* அமைச்சர் ரோஹித போகொல்லாகம
டிட்டோகுகன்
அரசாங்கம் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடத்திய உள்ளூராட்சி சபைத் தேர்தல் குறித்து சர்வதேச சமூகம் பாராட்டியிருப்பதாக தெரிவித்த வெளிநாட்டமைச்சர் ரோஹித போகொல்லாகம, மட்டக்களப்பு மாநகர சபையில் அரசு வெற்றி பெற வேண்டிய தேவையிருந்ததால் அதற்கு மக்கள் அபிமானம் பெற்ற கட்சியொன்றை இணைத்துக் கொள்ள வேண்டுமென்பதற்கு அமையவே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுடன் கூட்டணியை ஏற்படுத்திக் கொண்டதாகவும் விளக்கமளித்தார்.
மட்டு. மாவட்ட உள்ளூராட்சி சபைத் தேர்தல் குறித்து இலங்கையிலுள்ள வெளிநாட்டு தூதுவர்களுக்கு விளக்கமளித்ததன் பின்னர் அமைச்சர் போகொல்லாகம வெளிநாட்டமைச்சில் நேற்று புதன்கிழமை நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் இங்கு மேலும் பேசுகையில்;
"தற்போதைய மோதல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயல்பு நிலையை ஏற்படுத்த அரசாங்கத்துக்கு தெளிவான திட்டமொன்று இருக்கிறது என்பதையும் உறுதிமொழிகளை நிறைவேற்றும் என்பதனையும் திங்கட்கிழமை முடிவடைந்த தேர்தலின் மூலம் உள்நாட்டு மற்றும் சர்வதேச சமூகங்களுக்கு இலங்கை எடுத்துக் காட்டியிருக்கிறது.
புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட பகுதிகளில் மக்களுக்கான ஜனநாயக உரிமைகளை நிலைநாட்டுவதென்ற அரசாங்கத்தின் கொள்கையில் இதுவொரு முக்கிய மைல்கல்லாகும். அத்துடன், இந்தத் தேர்தலில் போட்டியிட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் முன்னர் பயங்கரவாதிகளாக வர்ணிக்கப்பட்ட நிலையிலிருந்து விடுபட்டு ஜனநாயக வழிக்கு வந்து மக்களின் அபிமானத்தை பெற முடிந்திருக்கிறது. இது சந்தேகத்துக்குரிய விடயம்.
இதேநேரம், உள்ளூராட்சி சபைக்கான தேர்தலின் சாதகமான முடிவானது சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் சிபார்சுகளின் படி எதிர்வரும் மே மாதத்தில் கிழக்கு மாகாணம் முழுவதும் நடத்த உத்தேசிக்கப்பட்டிருக்கிற மாகாண சபைத் தேர்தலுக்கு சாதகமான சமிக்ஞையை காட்டியிருக்கிறது.
கிழக்கின் அபிவிருத்திப் பணிகளுக்கு சர்வதேச சமூகமும் ஐ.நா.முகவர் அமைப்புகளும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களும் உதவி வருகின்றன. கிழக்கில் இயல்பு நிலைமை உருவாக்கும் நடவடிக்கைகளில் பங்காளிகளாக செயற்பட்டு வருவதற்காக சர்வதேச சமூகத்திற்கு இலங்கை அரசாங்கம் நன்றி தெரிவிக்கிறது. இலங்கையைப் போன்ற பிரச்சினை மிக்க நிலைவரங்களைக் கொண்ட ஏனைய நாடுகளுக்கும் இதுவொரு சிறந்த முன்மாதிரியாகும்.
இதேநேரம், கிழக்கில் அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் மாற்றங்கள் ஏற்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை சர்வதேச சமூகத்தினர் ஒப்புக் கொள்வார்கள் என்றும் அதற்கான இலக்கை அடையும் வரை மேலதிக உதவிகள் கிடைக்கக் கூடியதாக இருக்குமெனவும் அரசாங்கம் நம்புகிறது.
மேற்குறித்த விடயங்களை நான் சர்வதே சமூகத்தினருக்கு விளக்கமளித்தேன். அவர்கள் இலங்கை அரசின் நடவடிக்கைகளுக்கு பாராட்டி திருப்தி வெளியிட்டனர்.
எனினும், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தேர்தலில் போட்டியிடாமைக்கான காரணத்தை சிலர் வினவினர். ஐ.தே.க. தனது நிலையை உணர்ந்து மக்களின் ஆதரவைப் பெற முடியுமென்ற நம்பிக்கை இல்லாததால் போட்டியிடவில்லை என்று எடுத்துக் கூறினேன்.
இதேநேரம், தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை பொறுத்த வரையில் அவர்கள் புலிகளின் கைப் பொம்மைகளாகவே செயற்பட்டு வருகின்றனர். இவ்வாறான நிலையில் பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட பகுதியில் அவர்களுக்கு ஆதரவு கிடைக்குமா என்ற சந்தேகத்தில் அவர்கள் போட்டியிடவில்லை. எனினும், எதிர்வரும் ஜனநாயக நடவடிக்கைகளில் தமிழ் கூட்டமைப்பினர் பங்கு கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
அத்துடன், மட்டக்களப்பு மாநகர சபையை வெற்றிக் கொள்ள வேண்டிய தேவை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு (அரசுக்கு) இருந்தது. அதற்கு மக்களின் அபிமானம் பெற்ற கட்சியொன்றின் கூட்டு அவசியப் பட்டதற்கமைவாகவே நாம் கூட்டொன்றை ஏற்படுத்திப் போட்டியிட்டோம்.
இதேநேரம், வடக்குக்கான ஆளுநரை தெரிவு செய்வது தொடர்பில் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. ஆளுநர் தெரிவு செய்யப்பட்டதும். ஜனாதிபதியினால் ஆலோசனை சபை விரைவில் நியமிக்கப்படும்" என்றார்.