள் வேலைவாய்ப்பையோ ஏனைய தேவைகளையோ இலகுவாக நிறைவேற்றக்கூடியதாக இருக்கும்.
இலங்கையைப் பொறுத்தவரை பிரச்சினைக்கான அடிப்படைக் காரணம் உத்தியோகபூர்வ மொழிச் சட்டமோ அல்லது பிரஜாவுரிமைச் சட்டமோ இல்லையெனவும் ஒல்லாந்தர், பிரிட்டிஷார் ஆட்சியின் பின்னர் இலங்கையின் ஆட்சியாளர்களாக வருவதற்கான கனவுகளுடன் இருந்த தமிழர்கள் சிங்கள மக்களுக்கு உரியவற்றை வழங்க விரும்பாததே தற்போதைய பிரச்சினைக்கான மூலகாரணமென பேராசிரியர் நளின் டி சில்வா ஷ்ரீலங்கா கார்டியனில் அண்மையில் எழுதியிருந்தார். இதனை வாசித்துப் பார்த்திருந்தால் சொல்லொணா நெருக்கடிக்குள் தள்ளப்பட்டு தவித்துக்கொண்டு உயிர்வாழ்வுக்காக ஏங்கிக்கொண்டிருக்கும் பெரும் எண்ணிக்கையான தமிழ் மக்கள் விரக்திச் சிரிப்பை வெளிப்படுத்துவதை விட தற்போதைய நிலையில் வேறொன்றையும் எதிர்பார்க்க முடியாது.
கருத்துகளை எவரும் தெரிவிக்கமுடியும். அதற்குரிய வரலாற்று ரீதியான ஆதாரங்களையும் வெளிப்படுத்த முடியும். அதேசமயம், வரலாற்று ரீதியான தவறுகளிலிருந்தும் மீட்சிபெற்று எதிர்காலத்தை வளமானதாக மாற்றிக்கொள்வதற்குரிய பக்குவத்தை அரசாங்கமோ அல்லது ஆளும் தரப்பினரோ பெற்றுக்கொள்வதற்கு அவர்களை வழிநடத்த வேண்டிய பொறுப்பு கல்விமான்கள், புத்திஜீவிகளை சார்ந்ததாகும்.
அந்த வகையில் இனங்கள் மத்தியில் சகவாழ்வை ஏற்படுத்தக்கூடிய கருத்துகளையும் வழிகாட்டல்களையும் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா அண்மைக்காலங்களில் அதிகளவுக்கு வழங்கி வருவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.
தென்னிலங்கையில் பேராசிரியர்கள் சிலர் தாங்கள் சார்ந்த அரசியல் கட்சிகளின் வாக்கு வங்கியை செழிப்பாக்க முடியுமென நினைத்து இனக்குரோதத்தை கக்கும் கருத்துகளை பரப்பிவரும் நிலையில், நீதித்துறையின் அதிஉயர்ந்த பதவியிலிருக்கும் பிரதம நீதியரசர் அண்மைக்காலமாக தனது தொழிற்றுறைக்கும் அப்பால் சென்று வெளிப்படுத்தும் கருத்துகள் சம்பந்தப்பட்டவர்களை குறிப்பாக அரசாங்கத்தின் கொள்கை வகுப்பாளர்களை சிந்திக்க வைத்து அவர்களை செம்மையான பாதையில் செல்ல வழிவகுக்க வேண்டும் என்பதே நியாயமாக சிந்திக்கும் யாவரினதும் எதிர்பார்ப்பாகும்.