* கிழக்கு மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டாமென மகஜர்
எம்.ஏ.எம்.நிலாம்
மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி சபைத் தேர்தல் முற்று முழுதாக ஆயுத முனையில் நடத்தப்பட்டதாக குற்றம் சாட்டி தேர்தல் செயலகத்திற்கு முன் நேற்று பாரிய ஆர்ப்பாட்டம் நடத்திய ஐ.தே.க. கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலை நடத்த வேண்டாமென வலியுறுத்தி தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்காவிடம் மனுவொன்றையும் கையளித்திருக்கிறது.
எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ராஜகிரியவில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் பெருந்தொகையான மக்கள் கலந்து கொண்டனர்.
"அரச படைத்துப்பாக்கிகள், பிள்ளையான் குழு ஆயுதங்கள் மூலமாக ஜனநாயகத்துக்கு வேட்டு"
"தேர்தல் ஆணையாளரே இதுதான் நீதியான நேர்யைான தேர்தலா?"
"ஆயுத முனையில் ஜனநாயகத் தேர்தல் உலகில் வேறெங்கும் உண்டா?"
"வாக்கு கொள்ளை இன்னும் எத்தனை நடக்கப் போகின்றது" போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட சுலோக அட்டைகளைத் தாங்கிய வண்ணம் மக்கள் ஆர்ப்பாட்டத்திலீடுபட்டனர்.
காலை 10.30 மணிக்கு ஆரம்பித்த ஆர்ப்பாட்டப் பேரணி சுமார் ஒரு மணிநேரம் இடம் பெற்றது.
ஆர்ப்பாட்டப் பேரணியின் இறுதியில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கூடியிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றினார்.
அவர் தமதுரையில் குறிப்பிட்டதாவது;
"மட்டக்களப்பு உள்ளூராட்சித் தேர்தலில் என்ன நடக்கும் என்று நாம் எதிர்வு கூறியிருந்தோம். அது அப்படியே நடந்து விட்டது. ஆயுத முனையில் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. ஊழலும், மோசடியும் தாராளமாகவே இடம் பெற்றுள்ளன. அரச பயங்கரவாதம் மீண்டுமொரு தடவை உறுதி செய்யப்பட்டுள்ளது.
அரசாங்கக் கட்சியும் ஆயுத மேந்திய ஒரு குழுவும் ஒன்றாக கை கோர்த்துக் கொண்டு செயற்பட்டு அனைத்து உள்ளூராட்சி சபைகளையும் கைப்பற்றிக் கொண்டுள்ளது. தமிழ் ஆயுதக் குழுவான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் வேட்பாளர்கள் ஆயுதமேந்திய வண்ணமே தேர்தலை எதிர் கொண்டன. அரச தரப்பும் அரச படையினரின் பூரண ஒத்துழைப்புடன் களமிறங்கியிருந்தன.
வாக்களிப்பில் மக்கள் எதிர் பார்த்த அளவில் பங்கேற்கவில்லை என்பதை கண்காணிப்புக்குழுக்களும் சிவில் அமைப்புகளும் சுட்டிக் காட்டியுள்ள நிலையில் 56 வீதமானோர் வாக்களித்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிற்பகல் 2 மணிக்குப் பிறகு வாக்களிப்பு நிலையங்கள் வெறிச் சோடிக்கிடந்தன. இந்தநிலையில், வாக்குப்பெட்டிகளில் எப்படி வாக்குகள் விழுந்தன என்பது கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.
கருணா அம்மானை அரசு தலையைத்தடவ நாட்டை விட்டு வெளியேற்றிவிட்டு பிள்ளையான் குழுவைத் தனது கைக்குள் வைத்துக் கொண்டு தேர்தலை நடத்தி முடித்துள்ளது.
கருணா அம்மான் தனக்கு நேர்ந்தது என்னவென்பதைப் பிரிட்டிஷ் நீதிமன்றில் விளக்கிக்கூறியுள்ளார். பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவின் திருவிளையாடல்களையும் அவர் பகிரங்கப்படுத்தியுள்ளார்.
தனது அணியுடன் சேர்ந்து போட்டியிட முன்வருமாறு ஐக்கிய தேசியக் கட்சியினரை பிள்ளையான் குழு கட்டாயப்படுத்தியதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
பொலிஸார் மற்றும் படைத்தரப்பின் பூரண ஆதரவு பிள்ளையான் குழுவுக்குத் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. தவிர ஆயுதங்களைத் தமது விருப்பப்படி பாவிக்கவும் அவர்களுக்கு இடமளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நீதியானதும் நேர்மையானதுமான தேர்தல் நடந்திருப்பதாகக் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியுமா?
ஜனநாயக அரசியல் கட்சிகளால் அங்கு நடமாடவே முடியவில்லை. ஆயுதக்குழுவே மட்டக்களப்பில் அரசோச்சுகின்றது.
இந்தநிலையில், ஜனநாயக அரசியல் அங்கு கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பில் தொடக்கி வைக்கப்பட்டிருக்கும் இந்த ஆயுதமுனையிலான ஜனநாயக தேர்தல் எதிர்காலத்தில் நாட்டில் சகல பகுதிகளிலும் தொடரப்போகும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனைத் தடுத்து நிறுத்த அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைய வேண்டும்.
சர்வாதிகாரத்தின் பிடியிலிருந்து நாட்டைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஜனநாயகத்தை மதிக்கும் சக்திகளின் கைகளில் தங்கியுள்ளது. நேர்மையான சிவில் அமைப்புகளின் ஒத்துழைப்புகளையும் இந்தப் போராட்டத்தில் இணைத்துக் கொள்ளுமாறு அழைக்கின்றோம்.
ஆர்ப்பாட்டப் பேரணியின் முடிவில் பாராளுமன்ற உறுப்பினர்களான திஸ்ஸ அத்தநாயக்கா, ரவிகருணாநாயக்க ஆகியோர் தேர்தல்கள் ஆணையாளரிடம் மட்டக்களப்பு கண்டன மகஜரொன்றைக் கையளித்தனர்.