அமெரிக்க இராணுவத்தினர் பாகிஸ்தானுக்குள் ஆயுதங்களுடன் நடமாட அனுமதிக்க வேண்டுமென்ற வெள்ளை மாளிகையின் கோரிக்கையை பாகிஸ்தான் அரசு நிராகரித்துள்ளது.
அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சு அண்மையில் பதினொரு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து கடிதம் ஒன்றை பாகிஸ்தான் அரசுக்க அனுப்பியிருந்தது.
இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பொறியியலாளர்கள், நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட பதவிகளில் இராணுவ வீரர்களை பணியில் அமர்த்த அனுமதிக்க வேண்டும்.
அமெரிக்க இராணுவத்தினர் எந்நேரமும் விசா இன்றி பாகிஸ்தானுக்குள் நுழையவும், வெளியேறவும் வழிவகை செய்ய வேண்டும். அவர்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதை தடை செய்யக்கூடாது.
பாகிஸ்தான் சட்டவிதிகளுக்கு அவர்கள் கட்டுப்படமாட்டார்கள். அமெரிக்க சட்டவிதிகள் மட்டுமே அவர்களுக்கு பொருந்தும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிடம் இதே கொள்கையை கடைப்பிடிப்பதாகவும், பாகிஸ்தானும் அதேபோன்று நடந்து கொள்ள வேண்டும் என்றும் அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது.
இதனை அதிர்ச்சியுடன் பரிசீலித்த பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம், வெளியுறவு அமைச்சகம் மற்றும் சட்ட அமைச்சகம் ஆகியவை அமெரிக்காவின் கோரிக்கைகளை ஒருபோதும் ஏற்க முடியாது என்று ஆணித்தரமாக கூறியுள்ளன.
இந்த கோரிக்கைகளுக்கு செவிசாய்த்தால் பாகிஸ்தானை அமெரிக்காவிடம் அடகு வைத்தது போலாகிவிடும் என்று பாதுகாப்பு அமைச்சக உயரதிகாரி ஒருவர் கவலையுடன் தெரிவித்தார்.
பாகிஸ்தானின் பழங்குடியினப் பகுதிகளில் அமெரிக்க இராணுவத்தை நிலைநிறுத்த சில மாதங்களுக்கு முன் அனுமதி கோரப்பட்டது. இதனை பாகிஸ்தான் ஏற்க மறுத்துவிட்டது.
இதற்குப் பதிலாக, தீவிரவாதத்தை எதிர்கொள்ள பாகிஸ்தான் படையினருக்கு சிறப்பு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யலாம் என்று யோசனை தெரிவிக்கப்பட்டது.
இதன்படி, போர் பயிற்சி நிபுணர்களை பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்க அமெரிக்க இராணுவம் ஏற்பாடுகளை செய்து வருகிறது.