திருகோணமலையில் பிரபல சட்டத்தரணியும் சமய, சமூக சேவையாளரும் திருகோணமலை கோணேஸ்வராலய பரிபாலன சபையின் தலைவராக மூன்று தசாப்தங்களுக்கும் மேலாகப் பணிபுரிந்து வந்த அமரர் எம்.கே.செல்வராசாவின் தொண்ணூறாம் நாள் நினைவஞ்சலி இன்று வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்படுவதுடன் இன்று வெளியிடப்படும் நினைவு மலரிலிருந்து சில பகுதிகள் இங்கு பிரசுரிக்கப்படுகின்றது.
அகில இலங்கை இந்துமாமன்றம்
இலங்கையில் பாடல்பெற்ற வரலாற்றுப் பெருமைவாய்ந்த திருக்கோணேஸ்வராலய பரிபாலன சபையின் தலைவராக நீண்டகாலம் பணியாற்றி வந்தவரும் சிறந்த சமய பக்தரும் தீவிர சேவையாளருமான மு.கோ.செல்வராசாவின் மறைவு சைவ உலகுக்குப் பேரிழப்பாகும்.
சட்டத்தரணியாகவும் உத்தியோகப்பற்றற்ற நீதிவானாகவும் மட்டுமல்ல சமாதான நீதிவானாகவும் இருந்து சட்டத்துறையிலும் சமூக நலத்துறையிலும் அவர் ஆற்றிவந்த சேவைகள் சிறப்பானவை.
அகில இலங்கை இந்து மாமன்றத்தில் அங்கத்துவ சங்கமான திருக்கோணேஸ்வராலய பரிபாலன சபையின் பிரதிநிதியாக மாமன்றத்தின் முகாமைப் பேரவையில் நீண்டகாலமாக இணைந்திருந்து மாமன்ற வளர்ச்சிக்குப் பெரிதும் துணை நின்றவர்.
திருமலை பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான பிரதம குரு வேதாகமமாமணி பிரம்மஷ்ரீ சோ.இரவிச்சந்திரக்குருக்கள்.
அமரர் மு.கோ.செல்வராசாவின் மிகவும் மகத்தானதும் உயர்ந்ததுமான பதவிகளிலிருந்து மக்களுக்கு அன்னார் ஆற்றிய சேவைமிகவும் பாராட்டத்தக்கவை. யார் தங்கள் தேவைகளுக்குச் சென்றாலும் அது பற்றி வேண்டியவர்களுடன் தொடர்பு கொண்டு அதனைப் பூர்த்தி செய்து கொடுப்பதில் அன்னார் ஏனையோருக்கு முன்னோடியாக விளங்கினார்.
திருக்கோணேஸ்வராலய பரிபாலன சபையின் தலைவராக இருந்து, ஆலயத்தை மிகவும் கட்டுக்கோப்பாக பரிபாலித்து வந்தார். போக்குவரத்து இல்லாத நேரங்களில் கூட குருக்களை அழைத்துச் சென்று ஆலயத்தில் பூஜைவழிபாடுகளைச் செய்வித்தார்.
சைவப் பேரறிஞர் ஷ்ரீலஷ்ரீ மு.சுந்தரலிங்க தேசிகர்
வன்செயல்காலங்களில் திருக்கோணேஸ்வரப் பெருமானுக்கு பூஜை வழிபாடுகள் தடைப்படாமல் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்தவர் அமரர் மு.கோ.செல்வராசா. கோணேஸ்வரப்பெருமானுக்கு காலப்பூஜை நடைபெறுவதற்காக குமாரசாமி ஐயாவுடன் தானும் சென்று சிரமங்களைப் பாராது சுவாமி கைங்கரியத்தை சிறப்பாக நடத்தி வைத்த பெருமைக் குரியவர் அமரர் மு.கோ.செல்வராசா, திருகோணமலையில் அனைத்து ஆலயங்களிலும் நடைபெறும் கொடியேற்றம், தேர்த்திருவிழா, கும்பாபிஷேகங்கள் மற்றம் நிகழ்வுகளில் முன்னின்று உதவியவர்.
