* அமெரிக்கா கடும் குற்றச்சாட்டு
இலங்கை அரசாங்கம் மனித உரிமைகளுக்கு மதிப்பளிப்பது தொடர்ச்சியாக குறைவடைந்து வருவதாக அமெரிக்கா சாடியுள்ளது.
நாடுகள் மனித உரிமைகளை பேணிக் கடைப்பிடிக்கும் நடைமுறைகள் தொடர்பான வருடாந்த அறிக்கையை அமெரிக்க வெளி விவகார அமைச்சு நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டிருக்கிறது. அதில் இலங்கை தொடர்பான விரிவானதொரு அறிக்கையிலேயே மனித உரிமைகளுக்கு கொழும்பு மதிப்பளிப்பது தொடர்ந்தும் வீழ்ச்சி கண்டு வருவதாக சுட்டிக்காட்டியுள்ளது.
அரசாங்க முகவர்களால் சட்டத்திற்கு புறம்பான படுகொலைகள் இடம்பெறுவதாக நம்பகரமான அறிக்கைகள் சுட்டிக் காட்டுவதாகவும் இனந்தெரியாதவர்களால் படுகொலைகள் இடம்பெறுவதாகவும் அரசாங்கத்துடன், தொடர்புடைய துணை இராணுவத்தினரால் அரசியல் நோக்கத்துடனான கொலைகளும் சிறுவர்களை படைக்கு சேர்ப்பதும் இடம்பெறுவதாகவும் காணாமற்போதல், கண்மூடித்தனமான கைதுகள், தடுத்து வைத்தல், சிறைச்சாலைகளில் மோசமான சூழ்நிலை, நியாயமான விசாரணை மறுப்பு, அரசாங்கத்தின் ஊழல்கள், வெளிப்படைத் தன்மையின்மை, மத சுதந்திரத்திற்கு பாதிப்பு, நடமாடும் சுதந்திரத்திற்கு பாதிப்பு, சிறுபான்மையினர் மீதான பாரபட்சங்கள் என்பன காணப்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆயுத மோதல்களின் அதிகரிப்பால் மனித உரிமைகளுக்கு அரசு மதிப்பளிப்பது குறைவடைந்து வருகிறது. மனித உரிமை மீறல்களில் பெரும்பான்மையாக நாட்டின் சனத்தொகையில் 16 சதவீதத்தைக் கொண்டிருக்கும் தமிழ் மக்களே பாதிக்கப்படுகின்றனர்.
இராணுவம், பொலிஸார், அரச ஆதரவு பரா இராணுவ குழுக்கள், பொதுமக்கள் மீதான தாக்குதல்கள், சித்திரவதை, கடத்தல், பணயம் வைத்தல், கப்பம் அறவிடுதல் போன்றவற்றில் ஈடுபடுவதாக அதிகளவிலான அறிக்கைகள் உள்ளன. அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள யாழ். குடா நாட்டில் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. வருட முடிவில் நீதி விசாரணைக்கு புறம்பான படுகொலைகள் தினந்தோறும் என்ற அடிப்படையில் இடம்பெற்றுள்ளன. இராணுவ புலனாய்வுப் பிரிவுகள் அல்லது இணைந்த துணைப் படைக்குழுக்கள் இக்குற்றச் செயல்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு தெரிவிக்கபபடுகிறது. இந்தத் துஷ்பிரயோகங்கள் தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டாலும் விசாரணைகள் இடம்பெறவில்லையெனவும் இவை தொடர்பான பழைய வழக்கு விசாரணைகள் மிகத் தாமதமாகவே இடம்பெறுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பத்திரிகையாளர்கள் சிவில் சமூகத்தினர் உட்பட பொதுமக்களைத் தடுத்து வைப்பதற்கு அவசர காலவிதிகளை பாதுகாப்புப் படைகள் பயன்படுத்துகின்றனர்.
வடக்கில் பெரும்பகுதியை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் விடுதலைப் புலிகள் தொடர்ச்சியாக பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவதுடன் சித்திரவதை, கைதுகள், தடுத்து வைத்தல், நீதிவிசாரணையை நிராகரித்தல், அந்தரங்கத்தில் பலவந்தமான தலையீடு, பேச்சு சுதந்திரத்தை மறுத்தல், பலவந்தமாக சிறுவர்கள் உட்பட ஆட்களை திரட்டுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். திருமலை, கொழும்பு போன்ற இடங்களில் அரசியல் நோக்கத்துடனான கொலை, தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதுடன் தெற்கில் பொது மக்களின் பஸ்கள் மீதும் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
2007 இல் அரச படைகளுக்கும் புலிகளுக்குமிடையிலான மோதல்களில் 3,200 பேர் இறந்துள்ளனர். அவர்களில் சுமார் ஆயிரம் பேர் பொதுமக்களாகும்.
அரச சார்பற்ற நிறுவனங்களில் பணியாற்றுவோர் பலர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த இரு வருடங்களில் தன்னார்வ தொண்டர் நிறுவனப் பணியாளர்கள் 30 பேர் வரை பலியாகியிருப்பதாக ஐ.நா. மனிதாபிமான விவகாரங்களுக்குப் பொறுப்பான உதவி செயலாளர் நாயகம் ஜோன் ஹோல்ம்ஸ் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் அரசாங்கம் தனது படையினருக்கு உதவியாக துணை இராணுவக் குழுக்களை பயன்படுத்தியுள்ளது. வரவு- செலவுத் திட்ட வாக்கெடுப்பின் போது மட்டக்களப்பில் தமிழ் எம்.பி.க்களுடன் தொடர்புடையோர்கள் பணயக் கைதிகளாக வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். பரா இராணுவக்குழுக்களுடன் தனது தொடர்பை அரசாங்கம் வெளிப்படையாக மறுத்துள்ளது. ஆனால், சிறப்புரிமையென்ற கலாசாரத்தின் கீழ் பதுளை இராணுவக் குழுக்கள் இயங்கக்கூடியதாக இருப்பதுடன் எதிரான பொது மக்கள் புலிகளின் ஆதரவாளர்களென சந்தேகிக்கப்பட்டனர்.
காணாமற் போதல்
சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகளின் அறிவுறுத்தல்களுக்கமைய இயங்குவதென தெரிவிக்கப்படும் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவானது 2007 இல் காணாமற் போனோர் தொடர்பான புள்ளி விபரங்களை தெரிவிக்கவில்லை. ஆனால், 2006 இல் 345 பேர் அரசியல் நோக்கங்களுக்காக காணாமற் போயிருப்பதாக அக்குழு தெரிவித்திருக்கிறது, ஆனால், தன்னார்வ தொண்டர் நிறுவனங்கள் வெளியிட்ட அறிக்கையில் காணாமற் போதல் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. உதாரணமாக 880 பேர் காணாமற் போயிருப்பதாக சகவாழ்வு மன்ற அறிக்கையிட்டுள்ளது.
கடத்தல்களில் சம்பந்தப்பட்டோர் தமிழ் பேசும் ஆயுததாரிகளெனவும் இலக்கத் தகடற்ற வெள்ளை வான்களை அவர்கள் பயன்படுத்துகின்றார்களென்றும் சாட்சியங்களும் பாதிக்கப்படக் கூடிய அபாயமிருப்போரும் இனங்காட்டியுள்ளனர்.