பாகிஸ்தானில் அடுத்தடுத்து நடந்த இருவேறு கார்க்குண்டுத் தாக்குதலில் 32 பேர் பலியானதுடன், 170க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இக்குண்டுத் தாக்குதலில் ஒன்று லாகூரிலுள்ள ஆசிப் அலி சர்தாரியின் இல்லத்திற்கருகே நடந்திருப்பதால் அவரைக் கொல்ல நடந்த முயற்சியாகவே இருக்கலாமென்றும் தெரிவிக்கப்படுகின்றது.
புலனாய்வு அலுவலகத்தின் வாகனங்கள் நிறுத்துமிடத்திலும் பெனாசிரின் வீட்டிற்கருகிலும் இக்குண்டுத் தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளன.
பஞ்சாப் மாகாணம் லாகூரில் கோயில் சாலையில் உள்ள 7 மாடி கட்டிடத்தில் புலனாய்வு அலுவலகம் இயங்கி வருகிறது. சுமார் 800 பேர் இங்கு பணியாற்றி வருகின்றனர். காலை 9.30 மணியளவில் இங்கு வாகனங்கள் நிறுத்துமிடத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது.
இதில் 22 பேர் கொல்லப்பட்டனர். குண்டு வெடித்த சமயத்தில் 100 பேர் அலுவலகத்தில் இருந்தனர். இடிபாடுகளில் அவர்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
குண்டுவெடிப்பில் புலனாய்வு அலுவலகக் கட்டடத்தின் முன்பகுதி முற்றிலுமாக சேதமடைந்தது. கட்டடத்தின் ஜன்னல்கள் தூக்கி வீசப்பட்டன. அருகிலிருந்த வீடுகள் சேதமடைந்தன. அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த 12 கார்கள் முற்றிலுமாக எரிந்து சாம்பலாகின.
இந்த அலுவலகத்தின் அருகில் பள்ளி ஒன்றும் இயங்கி வருகிறது. குண்டுவெடிப்பில் பள்ளி மாணவர்களும் காயமடைந்தனர். இதையடுத்து அங்கிருந்த மாணவர்கள் உடனடியாக வேறு இடத்திற்கு மாற்றப்பட்டனர்.
இதுவரை 18 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், இடிபாடுகளில் சிக்கியுள்ள ஊழியர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
லாகூரில் பெனாசிர் குடும்பத்துக்குச் சொந்தமான `பிலாவல் இல்லம்' அருகே மற்றொரு குண்டு வெடித்தது.
இந்த வீட்டில் தான் பெனாசிரின் கணவர் சர்தாரி தங்குவார். இந்த வீட்டின் அருகே உள்ள விளம்பர நிறுவனத்தில் காலை 10 மணிக்கு குண்டுவெடித்தது.
இதில், 2 குழந்தைகள் உட்பட 4 பேர் கொல்லப்பட்டனர். இந்தப் பகுதியில் உள்ள குறிப்பிட்ட வீட்டை குறிவைத்தே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சர்தாரியை கொல்ல முயற்சி நடந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். அப்பகுதியில் மூன்றாவதாக ஒரு குண்டு வெடித்ததாகவும் கூறப்படுகிறது.
சக்தி வாய்ந்த வெடிபொருட்களை வாகனங்களில் ஏற்றி வந்து தாக்குதல் நடத்தியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 4 ஆம் திகதி மால் சாலையில் உள்ள கடற்படைக் கல்லூரியை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர்.
இச்சம்பவம் நடைபெற்ற ஒரு வாரத்திற்குள் மற்றொரு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சமீப காலமாக பாகிஸ்தானில் இராணுவ அலுவலகங்களை குறிவைத்து தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
அடுத்தடுத்து நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களையடுத்து, நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ரயில் மற்றும் விமான நிலையங்கள், வர்த்தகப் பகுதிகள், அரசு அலுவலகங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.