இலங்கை இந்து சமயப் பேரவையின் தலைமைச் செயலாளர் செ.சிவபாதசுந்தரம்
திருக்கோணேஸ்வராலய பரிபாலன சபையின் தலைவராக நாற்பது வருடங்களுக்கு மேலாக, நிரைகழற் பெருமானின் அருட் தொண்டராகப் பணியாற்றியவர் அமரர் மு.கோ.செல்வராசா. சட்டத்தரணியாக இப்பெரியார் தனது ஆளுமையாலும் ஆற்றலாலும் அனுபவத்தாலும் திருக்கோணேஸ்வரத்தின் தெய்வ சான்னித்தயம் என்றும் சிறப்பாக மிளிர வேண்டும் என்ற நோக்கில் பலநெருக்கடியான சந்தர்ப்பங்களில் எல்லாம் துணிந்து செயலாற்றியவர். அன்னாரின் மறைவு திருகோணமலை மாவட்டத்துக்கு பேரிழப்பாகும்.
நீ.கந்தசாமி,செயலாளர், மனித உரிமைகளுக்கும்
அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஆளுநர் சபை உறுப்பினர்,
அமரர் செல்வராசா வெறுமனே ஒரு சட்டத்தரணியல்லர்; திருமலை மாவட்டத்தில் பல மட்டங்களில் மக்களுக்காகச் சேவையாற்றியவர். சட்டத்துறையில் அவர் ஒரு மனிதாபிமானம் கொண்ட சட்டத்தரணியும், நீதித்துறையில் ஒரு நீதியான பெருமகனாகவும் சமயத்துறையில் ஒரு பக்திநெறி கொண்ட தொண்டனாகவும் பல தசாப்த காலமாக திருமலை மக்கள் மனதில் உறுதியான இடத்தைப் பெற்றிருந்தார். பதவிகள் அவரைத் தேடிச் சென்றன. அவர் பதவிகளைத் தேடி எப்பொழுதுமே செல்லவில்லை. அவர் தாம் வகித்த பதவிகளை நேர்மையான அர்ப்பணிப்பின் மூலம் அலங்கரித்துக் கொண்டார். மனித உரிமைகளைப் பாதுகாத்து மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னாலியன்ற சேவைகளை ஆற்றினார். அவர் மனித உரிமைகளுக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஸ்தாபக உறுப்பினர், அதன் ஆளுநர் சபை உறுப்பினர் ஆகவும் பணிபுரிந்தார். அன்னாரின் மறைவு மனித உரிமைகளுக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்திற்கு பேரிழப்பாகும்.
அன்புமணி, மட்டக்களப்பு
அவர் ஒரு அற்புதமான மனிதர். ஆளுமை, அதே சமயம் அடக்கம், ஆற்றல் அமைதி கொண்டவர். அதேசமயம் அமைதி, சட்டத்தரணி - ஆனால் சமூகத்தொடர் ஆலய அறங்காவலர், ஆழமான பக்தி திருமலையில் அவர் ஒரு பெருமகன். இளைஞர் முதல் முதியோர் வரை அவரை மதித்துப் போற்றினர். கோணேஸ்வரப் பெருமான் அவரை சரியான பாதையில் வழிநடத்தினார் என்றும் அவர் நம்மோடு இருப்பதாக எண்ணிக்கொள்வோம். எவர்வழிகாட்டலில் நாம் ஏறு நடைபோடுவோம்.
திருமலை சட்டத்தரணிகள் சங்கம்
சட்டத்தினை உரத்து முழங்கிய குரல் இப்போது மௌனித்து விட்டது. சிக்கல்களை அவிழ்க்கும் வழக்கறிஞர் பதில் நீதிவானாய் உயர்ந்தவர். மொத்தத்தில் மக்கள் மனதில் அமர்ந்தவர். எம் சங்கம் உன்னைத் தலைவனாக்கிப் பெருமைப்பட்டது. திருக்கோணேஸ்வரம் இன்று தலைமை இழந்து தவிக்கிறது. மூத்த சட்டத்தரணியே முழுமையாய் வாழ்ந்தவரே, தொழுகின்றோம் தங்களை இருகரம் கூப்பி.