கொல்கத்தா அணியின் போட்டிச் சின்னம் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. அந்த அணி இனி கொல்கத்தா `நைற் ரைடர்ஸ்' என்று அழைக்கப்படும்.
இந்திய பிரிமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்தமாதம் 18 ஆம் திகதி தொடங்குகிறது. இதில் 8 அணிகள் களமிறங்குகின்றன. ஒவ்வொரு அணிக்கும் அதன் உரிமையாளர்கள் புதிய பெயர் சூட்டி வருகின்றனர். சென்னை அணிக்கு ` சென்னை சுப்பர் கிங்ஸ்' என்றும் , மும்பை அணிக்கு `மும்பை இண்டியன்ஸ்' என்றும் பெங்களூர் அணிக்கு `பெங்களூர் ராயல் சலஞ்சர்ஸ்' என்றும் ஏற்கனவே பெயர் சூட்டப்பட்டுள்ளன.
இந்த வகையில் கொல்கத்தா அணிக்கு புதிய பெயர் சூட்டப்பட்டு அதன் போட்டிச் சின்னம் `லோகோ ' வெளியீட்டு விழா கொல்கத்தாவில் நேற்று முன்தினம் நடந்தது. இந்த அணிக்கு `கொல்கத்தா நைற் ரைடர்ஸ்' (போர் வீரர்கள்) என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.
கொல்கத்தா அணியின் உரிமையாளர் இந்தி நடிகர் ஷாருக்கான் , கொல்கத்தா அணியின் கப்டன் சௌரவ் கங்குலி, பயிற்சியாளர் ஜோன் புக்கானன் (அவுஸ்திரேலியா ) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தங்கள் அணியின் போட்டிச் சின்னத்தை அறிமுகப்படுத்திய ஷாருக்கான் பின்னர் நிருபர்களிடம் கூறுகையில்:
"நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் விதமாக இந்தப் பெயரை தேர்வு செய்திருக்கிறோம். `செய்து முடிப்போம். போராடி களத்தை ஜெயிப்போம்' இது தான் எங்கள் அணியின் கொள்கைப் பாடலாகும். கங்குலி தலைமையிலான இந்த அணியில் நானும் ஒரு அங்கத்தினராக இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஏராளமான ரசிகர்களைக் கொண்டுள்ள கங்குலி அவர்களுக்கு ஊக்கமளிப்பவராகத் திகழ்கிறார்' என்றார்.
கொல்கத்தா அணி வீரர்கள் அணியும் ஆடையும் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அது கறுப்பு மற்றும் தங்க நிறத்தில் இருந்தது. இதற்கு விளக்கமளித்த ஷாருக்கான் `கறுப்பு கடவுள் காளியின் (கொல்கத்தா தெய்வம்) நிறமாகும். எங்கள் இலக்கு தங்கத்தை (சம்பியன்) வெல்வது ஆகும்' என்றார்.
கொல்கத்தா அணியின் கப்டன் கங்குலி கூறுகையில்;
`கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் 90 ஆயிரம் ரசிகர்களின் முன்னிலையில் விளையாடுவது வித்தியாசமான உணர்வாக இருக்கும். நாங்கள் கொல்கத்தாவிற்கு பெருமை சேர்ப்போம். பயிற்சியாளர் ஜோன் புக்கானனுடன் இணைந்து பணியாற்ற இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது' என்றார்.
கொல்கத்தா அணியில் அவுஸ்திரேலிய கப்டன் ரிக்கி பொண்டிங் , பாகிஸ்தானின் அக்தர் , நியூஸிலாந்தின் மெக்கலம், மேற்கிந்திய கப்டன் கெய்ல், இந்திய இளம்புயல் இஷாந்த் ஷர்மா உள்ளிட்டோர் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.